பகுதி - 657

திருப்பாதங்களுக்குத் தொண்டு செய்யுமாறு
பகுதி - 657

பதச் சேதம்

சொற் பொருள்

தடக்கை பங்கயம்கொடைக்கு 
கொண்டல்தண் தமிழ்க்கு 
தஞ்சம்என்று  உலகோரை

 

தடக்கை: பெரிய கை; பங்கயம்: தாமரை; கொண்டல்:  மழை மேகம்;

தவித்து சென்று இரந்துஉளத்தில் 
புண் படும் தளர்ச்சி 
பம்பரம் தனைஊசல்

 

தளர்ச்சி பம்பரம்: (அங்குமிங்குமாக அலைந்து சுழல்வதால்) தளர்ந்துபோகின்ற நான்; ஊசல்: ஊசிப்போன;

கடத்தை துன்ப மண்சடத்தை 
துஞ்சிடும் கலத்தை பஞ்ச 
இந்த்ரியவாழ்வை

 

கடத்தை: பாண்டத்தை, உடலை; சடத்தை: உடலை; துஞ்சிடும்: இறக்கப் போகின்ற, அழியக்கூடிய; கலத்தை: பாண்டத்தை, உடலை; பஞ்ச இந்திரிய வாழ்வை: ஐம்புலன்களுக்கு இருப்பிடத்தை;

கணத்தில் சென்று இடம்திருத்தி  
தண்டை அம்
கழற்கு தொண்டுகொண்டு 
அருள்வாயே

 

இடம் திருத்தி: (இதயமாகின்ற) இடத்தைத் திருத்தி, தூய்மையாக்கி;

படைக்க பங்கயன்துடைக்க 
சங்கரன் புரக்ககஞ்சை 
மன் பணியாக

 

பங்கயன்: பிரமன்; துடைக்க: அழிக்க; புரக்க: காக்க; கஞ்சை: தாமரையாள் (கஞ்சம்: தாமரை); கஞ்சைமன்: திருமகள் துணைவ(னான திருமால்); பணியாக: பணியிலே;

பணித்து தம் பயம்தணித்து 
சந்ததம் பரத்தைகொண்டிடும் 
தனி வேலா

 

பணித்து: நியமித்து; பரத்தை: (பரம்+அத்து+ஐ) மேலான பொருளை; தனி வேலா: ஒப்பற்ற வேலா (தனி, ஒரு என்ற சொற்களுக்கே ஒப்பற்ற என்ற பொருள் உண்டு);

குடக்கு தென் பரம்பொருப்பில் 
தங்கும் அம்    குலத்தில் கங்கை 
தன்சிறியோனே

 

குடக்கு: மேற்கே (மதுரைக்கு மேற்கே); தென்பரம் பொருப்பு: தென் திருப்பரங்குன்ற மலை; கங்கைதன் சிறியோனே: கங்கையின் மகனே (காங்கேயனே);

குற பொன் கொம்பைமுன் 
புனத்தில் செம் கரம் குவித்து 
கும்பிடும்பெருமாளே.

 

குறப்பொன் கொம்பு: குறக்குலத்தைச் சேர்ந்த அழகிய பூங்கொம்பைப் போன்ற; முன்: முன்னாளில்; புனத்தில்: தினைப்புனத்தில்;

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல் தண்டமிழ்க்குத் தஞ்சமென்று... தாமரைபோன்ற பெரும் கைகளை உடையவனே!  கொடையிலே மழைமேகத்தைப் போன்றவனே!  தமிழறிஞர்களுக்குப் புகலிடமே! (என்றெல்லாம்);
 
உலகோரைத் தவித்துச் சென்றிரந்து உளத்திற் புண்படும் தளர்ச்சிப் பம்பரந்தனை... உலகத்தவரிடம் பரிதவித்துச் சென்று யாசகம் கேட்டும்; மனம் புண்ணாகியும்; தளர்ச்சியடைந்தும் பம்பரமாகச் சுழல்கின்றவனை;
 
ஊசற் கடத்தை துன்பமண் சடத்தை துஞ்சிடுங் கலத்தை பஞ்சஇந்த்ரிய வாழ்வை... ஊசிப்போகின்ற (இறப்புக்குப் பின்னால் கெட்டுப் போகக்கூடிய) சட்டி(யான இந்த உடலை); துன்பம் என்ற மண்ணால் செய்யப்பட்ட சட்டி(யான இந்த உடலை); அழிந்துபோகின்ற பாண்ட(மான இந்த உடலை); ஐம்புலன்களால் ஆளப்படுகின்ற (இந்த உடலை);
 
கணத்திற் சென்று இடம் திருத்தி தண்டையங் கழற்கு தொண்டுகொண் டருள்வாயே... நொடிப்போதிலே வந்து என் இதயம் என்னும் இடத்தைத் திருத்தமாக்கி; வீரக்கழல்களை அணிந்திருக்கின்ற உன்னுடைய திருப்பாதங்களுக்குத் தொண்டு செய்யுமாறு என்னை ஏற்றருள வேண்டும். 
 
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் புரக்கக் கஞ்சைமன்... படைப்புத் தொழிலுக்கென்று பிரமனையும்; அழிக்கும் தொழிலுக்கென்று சங்கரனையும்; காக்கும் தொழிலுக்கென்று திருமகள் கேள்வனான திருமாலையும்;  
 
பணியாகப் பணித்து தம்பயந் தணித்து சந்ததம் பரத்தைக் கொண்டிடும் தனிவேலா... பணியிலே நியமித்து; அனைவருடைய பயத்தையும் போக்கி; எப்போதும் மேலான நிலையில் நிற்கின்ற ஒப்பற்ற வேலனே!
 
குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும் அம்குலத்திற் கங்கைதன் சிறியோனே...  (மதுரைக்கு) மேற்கேயுள்ள திருப்பரங்குன்றத்தில் தங்குபவனே!  உயர்ந்த நதியான கங்கையின் மகனே!
 
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே.... குறக்குலத்துப் பூங்கொம்பான வள்ளியை முன்னொரு நாளில் (அவரிருக்கும்) தினைப்புனத்துக்குச் சென்று சிவந்த கரங்களால் கும்பிட்ட பெருமாளே! 
 
 
சுருக்க உரை:
 
படைப்பதற்கென்று பிரமனையும்; காப்பதற்கென்று திருமகள் நாயகனான திருமாலையும்; அழிப்பதற்கென்று சங்கரனையும் பணியில் நியமித்து; அனைவருடைய பயத்தையும் போக்கி; மேலான நிலையில் நிற்கின்ற வேலனே!  திருப்பரங்குன்றத்தில் உறைபவனே!  கங்கையின் புதல்வனே! குறப்பெண்ணான வள்ளியை அவளிருந்த தினைப்புனத்தில் சிவந்த கரங்களைக் கூப்பி வணங்கிய பெருமாளே!
 
‘உம்முடைய கரங்கள் தாமரையை ஒத்தவை; கொடையில் நீர் மழைமேகத்தை ஒத்தவர்; தமிழறிஞர்களுக்கு நீரே புகலிடம்’ என்று உலகத்தாரிடம்போய் நின்று யாசித்து, மனம்புண்பட்டுத் தளர்ந்துபோய் நிலைகெட்டுப்போகின்ற, அழிகின்ற, ஐம்புலன்களால் ஆட்டுவிக்கப்படுகின்ற இந்த உடலைச் சுமந்து திரிகின்ற என்னுடைய இதயத்தில் வந்து வீற்றிருந்து, அதை ஒருநொடிப்போதில் திருத்தமுறச் செய்து, தண்டையணிந்த உன் திருப்பாதத்துக்குத் தொண்டாற்றும்படியான பேற்றைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com