பகுதி - 735

உலகில் பிறந்ததே வீண்
பகுதி - 735

பதச் சேதம்

சொற் பொருள்

அறிவு இலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள் அதிக பாதகர் மாதர் மேல் கலன்கள் புனை ஆதர்

 

ஈனர்: இழிவானவர்கள்; லோபர்: கருமிகள்; ஆதர்: அறிவற்றவர்கள்;

அசடர் பூ மிசை வீணராய் பிறந்து திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத

 

பூமிசை: உலகத்தின் மேல்; மாலினர்: மயக்கம் கொண்டவர்கள்;

நெறி இலாதவர் சூதினால் கவர்ந்து பொருள் செய் பூரியர் மோகமாய் ப்ரபஞ்ச நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி

 

பூரியர்: கீழ்மக்கள், கொடியவர்;

நினைவு பாழ் பட வாடி நோக்கு இழந்து வறுமையாகிய தீயின் மேல் கிடந்து நெளியு நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே

 

நோக்கு இழந்து: கண்பார்வை இழந்து;

நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி நகை கொடு ஏழிசை பாடி மேல் பொலிந்து களிகூர

 

வேட்டு: விரும்பி; நகைகொடு: சிரிப்புடன்; ஏழிசை: ஏழு ஸ்வரங்களைக் கொண்ட இசை (குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் அல்லது ஸ ரி க ம ப த நி);

நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர

 

தடிந்த: அழிவு செய்த; நசை பொறாது: ஆசையை அடக்க முடியாமல்--ஆற்றாமையோடு; தகுவர்: அசுரர்; ஆகம் மாய்த்து: உடலைத் துன்புறுத்தி;

மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து கவடு கோடியின் மேலுமாய் பரந்து வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடிவேலா

 

கவடு: கிளை; மா: மாமரம்;

மருவு காள முகீல்கள் கூட்டெழுந்து மதி உலாவிய மாடம் மேல் படிந்த வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே.

 

காள: கரிய; காள முகில்: கரிய மேகம்; முகீல்: முகில் என்பதன் நீட்டல் விகாரம்;

அறிவி லாதவர் ஈனர் பேச்சிரண்டு பகரு நாவினர் லோபர்... அறிவற்றவர்கள்; இழிவானவர்கள்; இரட்டை நாக்கை உடையவர்கள் (மாற்றி மாற்றிப் பேசுபவர்கள்);

தீக் குணங்கள் அதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் புனையாதர்... தீய குணங்களை அதிகமாக உடைய பாதகர்கள்; (பொதுப்) பெண்களுக்கு ஆபரணங்களைப் புனைவிக்கும் அறிவற்றவர்கள்;

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து திரியு மானுடர் பேதைமார்க்கு இரங்கி யழியு மாலினர்... அசடர்கள்; உலகில் பிறந்ததே வீண் என்று சொல்லும் வண்ணமாகத் திரிபவர்கள்; பெண்களிடத்திலே மோகம்கொண்டு அழிகின்றவர்கள்;

நீதிநூற் பயன்கள் தெரியாத நெறியிலாதவர்... நீதி நூல்கள் சொல்லும் நல்லுரைகளை அறியாதவர்கள்; நெறியற்றவர்கள்;

சூதினாற் கவர்ந்து பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பால் சிறந்த தமிழ்கூறி .... மற்றவர் பொருட்களைச் சூதாட்டத்தால் கவர்ந்துகொள்கின்ற கீழ்மக்கள்; மோகவசப்பட்டு உலக இன்பத்தில் வீழ்கின்ற மூடர்கள் என்று இத்தகையவர்களிடத்திலே சென்று சிறந்த தமிழ்ப் பாடல்களைப் பாடி;

நினைவு பாழ்பட வாடிநோக்கு இழந்து வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து நெளியு நீள்புழு வாயினேற்கு இரங்கி யருள்வாயே... நினைவு கெட்டுப்போய் வாட்டம் அடைந்து, பார்வையை இழந்து, வறுமை என்னும் தீயின்மேல் கிடந்து நெளிகின்ற புழுவான எனக்கு இரங்கி அருளவேண்டும்.

நறிய வார்குழல் வானநாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள்வேட்டு இணங்கி நகைகொடு ஏழிசை பாடிமேற் பொலிந்து களிகூர...நறுமணத்தைக் கொண்ட நீண்ட கூந்தலை உடைய தேவலோகத்துப் பெண்கள் தங்கள் காதலர்களுடைய தோளை விரும்பி, ஆரத் தழுவி, புன்னகையோடு ஏழிசை பாடி மகிழ்ச்சி அடையும்படியும்;

நடுவிலாத குரோதமாய்த் தடிந்த தகுவர் மாதர் மணாளர்தோட் பிரிந்து நசைபொறாது அழுது ஆகமாய்த்து அழுங்கி யிடர்கூர...நடுவுநிலைமையற்ற, கோபம் மிக்க, அழிவு கருதுகின்ற அசுரர்களில் மனைவியர் தங்கள் கணவர்களுடைய தோள்களைப் பிரிந்து ஆற்றாமையோடு உடலை வருத்தித் துன்பத்தை அடையும்படியும்;

மறியும் ஆழ்கடலூடு போய்க் கரந்து கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து வளரு மா இரு கூறதாய்த் தடிந்த வடிவேலா... அலைவீசும் ஆழமான கடலுக்கடியில்போய் ஒளிந்துகொண்டு, கோடிக்கும் மேற்பட்ட கிளைகளைப் பரப்பியபடி மாமரமாக நின்ற சூரன் இரண்டு கூறுகளாகும்படி வெட்டிப் பிளந்த வேலா!

மருவு காள முகீல்கள்கூட் டெழுந்து மதியு லாவிய மாடமேற் படிந்த வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த பெருமாளே... சூழ்ந்திருக்கும் கருமேகங்கள் ஒன்றுகூடி எழுந்து சந்திரனைத் தொடும்படியாக உயர்ந்த மாடங்களின்மீது படிகின்ற (தன்மையையுடைய) திருநெல்வாயிலில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

நறுமணம் கமழும் நீண்ட கூந்தலையுடைய தேவலோகத்து மகளிர் தங்களுடைய காதலர்களுடைய தோள்களைத் தழுவிக்கொண்டும் இன்னிசை பாடிக்கொண்டும் புன்னகைத்தபடி மகிழ்ச்சியாக இருக்கும்படியாகவும்; நடுவுநிலைமையற்ற, கோபம் மிக்க, அழிவை நாடுகின்ற அரக்கர்களின் மனைவியர் தங்கள் கணவர்களுடைய தோள்களைப் பிரிந்து ஆற்றாமையோடு உடலை வருத்தித் துன்பத்தை அடையும்படியாகவும்—அலைவீசும் கடலுக்கடியில் ஆழத்தில் போய் ஒளிந்துகொண்டு, கோடிக்கு மேற்பட்ட கிளைகளைப் பரப்பியபடி மாமரமாக நின்ற சூரன் இரண்டு கூறாகும்படி வெட்டி வீழ்த்திய வேலா! நிலவைத் தொடும்படியாக உயர்ந்த மாடங்களில் கரிய முகில்கள் சூழ்ந்திருக்கின்ற திருநெல்வாயிலில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

அறிவற்றவர்களும் இழிவானவர்களும் இரட்டை நாக்கை உடையவர்களும் கருமிகளும் தீய குணங்களை உடையவர்களும் பொதுப்பெண்களுக்கு ஆபரணம் பூட்டுபவர்களும் அசடர்களும் பூமியில் வீணே காலம் கழிப்பவர்களும் பெண்களின் மீது மோகம் கொண்டவர்களும் நீதி நூல்களின் நெறியில் நடக்காதவர்களும் பிறர் பொருளைச் சூதாட்டத்தில் கவர்பவர்களும் ஆசையின் பெருக்கத்தால் உலக இன்பங்களையே இச்சித்திருப்பவர்களுமான மூடர்களிடம் சென்று,

மிகச் சிறந்த தமிழ்ப் பாக்களைப் பாடி; நினைவழிந்து பாழாகி வாட்டமடைந்து பார்வையும் கெட்டுப்போய் வறுமை என்னும் நெருப்பில் புழுவாக நெளிகின்ற அடியேன்மீது இரக்கம் கொண்டு அருள்புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com