பகுதி - 801

தீ ஊதை தாத்ரி பானீயம்
பகுதி - 801

பதச் சேதம்

சொற் பொருள்

தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற  வான் ஈதியால் திகழும் ஆசை

 

தீ: நெருப்பு; ஊதை: காற்று; தாத்ரி: மண்; பானீயம்: நீர்; வான்: ஆகாயம்—பஞ்ச பூதங்கள்; ஈதியால்: ஈந்தததால், சேர்ந்து படைத்ததால்;

சேறு ஊறு தோல் பை யானாக நோக்கு(ம்)  மா மாயை தீர்க்க அறியாத

 

தோற்பை: உடல்;

பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை  பீறா இழா தி(ன்)னு(ம்) உடல் பேணி

 

பாறு: பருந்து; ஓரி: நரி; பீறா: பீறி, கிழித்து; இழா: இழுத்து; தின்: தின்கின்ற; உடல் பேணி: உடலைப் போற்றி;

பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை  போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய்

 

நடாத்து: நடத்துகின்ற; போமாறு: போகின்ற வண்ணம், தொலையுமாறு; பேர்த்து: விலக்கி;

வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி

 

வேய்: மூங்கில்--புல்லாங்குழல்; ஊரு: ஊர்கின்ற, தடவுகின்ற—இங்கே ஊதுகின்ற;

மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த  வேலோடு வேய்த்த இளையோனே

 

வேய்த்த: வேவுகாரர்களைப் போல மறைந்து நின்ற;

மாயூர ஏற்றின் மீதே புகா பொன் மா மேரு வேர் பறிய மோதி

 

மாயூர: மயூர, மயில்; மாயூர ஏற்றின்: ஆண்மயிலின்; மாமேரு: (இந்த இடத்திலே) கிரெளஞ்ச மலை;

மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி  வான் நாடு காத்த பெருமாளே.

 

மாறு ஆன: பகைவர்களான (அரக்கர்களை);

தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும்... தீ, காற்று, மண், நீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனதும்,

ஆசைச் சேறு ஊறு தோல் பை யானாக நோக்கு(ம்) மா மாயை தீர்க்க அறியாதே.... ஆசையாகிய சேறு ஊறியுள்ளதும் தோலால் ஆனதுமான இந்த உடலை ‘நான்’ என்று நினைத்துக்கொள்கின்ற பெரிய மாயையை ஒழிக்கும் விதத்தை அறியாமல்,

பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழாத் தி(ன்)னு(ம்) உடல் பேணி... பேய்களும் பூதங்களும்ம் வயதான பருந்துகளும்ம் நரிகளும்ம் காக்கைகளும் பிய்த்து இழுத்துத் தின்னப்போகின்ற உடலைப் போற்றிப் பாதுகாத்து,

பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய்... பேயைப் போன்றவனாகிய நான் நடத்துகின்ற கோமாளித்தனமான வாழ்க்கையைத் தொலைத்து விலக்கவல்ல உன்னுடைய திருப்பாதங்களைத் தந்தருள வேண்டும்.

வேய் ஊரு சீர்க் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி... புல்லாங்குழலைத் தடவுகின்ற (ஊதுகின்ற) சீரான கையிலே வேலை ஏந்துகின்ற வேடர்கள் (வாழ்கின்ற) (வள்ளிமலைக்) காட்டிலே இருந்தவளான வள்ளியை மணக்க விரும்பி உருவத்தை மாற்றிக்கொண்டு,

மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே... அடங்காத விருப்பம் பொங்கியெழ, கையில் பிடித்த வேலோடு, வேவுகாரர்களைப் போல மறைவாகச் சென்ற இளையவனே!

மாயூர ஏற்றின் மீதே புகாப் பொன் மா மேரு வேர்ப் பறிய மோதி... நிகரற்ற மயிலின்மீது ஏறிக்கொண்டு, பொன்னைப்போல மின்னிய கிரெளஞ்ச மலையை வேரோடு பறிக்கப்படும்படியாகத் தாக்கி,

மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி வான் நாடு காத்த பெருமாளே.... பகைகொண்டு எதிர்த்த அரக்கர்களைச் சுட்டுப் பொசுக்கி அழித்து, தேவர்களுடைய அமராவதிப் பட்டணத்தைக் காத்த பெருமாளே!

சுருக்க உரை

புல்லாங்குழலை ஊதுகின்ற சீரான கைகளில் வேலை ஏந்துகின்ற வேடர்கள் வாழும் வள்ளிமலைக் காட்டில் இருந்த வள்ளியைத் திருமணம் செய்துகொள்வதற்காக உருவத்தை மாற்றிக்கொண்டு; ஆவல் மீதூர வேலை எடுத்துக்கொண்டு ஒற்றர்களைப் போல மாறுவேடத்தில் சென்ற இளையவனே! மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு பொன்போன்று விளங்கிய கிரெளஞ்ச பர்வதத்தை வேரோடு பிடுங்கி, பகைகொண்டு எழுந்த அரக்கர்களைப் பொசுக்கி, தேவலோகத்தைக் காத்த பெருமாளே!

தீ, காற்று, மண், நீர், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனதும்; ஆசை என்னும் சேற்றில் ஊறியதும்; தோலாலே ஆன பையைப் போன்றதுமான இந்த உடலையே ‘நான்’ என்று கருதிக்கொள்கின்ற மாயையை ஒழிக்கும் விதத்தை அறியாமல்,

பேய்களும் பூதங்களும் பருந்துகளும் நரிகளும் காக்கைகளும் பிய்த்து இழுத்துத் தின்னப்போகின்ற இந்த உடலைப் போற்றிப் பாதுகாத்தபடி, பேயைப் போன்ற அடியேன் நடத்துகின்ற இந்தக் கோமாளித்தனமான வாழ்க்கை போய்த் தொலையுமாறு (இனி பிறவிகள் நேராதவாறு) உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com