பகுதி - 655

அற்பமான சில சொற்களைக் கற்றுக்கொண்டு
பகுதி - 655

பதச் சேதம்

சொற் பொருள்

நிகமம் எனில் ஒன்றும்அற்று 
நாள்தொறு(ம்)நெருடு கவி 
கொண்டுவித்தை பேசிய
நிழலர்சிறு புன் சொல் கற்று 
வீறுஉள பெயர் கூறா

 

நிகமம்: வேதம்; நிழலர்: போலி(க் கவிகள்); நெருடுகவி: (பழைய கவிதைகளை) மாற்றிப் போட்ட கவிதை; வீறுள: ஆடம்பரமான; பெயர்கூறா: (பட்டப்) பெயர்களைக் கூறிக்கொண்டு;

நெளிய முது தண்டுசத்ர(ம்) சாமர(ம்) 
நிபிடம்இட வந்து கைக்கு 
மோதிர நெடுகி அதி குண்டலப்ரதாபம் 
உடையோராய்

 

நெளிய: நெளிபும்படியாக (தூக்குவோருடைய முதுகு நெளியும்படியாக); முதுதண்டு: கனமான பல்லக்கு; சத்ரம்: குடை; நிபிடம் இட: நெருங்கும்படியாக;

முகம் ஒரு சம்பு மிக்கநூல்களும்
முதுமொழியும் வந்துஇருக்குமோ எனில்
முடிவில் அவை ஒன்றும்அற்று 
வேறொரு நிறமாகி

 

சம்பு: செய்யுளும் வசனமும் கலந்த நடை; முதுமொழி: திருக்குறள் முதலான பழைய நூல்கள்; வேறொரு நிறமாகி: நிறமற்று வெளுத்துப் போய்;

முறியும் அவர் தங்கள்வித்தை 
தான் இது முடியவு(ம்) உனை 
நின்றுபத்தியால் மிக மொழியும்வளர் 
செம் சொல்வர்க்கமே வரஅருள்வாயே

 

முறியும்: (மனம்) குலைந்து போகும்;

திகுதிகு என மண்ட விட்டதீ 
ஒரு செழியன் உடல்சென்று பற்றி 
ஆருகர் திகையின் அமண் 
வந்துவிட்ட போதினும்அமையாது

 

செழியன்: பாண்டியன்; ஆருகர்: சமண குருமார்கள்; திகை: திசை; அமண்: சமணர்கள்; அமையாது: தணியாது;

சிறிய கர பங்கயத்து நீறுஒரு
தினை அளவுசென்று பட்ட 
போதினில் தெளிய இனி 
வென்றிவிட்ட மோழைகள் கழுஏற

 

நீறு: திருநீறு; வென்றி: வெற்றி; மோழைகள்: அறிவிலிகள்;

மகிதலம் அணைந்த அத்தயோனியை
வரைவு அறமணந்து நித்த 
நீடு அருள் வகை தனை 
அகன்றிஇருக்கும் மூடனை மலரூபம்

 

மகிதலம்: பூமி(யில்); அத்த: அத்தனே—தலைவனே; வரைவுஅற: கணக்கில்லாமல்; மணந்து: சேர்ந்து;

வர வர மனம் திகைத்தபாவியை
வழி அடிமைகொண்டு மிக்க 
மாதவர் வளர் பழநி வந்த 
கொற்றவேலவ பெருமாளே.

 

 

நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி கொண்டு வித்தைபேசிய... வேதப் பொருள் எதுவும் தெரியாமல், எப்போதும் (பழைய கவிதைகளை) மாற்றிப் போட்டுப் பாடி* வித்தைகாட்டுகின்ற,

(* ‘திருடி நெருடிக் கவிபாடி’ என்று ‘சொரியும் முகிலை என்று தொடங்கும் பாடலில் குறிப்பதைக் காண்க.  நம் தவணை எண் 311.)

நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா... போலிக் கவிஞர்கள் அற்பமான சில சொற்களைக் கற்றுக்கொண்டும்; தமக்கு ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டும்;

நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து...(தூக்குபவர்களுடைய முதுகு) முறிந்துபோகும்படி கனக்கின்ன பல்லக்கு, குடை, சாமரம் ஆகியவற்றை அதிகமாகப் (நெருங்கியிருக்குமாறு—நிபிடமிட--பரிசிலாகப்) பெற்று உலாவந்து;

கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும் உடையோராய்... கையிலே மோதிரமும்; காதிலே நீண்டு தொங்குகின்ற குண்டலங்களை அணிந்த சிறப்பை உடையவர்களாக;

முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில்... அவர்களுடைய முகத்தைப் பார்த்தால் கவிதையும் வசனமும் கலந்த நடையை உடைய நூல்களுக்கும்; திருக்குறள் போன்ற பழைய நூல்களுக்கும் விளக்கம் தரமுடிந்தவர்களைப்போல (காட்சியளிக்க);

முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு(ம்)... இறுதில் அவை ஒன்றுமே இல்லாமல் போவதால் வெட்கத்தால் முகம் சிவந்துபோகின்ற அவர்கள் கற்ற வித்தை இவ்வளவுதான் என்று தெரிந்து போய்விடும்.  ஆகவே,

உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே... உன்னை எப்போதும் பக்தியால் துதிக்கும்படியாக செழுமையான சொற்கள் மேலும்மேலும் பெருகும்படியாக அருளவேண்டும்.

திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி... திகுதிகுவென்று கொழுந்துவிட்டெரியும் தீயானது கூன் பாண்டியனை (ஜுரமாகச்) சென்று பற்றிக்கொள்ள;

ஆருகர் திகையின் அமண் வந்து விட்ட போதினும் அமையாது... பல திசைகளிலிருந்து வந்த சமணக்கருக்கள் மிகவும் முயன்றாலு அது தணியாமல் இருக்கையில்;

சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்ட போதினில் தெளிய...

(திருஞான சம்பந்தராக வந்த) உன்னுடைய சிறிய தாமரைக் கரத்திலிருந்து திருநீறு ஒரு தினையளவு—கூன்பாண்டியனின்மேல்—பட்டதுமே அச்சுரம் தணிந்துபோக;

இனி வென்றி விட்ட மோழைகள் கழு ஏற மகிதலம் அணைந்த அத்த... அதன்பின்னர் (வாதத்தில்) தோற்றுப் போன அறிவிலிகள் கழுவில் ஏறும்படியாக பூமியில் அவதரித்த தலைவனே!

யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் வகை தனை அகன்றிருக்கும் மூடனை... கணக்கற்ற முறை பெண்களைக் கலந்து; என்றென்றும் உன்னுடைய அருளின் திறங்களை உணராதபடி விலகியிருக்கின்ற மூடனான என்னுடைய,

மல ரூபம் வர வர மனம் திகைத்த பாவியை வழி அடிமை கொண்டு... (ஆணவ, கன்ம, மாயா) மலரூபங்கள் இருக்க இருக்கப் பெருகுவதால் மனம் கலங்குகின்ற பாவியாகிய என்னை வழிவழி அடிமையாக ஆட்கொண்டு;

மிக்க மாதவர் வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே.... சிறந்த தபோமுனிவர்கள் வாழ்கின்ற பழனிமலையில் வந்து வீற்றிருக்கின்ற வேலவப் பெருமாளே!


சுருக்க உரை:

திகுதிகுவென்று கொழுந்துவிட்டெரியும் தீ சுரநோயாகச் சென்று கூன்பாண்டியனைப் பற்றிக்கொள்ள; பலதிசைகளிலிருந்தும் வந்த சமண குருமார்கள் எவ்வளவோ முயன்றும் அது சற்றும் தணியாமல் இருக்க; திருஞான சம்பந்தராக அவதரித்த உன் சிறிய தாமரைக் கரத்தால் கொடுத்த ஒரு தினையளவு திருறு அவன் உடலிலே பட்டதுமே அவனுடைய நோய் தணியும்படியாகவும்; அதன்பின்னர் வாதிலே தோற்ற அந்த அறிவிலிகள் கழுவேறும்படியாகவும் இப்புவியிலே அவதரித்த தலைவனே!  எப்போதும் பெண்களைக் கலந்தபடி உன்னுடைய பேரருளின் திறங்களைச் சற்றும் உணராமல் விலகியிருக்கின்ற மூடனான என்னுடைய (ஆணவ, கன்ம, மாயா) மலங்கள் பெருகுவதால் மனம் கலங்குகின்ற பாவியாகிய என்னை வழிவழி அடிமையாக ஆட்கொண்டு, சிறந்த தபோமுனிவர்கள் வாழ்கின்ற பழனியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வேதங்களின் பொருளைச் சற்றும் அறியாமல்; பழைய கவிதைகளை மாற்றிப்போட்டுக் கவிபாடி வித்தைகாட்டுகின்ற போலிக் கவிகள், அற்பமான சொற்களைக் கற்றுக் கொண்டும்; ஆடம்பரமான பட்டப்பெயர்களை வைத்துக்கொண்டும்; (தூக்குபவர்களுடைய முதுகு) நெறிந்துபோகும் அளவுக்குக் கனக்கின்ற பல்லக்கை குடையும் சாமரமும் நெருங்கும்படியாக உலவுவார்கள்.  அவர்களுடைய முகத்தைப் பார்த்தால், உரைநடையும் செய்யுளும் கலந்த நடையையுடைய நூல்களுக்கும் திருக்குறளைப் போன்ற பழைய நூல்களுக்கும் பொருள் சொல்லும் திறமுடையவர்களைப் போலத் தோன்றினாலும் விரைவிலேயே அவர்களுடைய சாயம் வெளுத்து வெட்கத்தால் முகம் சிவந்துபோய் நிற்கின்ற நிலைதானே முடிவில் ஏற்படுகிறது.  (ஆகவே இந்தப் போலிநிலை எனக்கு வேண்டாம்.)  என்றென்றும் பக்தியோடு உன்னைப் பாடுவதற்கான செழுமையான சொற்கள் என் மனத்தில் ஊற்றெடுக்கும்படியாக அருள்வாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com