பகுதி - 805

நித்தம் உற்று உனைநினைத்து
பகுதி - 805

பதச் சேதம்

சொற் பொருள்

நித்தம் உற்று உனைநினைத்து மிக நாடி

நித்தம்: தினந்தோறும்; உற்று: வந்து பொருந்தி;

நிட்டை பெற்று இயல்கருத்தர் துணையாக

 

நிட்டை: நிஷ்டை;

நத்தி உத்தமதவத்தின் நெறியாலே

நத்தி: விரும்பி;

(இ)லக்ய (இ)லக்கணநிருத்தம்அருள்வாயே

லக்ய லக்கண: இலக்கிய, இலக்கண; நிருத்தம்: நடனம்;

வெற்றி விக்ரமஅரக்கர் கிளைமாளவிட்ட

விக்ரம(ம்): பராக்கிரமம்; கிளை: சுற்றத்தாரை;

நத்து கரனுக்குமருகோனே

நத்து: சங்கு; நத்துகரன்: சங்கை ஏந்தியவன்—திருமால்;

குற்றம் அற்றவர்உ(ள்)ளத்தில் உறைவோனே

 

குக்குட கொடி தரித்தபெருமாளே.

குக்குடக்கொடி: கோழிக்கொடி;

நித்தம் உற்றுனைநினைத்து மிகநாடி... ஒவ்வொரு நாளும் உன்னை எண்ணி மனத்திலிருத்தியும் உன்னை நாடியும்,

நிட்டைபெற்றியல்கருத்தர் துணையாக... நிஷ்டையிலே நிலைபெற்றிருக்கும் பெரியோர்களைத் துணையாகக் கொண்டு,

நத்தி (த்)தம தவத்தின் நெறியாலே... (அவர்களை) விரும்புவதாகிய உத்தமமான தவநெறியின் பயனாக,

லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே... இலக்கிய (பரத சாஸ்திர), இலக்கண (நாட்டியத்தின் இலலக்கண) முறைப்படியான நடன தரிசனத்தைத் தந்தருள வேண்டும்.

வெற்றி விக்ரமவரக்கர் கிளைமாள விட்ட... வெற்றியையும் பராக்கிரமத்தையும் உடைய அரக்கர்கள் (போரிலே) தங்கள் சுற்றத்தாரோடு மாளும்படியாகச் செய்த,

நத்துகரனுக்கு மருகோனே... பாஞ்சஜன்யமாகிய சங்கத்தை ஏந்திய கரத்தை உடைய திருமாலின் மருமகனே!

குற்றமற்றவர் உளத்தில் உறைவோனே... குற்றமற்ற அடியார்களுடைய மனத்தில் குடிகொண்டிருப்பவனே!

குக்குடக் கொடிதரித்த பெருமாளே.... கோழிக்கொடியை ஏந்துகின்ற பெருமாளே!

சுருக்க உரை

வெற்றியையும் பராக்கிரமத்தையும் உடைய அரக்கர் குலம் தன் சுற்றத்தாரோடு மாளும்படியாகச் செய்தவனும் சங்கத்தை ஏந்தியவனுமான திருமால் மருகனே! குற்றமற்ற அடியார்களுடைய மனத்தில் உறைபவனே! சேவற்கொடியை ஏந்துகின்ற பெருமாளே!

தினந்தோறும் உன்னை நினைத்து மன ஒருமைப்பாட்டோடு மிக விரும்பித் தியானிக்கின்ற பெரியார்களுடைய துணையைப் பெறுவதாகிய தவ ஒழுக்கத்தை நான் கடைப்பிடிப்பதன் பயனாக, இலக்கிய இலக்கணங்களுக்கு இசையும்படியான உன்னுடைய நர்த்தன தரிசனத்தை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com