பகுதி - 759

மன்மதனை ஒத்த உருவத்தை
பகுதி - 759

பதச் சேதம்

சொற் பொருள்

வால வயதாகிஅழகாகி 
மதனாகிபணி வாணிபமோடுஆடி 
மருளாடிவிளையாடி விழல்
வாழ்வு சதமாகிவலுவாகி 
மடகூடமோடு பொருள்தேடி

 

வால வயது: பால்ய வயது, இளமை; மதனாகி: மன்மதனை ஒத்து; பணி: உத்தியோகத்தோடும்; வாணிபமோடு: வியாபரத்தோடும்; மருளாடி: மயங்கி; விளையாடி: வீணாக்கி; விழல் வாழ்வு: பயனற்ற வாழ்க்கை; சதமாகி: நிச்சயமாகி; மடகூடமொடு: மாட கூடங்களோடு;

வாசனை புழுகு ஏடுமலரோடு 
மனமாகிமகிழ் வாசனைகள்ஆதி 
இடல் ஆகிமயலாகி 
விலை மாதர்களை மேவிஅவர் ஆசை
 தனில்சுழல சில நாள் போய்

 

புழுகு: புனுகு; ஏடுமலர்: இதழ்களோடு கூடிய மலர்; வாசனைகள் ஆதி: வாசனைகள் முதலானவற்றை;

தோல் திரைகள் ஆகிநரையாகி 
குருடாகிஇரு கால்கள்தடுமாறி 
செவி மாறிபசு பாச பதி
சூழ்கதிகள் மாறி சுகம்மாறி 
தடியோடு திரிஉறு நாளில்

 

திரைகளாகி: சுருக்கம் விழுந்து; செவி மாறி: காது கேட்காமல் போய்;

சூலை சொறி ஈளைவலி வாத
மோடுநீரிழிவு சோகைகள்மாலை 
சுரமோடுபிணி தூறிருமல் சூழல் உற
 மூலகசுமாலம் என நாறிஉடல்
 எழுவேனோ

 

சூலை: சுரம்; ஈளை: கபம்; நீரிழிவு: சர்க்கரை நோய்; சோகை: ரத்தமின்மை; மாலை: கண்டமாலை அல்லது கழுத்தைச் சுற்றி ஏற்படும் வீக்கம்; தூறிருமல்: கிளைத்து எழும் இருமல்; கசுமாலம்: ஆபாசம்;  

நாலுமுகம் ஆதி அரிஓம் என 
அதாரம்உரையாத பிரமாவைவிழ மோதி 
பொருள்ஓதுக என நாலுசிரமோடு 
சிகைதூளிபட தாளம் இடுஇளையோனே

 

நாலுமுகம்: நான்கு முகங்களைக் கொண்ட பிரமன்; அதாரம்: ஆதாரம் என்பதன் விகாரம்; சிகை தூளிபட: குடுமி தெறித்துப் போகும்படி;

நாறு இதழி வேணிசிவ ரூபக 
கல்யாணிமுதல் ஈண மகவு ஆனை 
மகிழ் தோழவனம் மீது செறி ஞான 
குற மாதைதினை காவில் 
புகழ்மயில் வீரா

 

இதழி: கொன்றை; வேணி: சடாமுடி; முதல் ஈண: முன்பு ஈன்ற; ஆனை: தேவானை;

ஓலம் இடு தாடகைசுவாகு வளர் 
ஏழுமரம் வாலியோடுநீலி பகனோடு 
ஒருவிராதன் எழும் ஓதகடலோடு 
விறல்ராவண குழாம்அமரில் பொடியாக

 

சுவாகு: சுபாகு—மாரீசன் தம்பி; ஏழு மரம்: ஏழு மராமரங்கள்; நீலி: அயோமுகியாகக் கொள்ளலாம்; பகன்: (கிருஷ்ணாவதாரத்தில் கொக்கு வடிவத்தில் கொல்ல வந்த அரக்கன்) இங்கே கும்பகன்—அல்லது கும்பகருணன்; ஓதக் கடல்: இரைச்சலிடும் கடல்; விறல்: வலிமையுள்ள; அமரில்: போரில்;

ஓகை தழல்வாளிவிடு மூரி 
தநுநேமி வளை பாணிதிரு மார்பன்
அரிகேசன் மருகா எனவே ஓத 
மறை ராமேசுரமேவும் குமரா 
அமரர்பெருமாளே.

 

ஓகை: உவகை, மகிழ்ச்சி; வாளிவிடு: அம்பைச் செலுத்தும்; மூரி: வலிய; தநு: வில்; நேமி: சக்கரம்; வளை: சங்கு; பாணி: கை(யில் ஏந்தியவன்); கேசன்: கேசவன்;

வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி... இளமை மிகுந்த வயதை அடைந்து, அழகனாகி, மன்மதனை ஒத்த உருவத்தைக் கொண்டு, (பொருளுக்காக) பணியிலும் வியாபாரத்திலும் ஈடுபட்டு, அறிவு மயங்கிக் காலத்தை வீணே கழித்து;

விழல் வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமோடு பொருள் தேடி... பயனற்ற வாழ்கையே நிலைத்துப்போய் அதிலேயே எண்ணம் வலுப்பெற்று; மாடகூடங்களோடு கூடிய வாழ்வில் பொருள்தேடி அலைந்து;

வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி... வாசனையுள்ள புனுகு, இதழ்கள் விரிந்த மலர்கள் ஆகியனவற்றில் மனத்தைச் செலுத்தி; மகிழ்ச்சியோடு வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொண்டும் மயக்கம் கொண்டும்;

விலைமாதர்களை மேவி அவர் ஆசை தனில் சுழல சில நாள் போய்... விலை மாதர்களை அடைந்து அவர்கள்மேல் மோகம் கொண்டு அவர்கள் பின்னாலே திரிந்து இவ்வாறு சிலநாட்கள் கழித்து;

தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி... தோலில் சுருக்கம் விழுந்து; நரை விழுந்து; கண் பார்வை கெட்டு; கால்கள் தடுமாறி; காது கேட்காமல்போய்;

பசு பாச பதி சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரி உறு நாளில்... பசு, பதி பாசம் என்னும் முதன்மையான பொருட்களைப் பற்றிய அறிவு கெட்டு; சுகமெல்லாம் அழிந்து; தடியை ஊன்றிக்கொண்டு திரிகின்ற முதுமையிலே,

சூலை சொறி ஈளை வலி வாதமோடு நீரிழிவு சோகைகள மாலை சுரமோடு பிணி தூறிருமல்... சூலை, சொறி, கபம், வலிப்பு, வாதம், சர்க்கரை நோய், இரத்தம் குறைவதால் ஏற்படும் சோகை, கழுத்தைச் சுற்றிலும் ஏற்படும் வீக்கம், காய்ச்சல், நோய்கள், புகைச்சலாக எழும் இருமல்,

சூழல் உற மூல கசுமாலம் என நாறி உடல் அழிவேனோ... எல்லாமும் சூழ்ந்துகொள்ள அருவறுக்குமாறு நாற்றமெடுத்து இந்த உடல் கெட்டுப்போய் நான் மடிவேனோ?  (அவ்வாறு மடியாமல் ஆட்கொள்ள வேண்டும்.)

நாலுமுகம் ஆதி அரி ஓம் என அதாரம் உரையாத பிரமாவை... நாலு முகங்களைக் கொண்ட பிரமா எல்லாவற்றுக்கும் ஆதாரமான ஓங்காரத்தின் பொருளைச் சொல்லாதபோது,

விழ மோதி பொருள் ஓதுக என நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே... அவன் விழும்படியாகத் தாக்கி, ‘இதன் பொருளைச் சொல்’ என்று நான்கு தலைகளும் அவற்றிலுள்ள குடுமியும் தெறித்துப் போகும்படியாகக் குட்டிய இளையவனே!

நாறு இதழி வேணி சிவ ரூப கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ... நறுமணம் கமழும் கொன்றையை அணிந்த சடாமுடியை உடைய சிவபெருமானுடைய பாகத்தில் அமர்ந்துள்ள கல்யாணியான உமாதேவி முன்பு ஈன்ற மகனே!  தேவானை மகிழும் மணாளனே!

வனம் மீது செறி ஞான குற மாதை தினை காவில் மணமேவு புகழ் மயில் வீரா...  வனத்திலே இருந்த ஞானக் குறமாதான வள்ளியைத் தினைப்புனத்தில் மணந்துகொண்ட மயில் வீரா!

ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம்... ஓலமிட்டுக்கொண்டு வந்த தாடகையும் சுபாகுவும் ஏழு மராமரங்களும்

வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக... வாலியும் அயோமுகியும் கும்பகன்னனும் விராதனும் அலைவீசும் கடலும் வலிமை மிகுந்த ராவணனும் அவன் கூட்டமும் போரிலே பொடிபட்டு அழியும்படியாக,

ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவே... தழல் வீசும் அம்புகளை உவகையோடு செலுத்தியவனும்; வலிமை மிக்க வில்லையும் சக்கரத்தையும் சங்கையும் கையில் ஏந்தியவனும்; திருமகள் உறையும் மார்பனும்; அரியும்; கேசவனுமான திருமாலின் மருகா என்றெல்லாம்,

ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே.... மறைகள் துதிக்கும் ராமேசுரத்தில் வீற்றிருக்கின்ற குமரா!  தேவர்கள் பெருமாளே!


சுருக்க உரை:

எல்லாவற்றுக்கும் ஆதாரமான பிரணவத்தின் பொருளை நான்கு முகங்களைக் கொண்ட பிரமனால் சொல்ல முடியாதவோது அவனுடைய சிரமும் குடுமியும் தெறித்துப் போகுமாறு குட்டிய இளையவனே! நறுமணம் கமழும் கொன்றையைச் சடாமுடியில் தரித்த சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் உமையம்மை முன்னர் பெற்ற மகனே! தேவானை விரும்பும் மணாளனே!  வள்ளி மலைக் காட்டிலே இருந்த ஞான வடிவான வள்ளியைத் தினைப்புனத்தில் மணந்துகொண்ட மயில் வீரனே! கூச்சலிட்டபடி வந்த தாடகையையும் சுபாகுவையும் ஏழு மரா மரங்களையும் வாலியையும் அயோமுகியையும் கும்பகன்னனையும் விராதனையும் அலை வீசும் கடலையும் வலிமை மிக்க ராவணனையும் அவனுடைய கூட்டங்களையும் போரில் அழிக்கும்படியாக மகிழ்ச்சியுடன் தழல்வீசும் அம்புகளைச் செலுத்தியவனும்; வலிய வில்லையும் சக்கரத்தையும் சங்கையும் தாங்கிய கைகளை உடையவனும் திருமகள் வாழும் மார்பை உடையவனுமான அரி என்றும் கேசவன் என்றும் போற்றப்படும் திருமால் மருகனே என்று வேதங்கள் போற்றிப் புகழ்கின்ற ராமேசுரத்தில் வீற்றிருக்கின்ற குமரனே! தேவர்கள் பெருமாளே!

வாலிபப் பருவத்தை அடைந்து; அழகு மிகுந்து மன்மதனை ஒத்து; ஊதியம் பெறுவதற்காகப் பணியிலும் வணிகத்திலும் அமர்ந்து மயங்கிப் போய்; காலத்தை வீணே கழித்து; பயனற்ற வாழ்க்கையையே சதம் என்று கொண்டு; மாடகூடங்களைக் கொண்ட செல்வந்தனாகப் பொருள்தேடி; நறுமணம் வீசும்ம புனுகு, மலர்கள் இவற்றில் மனத்தைப் பறிகொடுத்து; வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு; மயக்கத்துடன் விலைமகளிரிடம் விரும்பிச் சென்று; அவர்கள் மீது கொண்ட ஆசையாலே அலைப்புண்டு சிலகாலம் கழித்தபின்னர்,

தோல் சுருங்கி, நரைவிழுந்து, பார்வை மங்கி, கால்கள் தடுமாற, காது கேட்காமல், பசு, பதி, பாசம் என்ற முதற் பொருட்களைப் பற்றிய அறிவு அத்தனையும் கெட்டுப்போய், எல்லாச் சுகங்களையும் இழந்து தடியை ஊன்றிக்கொண்டு நடக்கும் முதுமை வரும் காலத்தில்,

சூலை, சொறி, கபம், வலிப்பு, வாதம், நீரிழிவு, ரத்தச் சோகை, கழுத்தைச் சுற்றிலும் ஏற்படும் வீக்கம், சுரம், இடைவிடாத இருமல் என்று இத்தனை நோய்களாலும் சூழப்பெற்று இந்த உடல் துர்நாற்றம் வீசும்படியான அருவருப்பான நிலையை அடைந்து மரிப்பேனோ? (அவ்வாறு மடியாமல் தடுத்தாட்கொள்ள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com