பகுதி - 749

நறுமணம்க கமழ்வதும்
பகுதி - 749

பதச் சேதம்

சொற் பொருள்

ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே

 

உண்ப: உண்கின்ற; ஏல்வது: தக்கது; உம்பல்: யானை;

ஏதும் என்றனிட கோல் எ(ன்)னும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர் ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி

 

என்றனிட: என்னுடைய; கோல்: ஆட்சிக்குள்; பரிவு மேவி: சுகநிலையை அடைந்து; தனங்கள்: செல்வங்கள்;

சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக

 

சீத: குளிர்ந்த; தொங்கல்: மாலை; தண்டிகை: பல்லக்கு; அந்தமாக: அழகாக;

சேர் கனம் பெரிய வாழ்வு கொண்டு உழலும் ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ சேவை கண்டு உனது பாத தொண்டன் என அன்பு தாராய்

 

 

சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ சூரியன் புரவி தேர் நடந்து நடு பங்கின் ஓட

 

விடர்: மலைப்பிளவு;

சோதி அந்த பிரமா புரந்தரனும் ஆதி அந்த முதல் தேவரும் தொழுது சூழ மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்பு கூர

 

புரந்தரன்: இந்திரன்;

வாது கொண்டு அவுணர் மாள செங்கை அயில் ஏவி அண்டர் குடி ஏற விஞ்சையர்கள் மாதர் சிந்தை களி கூர நின்று நடனம் கொள்வோனே

 

வாதுகொண்டு: பகை கொண்டு; அவுணர்: அரக்கர்; விஞ்சையர்கள்: வித்தியாதரர்கள்;

வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய வாலி கொண்ட புரம் மேய அமர்ந்து வளர் தம்பிரானே.

 

எணும்: எண்ணும்—எண்ணிப்பார்க்கத் தக்க;

ஈயெறும்பு நரி நாய்கணங் கழுகு காகம் உண்ப வுடலே சுமந்து ..... ஈ, எறும்பு, நரி, நாய்க் கூட்டங்கள், கழுகு, காக்கை என்று இவையெல்லாம் தின்னப்போகினிற் உடலைச் சுமந்திருக்கின்ற நான்,

இது ஏல்வதென்று மதமேமொழிந்து மத உம்பல்போலே... இது தக்கதென்று எண்ணி ஆணவம் நிறைந்த சொற்களைப்பேசி, மதயானையைப் போல,

ஏதும் என்றனிட கோல் எனும்பரிவு மேவி நம்பி இது போது மென்கசிலர்... எல்லாமே என்னுடைய ஆட்சியின்கீழ் அடங்குபவை என்ற பெருமித நிலையை அடைந்து; இது எப்போதும் நீடிக்கும் என்று நம்பி; சிலர் ‘இவனுக்கு இது போதுமோ’ என்னும்படியான,

ஏய்தனங்கள்தனி வாகு சிந்தை வசனங்கள்பேசி... செல்வ வளத்தால் ஒப்பில்லாத கர்வத்தை மனத்தில் கொண்டு அவ்விதமாகப் பேசி,

சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்களாட... குளிர்ச்சியான மாலைகளை அழகாக அணிந்து, அவற்றின் நறுமணம் வீசுமாறு பெண்கள் நடனமாட,

வெண்கவரி சீற கொம்புகுழலூத தண்டிகையில் அந்தமாக... வெண்சாமரங்கள் வீச; கொம்பு, புல்லாங்குழல் முதலான இசைக்கருவிகள் முழங்க பல்லக்கில் அழகாக,

சேர்கனம்பெரிய வாழ்வு கொண்டுழலும் ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி... நான் வீற்றிருக்கின்ற பெருமிதம் நிறைந்த வாழ்வை விரும்பித் திரிகின்ற ஆசை வெந்து தணிய; உன்மீது ஆசை பெருகி;

சிவ சேவை கண்டு உனது பாத தொண்டனென அன்புதாராய்... மங்கலம் நிறைந்த உன்னுடைய தரிசனத்தைக் கண்டு, உன்னுடைய திருவடிக்குத் தொண்டாற்றுகின்ற அன்பை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

சூதிருந்த விடர் மேயி ருண்டகிரி சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ... வஞ்சம் நிரம்பியவர்களும் மலைப்பிளவுகளும் மிகுந்ததும் இருண்டதுமான கிரெளஞ்ச மலையும் அசுரர்களும் வெந்து பொடிபட்டு அழியும்படியாக,

சூரியன்புரவி தேர்நடந்துநடு பங்கினோட சோதி யந்தபிரமா புரந்தரனும்... குதிரைகளைப் பூட்டிய சூரியனுடைய தேர் (சூரனுடைய ஆட்சிக்கு முன்பிருந்ததைப் போல) வானத்தின் நடுப்பகுதியில் ஓடும்படியும்; ஒளிபொருந்திய பிரமன், இந்திரன்,

ஆதி யந்தமுதல் தேவரும் தொழுது சூழ மன்றில்நட மாடும் எந்தைமுதல் அன்புகூர... முதலான எல்லா தேவர்களும் வணங்கியபடி சூழ்ந்து நிற்க, பொன்னம்பலத்தில் நடனமாடுகின்ற முழுமுதற் கடவுளான சிவபெருமான் அன்பு பெருகி நிற்க;

வாது கொண்ட அவுணர் மாள செங்கையயில் ஏவி... பகைமைகொண்டு போருக்கு வந்த அரக்கர்கள் மாளும்படியாக திருக்கையில் உள்ள வேலை ஏவி,

அண்டர்குடி யேற விஞ்சையர்கள் மாதர் சிந்தைகளி கூர நின்றுநடனங் கொள்வோனே... தேவர்கள் தங்கள் நாட்டிலே கூடியேறும்படியாகவும்; வித்தியாதரப் பெண்கள் மனம் மகிழும்படியாகவும் போர்க் களத்திலே நடனம் புரிந்தவனே!

வாச கும்பதன மானை வந்து தினை காவல் கொண்டமுருகா எணும்பெரிய வாலி கொண்டபுரமே யமர்ந்துவளர் தம்பிரானே....... நறுமணம்க கமழ்வதும்; குடம்போன்றதுமான மார்பையும் மானின் சாயலையும் உடைய வள்ளியிடத்திலே வந்து தினைப்புனத்தைக் காக்கின்ற தொழிலை மேற்கொண்ட முருகா! சிறப்பு மிகுந்த வாலிகொண்டபுரம் என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற தம்பிரானே!


சுருக்க உரை:

வஞ்சகர்களுக்கும் மலைப் பிளவுகளுக்கும் இடமாயிருந்த இருண்ட மலையான கிரெளஞ்சகிரியும் அசுரர்களும் வெந்து பொடியாகும்படியாகவும்; சூரியனுடைய தேர் மீண்டும் நடுவானிலே ஓடும்படியாகவும்; பிரமன், இந்திரன் முதலான எல்லா தேவர்களும் சூழ்ந்திருக்கக் கனகசபையில் நடனமாடும் முழுமுதற் கடவுளான சிவனார் மகிழும்படியாகவும் போருக்கு வந்த அரக்கர்களைத் திருக்கை வேலால் அழித்த முருகா!  தேவர்களை மீண்டும் பொன்னுலகிலே குடியேற்றியவா!  வித்தியாதர மகளிர் மனம் மகிழும்படியாகப் போர்க்களத்தில் நடனம் புரிந்தவா! நறுமணம் கமழ்வதும் குடம்போன்றதுமான மார்பகத்தையும் மான்போன்ற சாயலையும் உடைய வள்ளியிடத்திலே வந்து தினைப்புனத்தைக் காக்கின்ற தொழிலை மேற்கொண்ட முருகா! சிறப்புமிக்க வாலிகொண்டபுரத்தில் வீற்றிருக்கின்ற தம்பிரானே!

ஈ, எறும்பு, நாய், நரி, கழுகு, பேய், காக்கை என்று இவையெல்லாம் உண்ணப் போகின்ற இந்த உடலைச் சுமந்து திரியும் நான் ‘தக்கது’ என்று நினைத்தும்; எல்லாமே என்னுடைய ஆட்சிக்குட்பட்டது என்று கர்வம் கொண்டும் ‘இவனுக்கு இத்தனை ஆடம்பரமா’ என்று எல்லோரும் நினைக்கும்படியாக கர்வம் நிறைந்த பேச்சுகளைப் பேசித் திரிந்தும்; குளிர்ந்த மாலைகளை அணிந்த மாதர் நடனமாடவும்; ஊதுகொம்பு, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் முழங்கவும் பல்லக்கில் அமர்ந்தபடி அழகாகச் சுற்றித் திரிகின்ற வாழ்க்கையின்மீது கொண்டிருந்த ஆசை வெந்து தணிய; மங்களகரமான உன்னுடைய தரிசனத்தைக் கண்டு உன் திருவடிகளுக்குத் தொண்டாற்றும் அன்பைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com