பகுதி - 734

வறுமையாகிய தீயின் மேற்கிடந்து புழுவைப்போல்
பகுதி - 734

‘வறுமையாகிய தீயின் மேற்கிடந்து புழுவைப்போல் நெளியும் அடியேனுக்கு இரங்கி அருளவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருநெல்வாயில் தலத்துக்கானது.  அடியார்களுடைய எல்லாவிதமான வறுமைகளையும் ஒழிக்கும் பாடல்.  ‘சிவபுரி’ என்றும் அறியப்படும் திருநெல்வாயில் தலம் சிதம்பரத்துக்குத் தென்கிழக்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.  திருஞான சம்பந்தரின் பாடல்பெற்ற தலம்.

அடிக்கு 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  எல்லாச் சீர்களிலும் சமமாக மூன்று மூன்று எழுத்துகளே பயில்கின்றன என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான அமைப்பைக் கொண்டிருப்பதைக் காணலாம். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் இரண்டு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்தும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக அமைந்துள்ளன.


தனன தானன தானதாத் தனந்த
      தனன தானன தானதாத் தனந்த
      தனன தானன தானதாத் தனந்த தனதான

அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
         பகரும் நாவினர் லோபர்தீக் குணங்க
         ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் புனையாதர்

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
         திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
         யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் தெரியாத

நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
         பொருள்செய் பூரியர் மோகனமாய்ப் ப்ரபஞ்ச
         நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த          தமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
         வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
         நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி யருள்வாயே

நறிய வார்குழல் வானநாட் டரம்பை
         மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
         நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து களிகூர

நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
         தகுவார் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
         நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி யிடர்கூர

மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
         கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
         வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த வடிவேலா

மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
         மதியு லாவிய மாடமேற் படிந்த
         வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com