பகுதி - 653

நம்மை வினைகளிலிருந்து காப்பாற்றும்
பகுதி - 653

பதச் சேதம்

சொற் பொருள்

செயசெய அருணாத்திரிசிவய
ம செயசெயஅருணாத்திரி
மசிவயந செயசெய
அருணாத்திரிநமசிவய திருமூலா

 

அருணாத்திரி: அருண அத்திரி, அருணாசலம்—அருணாசலா (விளி);

செயசெய அருணாத்திரியநமசிவ செயசெயஅருணாத்திரி வயநமசி
செயசெய அருணாத் திரிசிவய
நமஸ்த்து என மாறி

 

செயசெய அருணாத் திரிதனின் விழி
வைத்து அரகர சரணாத்திரி என
உருகி செயசெய குரு பாக்கியம்என
மருவி சுடர் தாளை

சரணாத்திரி: சரண அத்திரி, திருவடியாகிய மலை; குரு பாக்கியம்: குரு அருளியதாகிய பாக்கியம்;

சிவசிவ சரணாத்திரிசெயசெய என
சரண்மிசை தொழுது ஏத்தியசுவை
பெருக திருவடிசிவ வாக்கிய
கடல்அமுதை குடியேனோ

சரண்மிசை: பாதங்களில்;

செயசெய சரணாத் திரிஎன
முநிவர் கணம் இதுவினை காத்திடும்
எனமருவ செட முடி மலைபோற்று அவுணர்கள்அவிய சுடும் வேலா

செட(ம்): உடல்; முடி: தலை; மலை: கிரெளஞ்சமும் குலபர்வதங்கள் ஏழும்; அவுணர்கள்: அரக்கர்கள்; அவிய: அழிய;

திரு முடி அடி பார்த்திடும்என
இருவர்க்கு அடிதலை தெரியாப்படி
நிணஅருண சிவ சுடர் சிகிநாட்டவன்
இரு செவியில்புகல்வோனே

இருவர்க்கு: திருமாலுக்கும் பிரமனுக்கும்; நிண: நின்ற; அருண: சிவந்த; சிகி: அக்கினி; நாட்டவன்: கண்ணை உடையவன் (சிவன்);

செயசெய சரணாத் திரிஎனும்
அடியெற்கு இருவினை
பொடியாக்கியசுடர் வெளியில்
திருநடம் இது பார்த்திடும்
எனமகிழ் பொன் குரு நாதா

 

திகழ் கிளி மொழி பால்சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புதுமணம் மருவி சிவகிரிஅருணாத்திரி தலம் மகிழ்பொன் பெருமாளே.

பொன்: அழகிய;

செயசெய அருணாத்திரி சிவய நம... ஜய ஜய அருணாசலா! சிவயநம!
 
செயசெய அருணாத்திரி மசிவயந... ஜயஜய  அருணாசலா! மசிவயந!   
 
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா... ஜயஜய  அருணாசலா!  நமசிவய!  (அனைத்துக்கும்) மூலமாக உள்ள பொருளே! 
 
செயசெய அருணாத்திரி யநமசிவ... ஜயஜய  அருணாசலா! யநமசிவ!  
 
 செயசெய அருணாத்திரி வயநமசி... ஜயஜய  அருணாசலா!  வயநமசி! 
 
செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி... ஜயஜய  அருணாசலா!  சிவயநமோஸ்து என்றெல்லாம் மாறி மாறிச் ஜபம் செய்து;
 
செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து... ஜய ஜய என்று ஓதி; கண்ணிலே அருணாசலத்தை வைத்து;
 
அர கர சரணாத்திரி என உருகி... ஹர ஹர  திருவடி மலையே! (சிவ மலையே) என்று சொல்லிச் சொல்லி மனமுருகி;
 
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை... ஜய ஜய!  (இவையெல்லாம்) என் குரு அளித்த பாக்கியம் என்று உள்ளத்தைப் பொருத்தி; பேரொளியாக விளங்குகின்ற திருவடிகளை,
 
சிவசிவ சரணாத் திரிசெய செயென... சிவசிவ திருவடி மலையே ஜய ஜய எனப் புகழ்ந்து;   
 
சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக... திருவடிகளின் மீது விழுந்து தொழுது போற்றியதன் சுவை பெருகிவர,
 
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ... (அந்தத்) திருவடியுடைய சிவவாக்கியமாகிய அமுதக் கடலைப் பருகுவேனோ.  (பருக அருள்புரிய வேண்டும்.)
 
 
செயசெய சரணாத் திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ... ஜய ஜய திருவடி மலையே என்று முனிவர் கூட்டங்கள், ‘இதுவே நம்மை வினைகளிலிருந்து காப்பாற்றும்’ என்று சுற்றிலும் சூழ்ந்துகொள்ள;
 
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா... தங்கள் உடலையும் தலையையும் (கிரெளஞ்சமும் ஏழு குல) பர்வதங்களும் காப்பதாக நினைத்துக் கொண்டிருந்த அசுரகள் மடிந்து போகும்படியாகச் சுட்டு எரித்த வேலனே!
 
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண அருண சிவ சுடர்... ‘திருமுடியையும் அடியையும் பார்த்து வாருங்கள்’ என்று சொல்லப்பட்ட திருமாலுக்கும் பிரமனுக்கும் அடியையும் முடியையும் தெரிந்துகொள்ள முடியாதபடி நின்ற சிவச்சுடரான,
 
சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே... அக்கினியை (மூன்றாவது) கண்ணாகக் கொண்ட சிவபிரானுடைய இரண்டு செவிகளிலும் (பிரணவப் பொருளை) உபதேசித்தவனே!
 
செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில்.... ஜய ஜய திருவடி மலையே என்று போற்றுகின்ற அடியேனுக்கு (என்னுடைய) இருவினைகளையும் சுட்டெரித்த ஒளிநிறைந்த பரவெளியில்,
 
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா... ‘இந்தத் திருநடனத்தைப் பார்’ என்று (ஆடிக் காட்டுகின்ற) அழகிய குருநாதனே!
 
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குற மகள் முலை மேல் புது மணம் மருவி... கிளியைப் போன்ற மழலைமொழியையும் பாலைப்போன்ற சுவையைக் கொண்ட இதழின் ஊறலை உடைய அமுதமாகிய குறமகளான வள்ளியின் மார்பின் மீது வீசுகின்ற புதிய மணத்தை முகர்ந்து,
 
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே.... சிவமலை எனப்படும் அண்ணாமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற அழகிய பெருமாளே!
 
சுருக்க உரை:
 
‘ஜய ஜய திருவடி மலையே’ என்று கோஷித்தபடி ‘இதுவே நம்முடைய வினைகளைப் போக்கி நம்மைக் காத்திடும்’ என்று முனிவர் கூட்டங்கள் உன்னுடைய திருவடிகளைச் சூழ்ந்து பொருந்த; தங்களுடைய உடலையும் முடியையும் கிரெளஞ்சமும் குலபர்வதங்கள் ஏழும் காப்பதாக நினைத்திருந்த அசுரர்களைச் சுட்டுப் பொசுக்கிய வேலனே!  ‘என்னுடைய அடியையும் முடியையும் பார்த்து வாருங்கள்’ என்று கூறப்பட்ட திருமாலுக்கும் பிரமனுக்கும் அடியும் முடியும் தெரியாதபடி நின்ற செந்நிறச் சுடரும்; நெற்றியிலே அக்கினியை விழியாகக் கொண்டவருமான சிவனாருடைய செவிகளிலே பிரணவப் பொருளை உபதேசித்தவனே!  ஜய ஜய திருவடி மலையே என்று துதிக்கின்ற அடியேனுக்கு ‘உன்னுடைய இருவினைகளையும் ஒழித்ததான இந்தப் பரவெளியில் என்னுடைய திருநடனத்தைப் பார்’ என்று ஆடிக் காட்டுகின்ற குருநாதனே!  கிளியைப் போன்ற மழலை மொழியையும் பாலைப் போன்ற சுவையை உடைய அதரபானத்தையும் உடைய குறமகளான வள்ளியின் திருமார்பில் வீசுகின்ற புதுமணத்தை முகர்கின்றவனே!  சிவமலையான அருணாசலத்தில் மகிழ்வோடு வீற்றிருக்கின்ற பெருமாளே!
 
ஜய ஜயா அருணாசலா!  சிவயநம*! மசிவயந!  நமசிவய!  மூலப் பொருளே யநமசிவ*!  வயநமசி*! சிவய நமோஸ்து! என்று மாறி மாறிச் செபித்து ‘ஜய ஜய’ என்று ஓதி அண்ணாமலையில் மனக்கண்ணை நாட்டி; ‘ஹர ஹர திருவடி மலையே!’ என்று தியானித்து உள்ளம் உருகி; ‘இந்த மந்திரம் எங்கள் குருநாதர் அருளிய பாக்கியம்’ எனக்கொண்டு, ஒளிவீசுகின்ற உன்னுடைய திருவடிகளைத் தொழுது போற்றிய இன்பம் பெருக, சிவமந்திரத்தால் பெருகுகின்ற அமுதக் கடலை நான் பருகி மகிழேனோ!  (பருகி மகிழும்படியாக அருளவேண்டும்.)
 
*சிவயநம, மசிவயந, நமசிவய, யநமசிவ, வயநமசி, சிவயநம' என்று சுழல்வது பஞ்சாட்சர சக்கரம் என்பதை நேற்றைய தவணையிலும் கூறியிருந்தோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com