பகுதி - 797

பொரிய பொரிய பொலி முத்து...
பகுதி - 797

பதச் சேதம்

சொற் பொருள்

பொரிய பொரிய பொலி முத்து வட துகளில் புதை அத் தனம் மீதே

 

பொரியப் பொரிய: பொரிந்து போக, கருக;

புரள புரள கறுவி தறுகண் பொரு வில் சுறவை கொடி வேள் தோள்

 

கறுவி: கோபித்து; தறுகண்: கொடுமையுடன்; சுறவைக் கொடி வேள்: மீன் கொடியை உடைய மன்மதன்; தோள்: கையால்;

தெரி வைக்கு அரிவை பரவைக்கு உருகி செயல் அற்றனள் கற்பு அழியாதே

 

தெரி: தெரிந்து (குறிபார்த்து); வை: கூர்மையான; வைக்கு(ம்): கூர்மையான பாணத்துக்கும்; அரிவை: பெண்களுடைய; பரவைக்கு(ம்): (ஒலியெழுப்பும்) கடலுக்கும்; கற்பு அழியாதே: மன உறுதி குலையாமல்;

செறி உற்று அணையில் துயில் உற்று அருமை தெரிவைக்கு உணர்வை தர வேணும்

 

செறிவுற்று: நெருங்கி வந்து; அணையில்: படுக்கையில்; துயிலுற்று: ஒன்று கலந்து (பக்தரோடு இரண்டறக் கலந்து);

சொரி கற்பக நல் பதியை தொழு கை சுரருக்கு உரிமை புரிவோனே

 

சொரி: (மலர்களைச்) சொரிகின்ற; கற்பக நற்பதியை: தேவலோகத்தை;

சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே

 

சுருதிப் பொருளை: பிரணவத்தின் பொருளை;

தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா

 

தரிகெட்டு: நிலைகெட்டு; நெட்டு அயில்: நீண்ட வேல்;

தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே.

 

தவள: வெண்ணிற; பணில: சங்குகள்; தரள: முத்துகள்; பழன: வயல்கள்;

பொரியப் பொரியப் பொலி முத்து வடத் துகளில் புதை அத் தனம் மீதே... (விரக தாபத்தால்) அணிந்திருக்கின்ற முத்துமாலைகள் பொரிந்துபோய்த் துகளாக உதிர, அந்தத் துகளில் புதைகின்ற தனங்களின் மேலே,

புரளப் புரளக் கறுவித் தறு கண் பொரு வில் சுறவக் கொடி வேள் தோள் தெரி வைக்கு(ம்)... புரண்டு புரண்டு படுத்து (வேதனைப் படுகையில்) கோபித்துக் கொடுமையுடன் போர் தொடுக்கின்ற வில்லையும் மீன்கொடியையும் உடைய மன்மதன் தன் கையால் (பாணத்தை எடுத்து) குறிவைக்கின்ற கூர்மையான அம்புக்கும்;

அரிவைப் பரவைக்கு உருகிச் செயல் அற்றனள் கற்பு அழியாதே... தூற்றுகின்ற பெண்களின் பேச்சுக்கும்; ஒலிக்கின்ற கடலுக்கும் மனம் உருகியழிந்து செய்வதறியாது திகைக்கும் (என் மகளின்) மனஉறுதி குலையாதபடி,

செறி உற்று அணையில் துயில் உற்று அருமைத் தெரிவைக்கு உணர்வைத் தர வேணும்... இவளை நெருங்கிவந்து, பஞ்சணையில் துயில்கொண்டு என் அன்புக்குரிய இந்தப் பெண்ணின் மயக்கத்தைக் கெடுத்து நல்லுணர்வைத் தரவேண்டும்.

சொரி கற்பக நல் பதியைத் தொழு கைச் சுரருக்கு உரிமைப் புரிவோனே... மலர்களைச் சொரிகின்ற கற்பக மரங்கள் இருக்கின்ற பொன்னமராவதி நகரத்துக்கு, கைகூப்பி நின்ற தேவர்களுடைய உரிமையை மீட்டுக் கொடுத்தவனே!

சுடர் பொன் கயிலைக் கடவுட்கு இசையச் சுருதிப் பொருளைப் பகர்வோனே... சுடர்விடும் பொன் மலையான கயிலையின் இறைவனுடைய உள்ளம் இசையும்படியாக அவருக்குப் பிரணவத்தின் பொருளைச் சொன்னவனே!

தரி கெட்டு அசுரப் படை கெட்டு ஒழியத் தனி நெட்டு அயிலைத் தொடும் வீரா... அரக்கர்களுடைய சேனைகள் நிலைகெட்டு அழிந்துபோகும்படியாக ஒப்பற்ற நீண்ட வேலை வீசிய வீரனே!

தவளப் பணிலத் தரளப் பழனத் தணிகைக் குமரப் பெருமாளே.... வெண்ணிறத்தைக்கொண்ட சங்குகளும் முத்துகளும் இறைந்துகிடக்கின்ற வயல்கள் இருக்கின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

மலர்களைச் சொரியும் தேவலோகத்தின் உரிமையை, கைதொழுது நின்ற தேவர்களுக்கு மீட்டுக் கொடுத்தவனே! பொன்னைப்போல் மின்னும் கயிலை மலை இறைவனுக்கு வேதங்களின் பொருளை எடுத்தோதியவனே!  அசுரர்களுடைய சேனைகள் நிலைகெட்டுச் சிதறியோடி அழியும்படியாக வேலை வீசியவனே!  வெண்ணிறமான சங்குகளும் முத்துகளும் இறைந்துகிடக்கின்ற வயல்களோடு கூடிய திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

இப்பெண் தன்னுடைய விரகதாபத்தாலே அவள் அணிந்திருக்கின்ற முத்து மாலைகள் பொரிந்து கருகிப்போய் அதன் துகள்களில் இவள் மார்பகம் புதைபடவும்; வேதனையால் படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கும்போது கரும்பு வில்லையும் மீன் கொடியையும் உடைய மன்மதன் இவளிடம் கோபித்துப் போர்தொடுத்துச் செலுத்தும் மலர்க் கணைகளுக்கும்; வம்பு பேசும் பெண்களுக்கும்; ஒலிக்கின்ற கடலுக்கும் மனமுடைந்து செயலிழந்து கிடக்காமலும் மன உறுதியை இழக்காமலும் பஞ்சணையில் இவளை நெருங்கி, இரண்டறக் கலந்து இவளுக்கு நல்லுணர்வைத் தந்தருள வேண்டும்.  (உன்னையே நினைந்து உருகுகின்ற அன்பர்களை நெருங்கிவந்து அவர்களோடு ‘நீ நான்’ என்பது கெட ஒன்றாகக் கலந்து அவர்களுக்கு நல்லுணர்வை அளித்தருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com