பகுதி - 747

பகுதி - 747

வினைகளின் காரணமாக

பதச் சேதம்

சொற் பொருள்

கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே

 

கலக்கும்: கலக்கின்ற; கோது: சக்கைகள்; அற: நீங்க;

கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடை கண் பார்வையில் அழியாதே

 

 

விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான்

 

போதகம்: போதனை, உபதேசம், ஞானோபதேசம்;

வினை கொண்டே மன(ம்) நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே

 

 

அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா

 

தானவர்: அசுரர்கள்;

அழைத்து உன் சீரிய கழல் செம் தாமரை அடுக்கும் போதகம் உடையோராம்

 

போதகம்: ஞானம்;

சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா

 

 

திதிக்கும் பார் வயின் மதிப்பு உண்டாகிய திருச்செங்கோடு உறை பெருமாளே.

 

திதிக்கும்: காக்கின்ற; பார் வயின்: உலகத்தினிடத்திலே

கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே... கலந்துபோகின்ற சக்கைகளை வடிகட்டி நீக்கிய நல்ல கருப்பஞ்சாறு என்று சொல்லத்தக்க இனிய பேச்சைக்கொண்டு,

கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக் கண் பார்வையில் அழியாதே... கருத்தையும் நோக்கத்தையும் உருக்குகின்ற பாவியராகிய பொதுப்பெண்டிரின் கடைக்கண் பார்வையில் (சிக்கி) அழிந்துபோகாமல்,

விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன்... (அந்தத் தீங்கை) விலக்குவதாகிய ஞானோபதேசத்தை எனக்காகவே தந்தருளவேண்டும் என்ற விருப்பத்தை மிகவும் கொண்டிருக்கின்ற,

நான் வினைக் கொண்டே மன(ம்) நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே... நான் என்னுடைய வினைகளின் காரணமாக மனத்தில் கொண்டிருக்கின்ற தீய தன்மைகளை விட்டுத் தொலைப்பதற்காக ‘அஞ்சேல்’ என்று அருளவேண்டும்.

அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா... வருத்தத்தைத் தருபவர்களாகியி அசுரர்கள் குலத்தின் சேனைகளை வேரறுத்த கூர்மையான வடிவேலை ஏந்தியவனே!

அழைத்து உன் சீரிய கழல் செம் தாமரை அடுக்கும் போதகம் உடையோராம் சிலர்க்கு... உன்னைக் கூப்பிட்டு உன்னுடைய செவ்விய திருவடித் தாமரையைப் பற்றிக்கொள்கின்ற ஞானத்தை உடைய சிலருக்கு,

அன்றே கதி பலிக்கும் தேசிக திருச் செம் கோபுர வயலூரா... உடனடியாக நற்கதியைத் தந்ததருளும் குருவே! அழகிய, செம்மையான கோபுரங்களை உடைய வயலூரனே!

திதிக்கும் பார் வயின் மதிப்பு உண்டாகிய திருச் செங்கோடு உறை பெருமாளே.... நீ பரிபாலிக்கின்ற இந்த பூமியில் சிறந்து விளங்குகின்ற திருச்செங்கோட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

தேவர் முதலான அடியார்களை வருத்திக் கொண்டிருந்த அசுரர் குலத்துச் சேனைகளை வேரறுத்த கூரிய வடிவேலனே! உன்னை அழைத்து, உன் சிவந்த தாமரைப் பாதங்களைப் பற்றிக்கொள்கின்ற ஞானம் உடையவர்களாகிய சிலருக்கு உடனடியாக நற்கதியைத் தந்தருளும் குருமூர்த்தியே!  அழகிய, செம்மையான கோபுரங்களைக் கொண்டிருக்கும் வயலூரை உடையவனே!  உன்னால் பரிபாலிக்கப்படும் இந்தப் புவியிலே சிறந்து விளங்குவதாகிய திருச்செங்கோட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சக்கைகள் கலக்காமல் வடித்து எடுக்கப்பட்ட கருப்பஞ்சாற்றைப் போன்ற இனிய சொற்களால் கருத்தையும் நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளான பொதுப்பெண்டிருடைய கடைக்கண் பார்வையால் நான் அழிந்துபோகாதபடி தடுக்கவல்ல ஞானோபதேசத்தை எனக்காக என்றே தந்தருளவேண்டும் என்ற விருப்பத்ரதைஉடைய நான், என்னுடைய ஊழ்வினையின் காரணமாக மனத்தில் கொண்டுள்ள தீய குணங்களை விட்டொழித்து உய்வடையும்படியாக நீ ‘அஞ்சேல்’ என்று கூறியருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com