பகுதி - 795

அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது...
பகுதி - 795

பதச் சேதம்

சொற் பொருள்

அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதிபார

 

அருவம் இடை: இடைக்கு உருவமே இல்லையோ எனும்படி; துவர் இதழ்: பவளம்போன்ற இதழ்; ம்ருகமத(ம்): கஸ்தூரி; அளகம்: கூந்தல்;

அசல முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு அணையும் அழகிய கலவியும் அலம் அலம் உலகோரை

 

அசல(ம்): மலை; புளகிதம் எழ: மயிர்க்கூச்செறிய; அமளியில் அமளிபட: படுக்கையில் அமர்க்களமாக; அவசமொடு: வசமிழந்து; அலம் அலம்: போதும் போதும்;

தருவை நிகரிடு புலமையும் அலம் அலம் உருவும் இளமையும் அலம் அலம் விபரித சமைய கலைகளும் அலம் அலம் அலமரும் வினை வாழ்வும்

 

தருவை: (கற்பக) விருட்சத்தை; நிகரிடு: நிகர் என்று உருவகிக்கின்ற; உருவும் இளமையும்: அழகும் இளமையும்; விபரித: விபரீத, தமக்குள் மாறுபடுகின்ற; சமைய கலைகளும்: சமய நூல்களும்; அலமரும்: மனம் சுழலும்;

சலிய லிபி என சனனம் அலம் அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே

 

சலிய லிபி: நீர்மேல் எழுத்து; தமர: ஒலிக்கின்ற; பரிபுர சரணமும்: சிலம்பணிந்த பாதங்களையும்;

உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இரு குதையும் முடி தமனிய தநு உடன் உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும்

 

உருவு கரியது ஓர்: உருவத்தில் கரிய நிறத்திலுள்ள (திருமாலை); பணிபதி: பாம்பரசன்—வாசுகி; இரு குதையும்: (வில்லின்) இரண்டு முனைகளையும்; தமனிய: பொன் (மலை—மேருவை); தநு: வில்லாக; உருளை: சக்கரங்கள்; இருசுடர்: சூரிய சந்திரர்கள்; வலவனும்: தேர்ச் சாரதியாக; அயன்: பிரமன்;

உறுதிபடு சுர ரதமிசை அடி இட நெறு நெறு என முறிதலும் நிலை பெறு தவம் உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒரு கோடி

 

சுர ரதம்: தேவர்களே தேராக; அடியிட: ஏறி அமர்ந்ததும்; ஒருவரும் இருவரும்: மூவர்—திரிபுரம் அழிந்தபோது பிழைத்த மூவர்;

தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடி படுவன புகைவன திகு திகு என எரிவன அனல் நகையொடு முனிவார் தம்

 

தெருவு நகரியும்: (திரிபுரத்திலிருந்த) தெருக்களும் ஊர்களும்; நிசிசரர்: அரக்கர்கள்; முனிவார்தம்: கோபிப்பவரான (சிவபெருமானுடைய);

சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே.

 

வனசரர்: வேடர்களுடைய; அருணையில்: திருவண்ணாமலையில்; எழுநிலை திகழ்வன: ஏழு நிலைகளைக் கொண்டு திகழ்கின்ற; சிகரி: மலை—இங்கே கோபுரம்; கலபி: மயில்;

அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதிபார...உருவமற்றதோ என்று எண்ணத்தோன்றும் இடையை உடைய பெண்களுடைய பவளம்போன்ற இதழ்களில் பெருகுகின்ற அமுதத்தைப் பருகியும்; மனம் உருகியும்; கஸ்தூரிக் கலவையை அணிந்த கூந்தல் அலைபாயவும்; அணிந்திருக்கின்ற ஆடை விலகவும்; மிகவும் கனமான,

அசல முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு அணையும் அழகிய கலவியும் அலம் அலம்... மலையை ஒத்த மார்பிலே புளகம் எழவும்; படுக்கையிலே கோலாகலமாகக் கிடந்தும்; எப்போதும் தன் வசத்தை இழந்தும் ஒன்று கூடுகின்ற கலவி மயக்கம் போதும் போதும்;

உலகோரைத் தருவை நிகரிடு புலமையும் அலம் அலம் உருவும் இளமையும் அலம் அலம்... உலகத்தவர்களைக் ‘கற்பக விருட்சத்துக்கு ஒப்பானவர்களே’ என் உருவகிக்கின்ற புலமைத் திறமும் போதும் போதும்; நல்ல அழகும் இளமையும் போதும் போதும்;

விபரித சமய கலைகளும் அலம் அலம் அலமரும் வினை வாழ்வும் சலில லிபி அ(ன்)ன சனனம் அலம் அலம்... தமக்குள் மாறுபடுகின்ற சமய நூல்களில் பயிற்சியும் போதும் போதும்; மனத்தை அலைக்கழிப்பதும் வினைக்கு வசப்பட்டதுமான இந்த வாழ்வும்; நீர்மேல் எழுத்தைப் போன்ற இந்தப் பிறவித் தொடரும் போதும் போதும்;

இனி உன் அடியரொடு ஒரு வழிபட இரு தமர பரிபுர சரணமு(ம்) மவுனமும் அருள்வாயே... இனி எப்போதும உன் அடியாரோடு நான் ஒருவழிப்பட்டு நிற்பதற்கு ஒலியை எழுப்புகின்ற சிலம்புகளை அணிந்த உன் திருவடிகளையும் மௌன நிலையையும் அளித்தருளவேண்டும்.

இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒரு வழிப்பட்டு (உன்னுடைய) இரண்டு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மவுன உபதேசத்தையும் அருள்வாயாக. 

உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன்... கரிய உருவத்தைக் கொண்டதிருமலைக் கணையாகவும்; பாம்பரசனான வாசுகியை வில்லின் முனைகளை இணைக்கும் நாண் கயிறாகவும்; பொன்மயமான மேருவை வில்லாகவும் (கொண்டு);

உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும் உறுதிபடு சுர ரதமிசை அடி இட... சக்கரங்கள் சூரிய சந்திரர்களாகவும்; தேர்ப்பாகனாக பிரமனும்; வேதங்கள் (குதிரைகளாகவும்) பூட்டப்பட்டு; தேவர்களே தேராக அமைந்திருக்கின்ற ரதத்தின் மீது (சிவபெருமான்) பாதத்தைப் பதித்த உடனேயே,

நெறு நெறு என முறிதலு(ம்) நிலை பெறு தவம் உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற... அந்தத் தேர் நெறுநெறு என்று முறிந்துபோகவும்; உறுதியான தவத்தை மேற்கொண்டிருந்த (திரிபுரங்களில் இருந்த) மூன்று* (சிவபக்தர்கள்) அருள்பெற்று (தீயிலிருந்து தப்பிக்க);

(* திரிபுரங்களில் இருந்த மூன்று சிவபக்தர்கள் தப்பினர்.  இவர்களில் இருவர் வாயில்காப்போராக ஆனார்கள்; ஒருவர் சிவபெருமான் நடனமாடும்போது முழவை முழக்கும் பேறுபெற்றார்.  இதனாலேயே ‘ஒருவரும் இருவரும்’ என்று பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.)

ஒரு கோடி தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடி படுவன புகைவன திகு திகு என எரிவன அனல் நகையொடு முனிவார் தம் சிறுவ... (திரிபுரங்களில் இருந்த) கோடிக்கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்களுடைய தலைகளும் ஒன்றாகச் ‘சடசட’ என்று வெடிபட்டுப் புகையைக் கக்கிக்கொண்டு திகுதிகுவென்று எரியும்படியாக அனலை எழுப்பிய புன்னகையைக்கொண்ட சிவனாரின் மகனே!

வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணையில் எழு நிலை திகழ்வன சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே....வேடர்களுடைய குலத்தில் பிறந்த வள்ளியைக் கண்டு உருகிய பெருமானே! திருவண்ணாமலையில் ஏழு நிலைகளோடு விளங்கும் கோபுர வாயிலில் மயில் மீது உலவுகின்ற பெருமாளே!

சுருக்க உரை

கரிய உருவத்தைக் கொண்ட திருமாலை அம்பாகவும்; பாம்புகளின் அரசனான வாசுகியை நாணாகவும்; பொன்மயமான மேரு மலையை வில்லாகவும் கொண்டு; சூரிய சந்திரர்கள் சக்கரங்களாகவும்; பிரமன் தேர்ப்பாகனாகவும்; வேதங்களே குதிரைகளாகவும்; தேவர்களே தேராகவும் அமைந்த ரதத்தின்மீது (சிவபெருமான்) பாதத்தைப் பதித்ததுமே அந்தத் தேர் நெறுநெறுவென்று முறிந்துவிழ; (திரிபுரங்களில்) தவநெறியில் நிலைத்திருந்த மூவர் அருள்பெற்றுப் பிழைக்க; திரிபுரங்களில் அமைந்திருந்த கோடிக்கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்களின் தலைகளும் சடசடவென வெடிபட்டுப் புகைவிட்டுத் திகுதிகுவென எரியும்படியாகக் கோபப் புன்னகையால் திரிபுரங்களை எரித்த சிவனாரின் மகனே! வேடர் மகளைக் கண்டு உருகிய பெருமானே! ஏழு நிலைகளைக் கொண்ட திருவண்ணாமலைக் கோபுரத்து வாயிலிலே மயில்மீது வீற்றிருக்கும் பெருமாளே!

‘இல்லையோ’ என்று ஐயுறும்படியான மெல்லிய இடைகளைக் கொண்ட மாதர்களில் பவளம்போன்ற உதடுகளில் ஊறும் அமுதத்தைப் பருகியும்; கஸ்தூரியைப் புனைந்த மணம்கொண்ட கூந்தல் கலைந்துவிழவும்; மார்பகம் புளகிதம்கொள்ளும்படியாகப் படுக்கையில் பெறுகின்ற கலவி இன்பம் போதும் போதும்; உலகத்தோரையெல்லாம் ‘கற்பக விருட்சமே’ என்று கவிபாடுகின்ற இந்தப் புலமை போதும் போதும்; மாறுபடுவதான சமய சாத்திரப் பயிற்சியும் போதும் போதும்; வினையால் விளைவதும் நீர்மேல் எழுத்துப்போன்றதுமான இந்தப் பிறவித் துயரமும் போதும் போதும்.  இனி நான் உன் அடியாரோடு ஒன்றாக நின்று ஈடேறுவதற்காக ஒலிக்கின்ற சதங்கைகளை அணிந்த உன் திருவடிகளையும் மௌனநிலையையும் தந்தருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com