பகுதி - 727

தொழும் பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்
பகுதி - 727

பதச் சேதம்

சொற் பொருள்

எனக்கு என யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலம் தனில் ஓயா

 

 

எடுத்திடு காயம் தனை கொடு மாயும் இலச்சை இலாது என் பவம் ஆற

 

காயம்: உடல்; இலச்சை: லஜ்ஜை, வெட்கம்; பவம்: பிறவி;

உனை பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங்கு உளி மேவி

 

தங்கு உளி மேவி: தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று;

உணர்த்திய போதம் தனை பிரியாது ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ

 

போதம்: அறிவுரை; ஒண்: ஒளி வீசும்; பொல(ன்): அழகிய;

வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே

 

வினைத் திறமோடு: தொழில் வல்லமையோடு; எதிர்த்திடும் வீரன்: (இங்கே) மன்மதன்;

விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்பு உற வேதம் புகல்வோனே

 

விளப்பு: விளம்பு, சொல் (வலித்தல் விகாரம்); இடக்கு: இடக்கு செய்த, மறுத்த;

சினத்தொடு சூரன் தனை கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே

 

 

தினை புன மேவும் குற கொடியோடும் திருத்தணி மேவும் பெருமாளே.

 

 

எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் தனிலோயா ... எனக்காக எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்வதற்காக தினமும் சோர்ந்துபோகும்படியும்; பலகாலமாய் ஓய்வில்லாமலும்;

எடுத்திடு காயம் தனைக்கொடு மாயும் இலச்சை இலாதென் பவமாற ... (ஒவ்வொரு பிறவியிலும்) எடுக்கின்ற உடலோடு பிறந்து அந்த உடல் அழிந்துபடுகின்ற வெட்கம்கெட்ட என் பிறவிநோய் நின்றுபோவதற்காக,

உனைப்பல நாளுந் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங் குளிமேவி... உன்னைப் பல நாட்களாய்ப் திருப்புகழைப் பாடித் துதிப்பவர்கள் இருக்கின்ற இடங்களைச் சென்றடைந்து,

உணர்த்திய போதந் தனைப்பிரியாது ஒண்பொலச் சரண் நானுந் தொழுவேனோ?... (அவர்கள் எனக்கு) அறிவுறுத்துகிற மொழிகளைக் கடைப்பிடித்து ஒளிபொருந்திய உன் திருவடிகளைத் தொழுகின்ற பாக்கியத்தை அடியேன் பெறுவேனோ? (பெற அருள்புரிய வேண்டும்.)

வினைத்திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழக்கொடு வேள் கொன்றவன்... வில்வித்தையில் திறத்தோடு அன்று எதிர்த்து வந்த வீரனான மன்மதன் சாம்பலாகும்படியாக வீழ்த்திய சிவபெருமான்,

நீயே விளப்பென மேலென்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே... (பிரணவப் பொருளை) ‘நீயே எடுத்துரைப்பாயாக’ என்று சொல்ல, உனை (முதலில்) வணங்காத பிரமனும் மகிழ்ந்து கேட்கும்படியாக வேதத்தின் பொருளைச் சொன்னவனே!

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே... கொடிய வேலைக்கொண்டு சூரனுடைய சிரத்தினைச் சினத்தோடு அறுத்த முருகோனே!

தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந் திருத்தணி மேவும் பெருமாளே.... தினைப்புனத்தில் இருந்த குறமகளான வள்ளியோடு திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை: 

வில்லாற்றலோடு மலர்க்கணையை எய்ய வந்த மன்மதனை எரித்த சிவபெருமான், ‘பிரணவத்தின் பொருளை நீயே உரைப்பாய்’ என்று சொல்ல, முதலில் உன்னை வணங்காத பிரமனும் மகிழ்ந்து கேட்கும்படியாக வேதப் பொருளை உரைத்தவனே! கொடிய வேலாலே சூரனுடைய தலையைச் சினத்தோடு அரிந்த முருகோனே!  தினைப்புனத்தில் இருந்த குறமகள் வள்ளியோடு திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

 எனக்காக உடமைகளைச் சேகரித்துக்கொள்வதற்காக நாள்தோறும் உழைத்து, ஓய்ந்துபோய், ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு உடலோடு பிறந்து ஒவ்வொன்றும் இறந்து அழிந்துபட்டுக்கொண்டே இருக்கினற வெட்கம்கெட்ட என் பிறவிச் சுழலானது ஓயும்படியாக எப்போதும் உன் திருப்புகழைப் பாடும் அடியார்கள் இருக்கும் இடங்களை நாடிச் சென்று அவர்கள் சொல்லும் நல்லுரையின்படி நின்று உன் திருவடிகளைத் தொழும் பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com