பகுதி - 729

மயிலின் மீதேறிப் போர்புரிந்த வேலா!
பகுதி - 729

பதச் சேதம்

சொற் பொருள்

ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே

 

ஆகத்தே: உடலிலே; இக்கு: கரும்பு; தேறல்: தேன்;

ஆலம் பாலை போல கோலத்து ஆய காயம் பிறையாலே

 

ஆலம்: நஞ்சு; கோலத்தாய: அழகு பொருந்தியதான; காயம்: உடல்; பிறையாலே: பிறைச் சந்திரனாலே;

போகத்து ஏசற்றே தன் பாயல் பூவில் தீயில் கருகாதே

 

போகத்து: இன்ப அனுபவத்தில்; ஏசற்றே: விருப்பமுற்றே (ஏசறவு: விருப்பம்); பாயல்: படுக்கை;

போத காதல் போக தாளை பூரித்து ஆர புணராயே

 

போத: தப்பும்படியாக; போகத் தாள்: இன்பத்துக்கு இடமான திருவடி;

தோகைக்கே உற்று ஏறி தோயம் சூர் கெட்டு ஓட பொரும் வேலா

 

தோகைக்கே: மயிலிலே; தோயம்: (நீர், ஆகவே) கடல்; பொரும்: போரிடும்;

சோதி காலைப் போத கூவ தூவல் சேவல் கொடியோனே

 

சோதி: சூரியனை; போத: வரும்படியாக; தூவல்: இறகு;

பாகு ஒத்த சொல் பாகத்தாளை பாரித்து ஆர் நல் குமரேசா

 

சொல் பாகத்தாளை: சொல்லின் பக்குவம் உடையவளை; பாரித்து ஆர்: விரும்பிப் பூரித்த;

பாரில் காமத்தூரில் சீல பால தேவ பெருமாளே.

 

 

ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே... உடலில் குறிதப்பாமல் தைக்கின்ற; (மன்மதனுடைய) கரும்பு வில்லிலிருந்து புறப்படுகின்ற; தேன் நிறைந்த மலர்க் கணைகளாலும்;

ஆலப் பாலைப் போலக் கோலத்து ஆயக் காயப் பிறையாலே... விஷம் கொண்டதாகவும்; பால்போலும் அழகான வடிவத்தோடு காய்கின்ற நிலவாலும்;

போகத்து ஏசற்றே தன் பாயல் பூவில் தீயில் கருகாதே... இன்ப ரசத்தில் ஆவல்கொண்டு, தன் படுக்கையிலே நெருப்பில் விழுந்த பூவைப்போல கருகாமல்,

போதக் காதல் போகத் தாளைப் பூரித்து ஆரப் புணராயே... இவள் தப்பிக்கும்படியாக இன்பத்துக்கு இடமான உன்னுடைய திருவடியை (என் மகள்) அடைந்து மகிழுமாறு அவளை உன்னோடு சேர்த்துக்கொண்டு அருளவேண்டும்.

தோகைக்கே உற்று ஏறித் தோயம் சூர் கெட்டு ஓடப் பொரும் வேலா... மயிலின்மீது ஏறிக்கொண்டு கடலுக்குள் நின்ற சூரபத்மன் நிலைகெட்டு ஓடும்படியாகப் போர்புரிந்த வேலா!

சோதிக் காலைப் போதக் கூவு அத் தூவல் சேவல் கொடியோனே... காலையிலே சூரியன் உதிக்கும்படியாகக் கூவுகின்ற இறகுடைய சேவலைக் கொடியாகக் கொண்டவனே!

பாகு ஒத்தே சொல் பாகத்தாளைப் பாரித்து ஆர் நல் குமரேசா... வெல்லப் பாகுக்கு இணையான சொல்லினிமை கொண்டவளான வள்ளியை விரும்பி உள்ளம் மகிழ்கின்ற குமரேசா!

பாரில் காமத்தூரில் சீலப் பாலத் தேவப் பெருமாளே.... இவ்வுலகிலே காமத்தூர் தலத்திலே சீலம் நிறைந்த குழந்தை வடிவில் அமர்திருக்கும் தேவர்களின் பெருமாளே!

சுருக்க உரை:

கடலுக்குள் நின்ற சூரன் நிலைகெட்டு ஓடும்படியாக மயிலின் மீதேறிப் போர்புரிந்த வேலா!  காலையில் சூரியன் உதிக்கும்படியாகக் கூவுகின்ற சேவலைக் கொடியிலே கொண்டிருப்பவனே! வெல்லப்பாகுக்கு இணையான இனிய சொற்களைக் கொண்ட வள்ளியை விரும்பி மனம் மகிழும் குமரேசா! காமத்தூர் என்னும் தலத்திலே குழந்தைவடிவாக அமர்ந்திருக்கின்ற தேவர்களின் பெருமாளே!

மன்மதனுடைய கரும்பு வில்லிலிருந்து கிளம்பி உடலில் தவறாமல் தைக்கின்ற மலர்பாணங்களாலும்; விஷத்தை உமிழ்வதைப் போலவும் பால்போலவும் காய்கின்ற நிலவாலும் இன்பரசத்தை விரும்புகின்ற என் மகள் படுக்கையிலே தீப்பட்ட மலரைப்போலக் கருகிப் போகாமல் உன்னுடைய திருப்பாதத்தில் சேர்த்துக்கொண்டு மகிழ்ச்சியடையச் செய்யவேண்டும். (எப்போதும் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும் அடியார்களை உன் திருப்பாதத்தில் சேர்த்துக்கொண்டு அருளவேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com