பகுதி - 807

நீலம் கொள் மேகத்தின் மயில்
பகுதி - 807

பதச் சேதம்

சொற் பொருள்

நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே

 

 

நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே 

 

வாழ்வை: திருக்கோலத்தை;

மால் கொண்ட பேதைக்கு உன் மண(ம்) நாறும்

 

மால்: மயக்கம், மோகம்;

மார் தங்கு(ம்) தாரை தந்து அருள்வாயே

 

தாரை: மாலையை (தார் என்பது ஆண்கள் அணியும் மாலை);

வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே 

 

வேல்: வேலாயுதம்; வேலை: கடலை; பண்டு: முன்பு; எறிவோனே:

வீரம் கொள் சூரர்க்கும் குலகாலா

 

குலகாலா: குலத்துக்கு யமனே;

நால் அந்த வேதத்தின் பொருளோனே 

 

 

நான் என்று மார் தட்டும் பெருமாளே.

 

 

(உன்னுடைய தரிசனத்தைத் தரவேண்டும் என்று கேட்கும் மற்ற பாடல்களை போல் அல்லாமல் ‘நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே’ நான் உன்னை ஏற்கெனவே தரிசித்துவிட்ட படியால்’ என்று பாடும் இப்பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது.)

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே...நீல நிறமான மேகத்தை ஒத்த மயிலின் மீது (அமர்ந்தபடி),

நீவந்த வாழ்வைக்கண்டதனாலே... நீ எனக்குமுன்னே தோன்றிய தரிசனக் கோலத்தைக் கண்டுவிட்ட காரணத்தால்,

மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும்... உன்மீது மோகம் கொண்டிருக்கும் இந்தப் பெண்ணுக்கு மணம் வீசுகின்ற உன்னுடைய,

மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே... மார்பிலே அணிந்திருக்கின்ற மாலையைத் தந்து அருளவேண்டும்.

வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே... (கையிலுள்ள) வேலாயுதத்தைக் கடல் வற்றும்படியாக முன்பு வீசியவனே!

வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா... வீரர் என்று பெருமிதம் கொள்கின்ற சூரர்களுடைய குலத்துக்கே யமனாகத் திகழ்பவனே!

நாலந்த வேதத்தின் பொருளோனே... (ரிக், யஜுர், சாம, அதர்வண என்று) நான்காக விளங்குகின்ற வேதங்களின் பொருளாக விளங்குபவன் (யாரென்றால், அது)

நானென்று மார்தட்டும் பெருமாளே.... நானேதான் என்று பெருமிதத்தோடு மார்தட்டிக்கொள்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

கையிலே ஏந்தியுள்ள வேலாயுதத்தைக் கடல் வற்றும்படியாக முன்பு செலுத்தியவனே!  வீரச் செருக்கு மிகுந்த சூரர்களின் குலத்துக்கு யமனே! நான்கு வேதங்களின் பொருளாக அமைந்திருப்பவர் யார் என்று கேட்டால், ‘அது நானேதான்’ என்று மார்தட்டுகின்ற பெருமாளே!

நீலவண்ணத்தைக் கொண்டதும் மேகத்தை ஒத்ததுமான மயிலின்மீது நீ அமர்ந்துவந்த கோலத்தைக் கண்ட காரணத்தால் உன்மீது மோகம்கொண்டிருக்கின்ற பேதையான எனக்கு உன் மார்பிலே விளங்குகின்ற மாலையைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com