பகுதி - 733

தாலாட்டுப் பாடாமலும்
பகுதி - 733

பதச் சேதம்

சொற் பொருள்

பாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ

 

பாராவாரம்: கடல்; பாராவாரத்து அமுது: கடலிலிருந்து கடைந்தெடுத்த அமுதம்;

பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான் முத்து என நீள

 

வேள்: மன்மதன்; வேள் ஏர்: மன்மதனை ஒத்த; பானோ: பானுவோ—சூரியனோ; வான்முத்து: சிறந்த முத்து;

தாலோ தாலேலோ பாடாதே தாய்மார் நேசத்து உ(ன்)னு சாரம்

 

உன்னு: நினைக்கும்; சாரம்: தனசாரம்—முலைப்பால்;

தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏச தகுமோ தான்

 

 

ஆலோல் கேளா மேலோர் நாள் மால் ஆனாது ஏனல் புனமே போய்

 

ஆலோல்: (கிளியை விரட்டும்போது பாடும்) ஆலோலம்; மேலோர் நாள்: மேல் ஓர் நாள்; மால்: விருப்பம்; ஆனாது: குறையாமல்; ஏனல்: தினை;

ஆயாள் தாள் மேல் வீழா வாழா ஆளா வேளை புகுவோனே

 

ஆயாள்: ஆய்+ஆள் (ஆய்:தாய்) தாயான வள்ளி; வேளை புகுவோனே: காவல் செய்தவனே;

சேலோடு சேர் ஆரால் சாலார் சீர் ஆரூரில் பெரு வாழ்வே

 

சேலோடு: மீனோடு; ஆரால்: ஆரல் மீன்;

சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே.

 

சேயே: சிவந்த நிறத்தை உடையவனே;

பாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ... (மழலைச் செல்வமே நீ) பாலோ, தேனா, வெல்லப் பாகோ, தேவர்கள் பாற்கடலிலிருந்து கடைந்தெடுத்த அமுதமோ (என்றும்);

பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான்முத்தென... இவ்வுலகத்தவருடைய சிறப்பான பொருளோ, மன்மதனுக்கு இணையான வாழ்வோ, சூரியனோ, சிறந்த முத்தோ என்று இவ்வாறெல்லாம்,

நீளத் தாலோ தாலேலோ பாடாதே தாய்மார் நேசத்து உனு சாரந் தாராதே... தாய்மார் நீள நெடுகத் தாலாட்டுப் பாடாமலும் என்னை அன்போடு நினைத்து முலைப்பால் ஊட்டாமலும்;

பேர் ஈயாதே பேசாதே ஏசத் தகுமோதான்... புகழ்வதற்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும்; என்னோடு பேசாமலும் நான் ஏச்சுக்கு இடமாக வாழ்வது தகுமோ?

ஆலோல் கேளா மேலோர் நாள் மால் ஆனாது ஏனற்புனமேபோய்... (தினைப்புனத்தில் வள்ளி பாடிய) ஆலோலத்தைக் கேட்டு முன்னொரு நாள் ஆவல் குறையாமல் தினைப்புனத்துக்குப் போய்,

ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப்புகுவோனே... தாயான வள்ளியின் பாதங்களில் விழுந்தும்; அதனால் ‘வாழ்வுற்றேன்’ என்று மகிழ்ந்தும் (தினைப்புனத்தைக்) காத்தவனே!

சேலோடே சேர் ஆரால் சாலார் சீர் ஆரூரிற் பெருவாழ்வே... சேல் மீன்களும் ஆரல் மீன்களும் நிறைந்துள்ள சீர்மையுள்ள திருவாரூரின் பெருவாழ்வே!

சேயே வேளே பூவே கோவே தேவே தேவப்பெருமாளே.... சிவந்த நிறத்தைக் கொண்டவனே! தலைவனே! பொலிவுள்ளவனே! தலைவனே! தேவனே! தேவப் பெருமாளே!


சுருக்க உரை:

முன்னொரு நாளில் வள்ளியம்மை தினைப்புனத்தில் கிளிகடிவதற்காகப் பாடிய ஆலோலத்தைக் கேட்டு அவர்மீது விருப்பம்கொண்டு தினைப்புனத்துக்குச் சென்று அவர் பாதத்தில் விழுந்து, ‘வாழ்வுற்றேன்’ என்று மகிழ்ந்து புனம் காக்கும் வேளைக்காரனாக நின்றவனே! சேல் மீன்களும் ஆரல் மீன்களும் நிறைந்திருக்கின்ற திருவாரூரின் பெருவாழ்வே! சிவந்த நிறத்தைக் கொண்டவனே! தலைவனே! பொலிவுள்ளவனே! தலைவனே! தேவனே! தேவப் பெருமாளே!

தாயார் என்னை அள்ளியெடுத்து, ‘நீ பாலோ, தேனோ, வெல்லப் பாகோ, தேவர்கள் கடலிலிருந்த கடைந்தெடுத்த அமுதமோ, உலகத்தில் சிறப்பு மிக்க பொருளோ, மன்மதனுக்கு இணையானவனோ, சூரியனோ என்றெல்லாம் சீராட்டித் தாலேலோ எனத் தாலாட்டுப் பாடாமலும்; என்னிடத்தில் அன்புகொண்டு தாய்ப்பால் கொடுக்காமலும்; புகழ்ச்சிக்குரிய எந்தப் பெயரையும் சூட்டாமலும்; என்னோடு பேசாமலும் நான் பழிக்கு ஆளாவது தகுமோ? (அடியேன் பழிக்கு ஆளாகாமல் காத்தருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com