பகுதி - 739

கரிய ரேகைகளை உடையதும்
பகுதி - 739

பதச் சேதம்

சொற் பொருள்

திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே

 

உனதுழி: உன்னிடத்தில்; பணிசெய: வணங்கி நிற்க; குளவோனே: குளத்தில் (சரவணப் பொய்கையில்) தோன்றியவனே;

திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு தெறி பட மறுகிட விடுவோனே

 

திறல்: ஒளி; அமணரை: சமணரை; தெறிபட: சிதறிட; மறுகிட: கலக்கமுற;

ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எ(ன்)னை அருள்வாயோ

 

ஒருவுஅறும்: (ஒருவுதல்: ஒத்திருத்தல்) ஒப்பில்லாத; பரிவிலர்: அன்பற்றவர்கள்; படர் உறும்: துன்பத்தை அனுபவிக்கும்;

உலகினில் அனைவர்கள் புகழ் உற அருணையில் ஒரு நொடி தனில் வரு(ம்) மயில் வீரா

 

அருணையில்: திருவண்ணாமலையில்;

கரு வரி உறு பொரு கணை விழி குற மகள் க(ண்)ணின் எதிர் தரு என முனம் ஆனாய்

 

கருவரி: கரிய வரிகள்; தரு என: (வேங்கை) மரம் என;

கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே

 

பொரு: ஒப்பான;

முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட முரண் உறும் அசுரனை முனிவோனே

 

முருகு: நறுமணம்; அலர்: மலர்; தரு: (கற்பக) விருட்சம்; முரண் உறும்: பகைகொள்ளும்;

முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு(ம்) பெருமாளே.

 

சுசிகரம்: மேன்மையான; முதுகிரி: விருத்தாசலம்;

திருமொழி யுரைபெற அரன் உனதுழி பணிசெய முனம் அருளிய குளவோனே... திருமொழியாக விளங்குகின்ற பிரணவத்தின் பொருளைப் பெறுவதற்காக சிவபெருமான் உன்னை வணங்கி நிற்க, அப்பொருளை அவருக்கு முன்னர் உபதேசித்தவனே; பொய்கையில் அவதரித்தவனே!

திறலுயர் மதுரையில் அமணரை உயிர்கழு தெறிபட மறுகிட விடுவோனே... ஒளி மிகுந்த மதுரையில் சமணர்களின் உயிரைக்* கழுமரத்தில் கலங்கவும் சிதறவும் செய்தவனே!

(* சமணர்களோடு வாதிட்ட திருஞானசம்பந்தராக வந்தது முருகனே என்பது அருணகிரி நாதரின் கருத்து.)

ஒருவு அரும் உனதருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறுமெனை யருள்வாயோ... ஒப்பற்ற உன்னுடைய திருவருளிலே அன்பற்றவர்களைப் போலத் துன்பத்தை அனுபவிப்பவனாகிய எனக்கு அருள்புரிவாயோ? (அருள்புரிய வேண்டும்.)

உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தனில்வரு மயில்வீரா... உலகிலே இருக்கின்ற எல்லோரும் புகழும்படியாகத் திருவாண்ணாமலையில் ஒருநொடிப்போதிலே மயில்மீது வந்தருளிய* வீரனே!

(* அருணகிரியாரும் சம்பந்தாண்டானும் வாதிட்ட சமயத்திலே ‘தேவியைச் சபையிலே வரவழைப்பேன்’ என்று சவால்விட்ட சம்பந்தாண்டானால் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. அருணகிரியார் ‘அதல சேடனாராட’ என்ற பாடலைப் பாடுகையில் முருகன் மயில்மீது தோன்றியருளினான்.  அச்சம்பவம் இங்கே குறிப்பிடப்படுகிறது.)

கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் கணினெதிர் தருவென முனமானாய்... கரிய வரிகள் உடையதும் அம்பை ஒத்ததுமான விழிகளைக் கொண்ட குறமகளான வள்ளியின் கண்களுக்கு எதிரிலேயே முன்னம் வேங்கை மரமாக ஆனவனே!

கருமுகில் பொருநிற அரிதிரு மருமக கருணையில் மொழிதரு முதல்வோனே... கரிய முகிலை ஒத்த வண்ணமுளைடய திருமாலின் திருமருகனே! கருணையோடு எனக்கு உபதேச மொழியை அருளிய முதல்வனே!

முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட முரணுறு மசுரனை முனிவோனே... நறுமணம் கமழ்கின்ற மலரை உடைய கற்பக மரத்தின் அடியில் வாழ்கின்ற தேவர்கள் சிறையிலிருந்து விடுபடுமாறு பகைமையுடைய அசுரனான சூரனைச் சினந்தவனே!

முடிபவர் வடிவறு சுசிகர முறை தமிழ் முதுகிரி வலம்வரு பெருமாளே.... (விருத்தாசலத்தில்) இறப்பவர்கள் மீண்டும் பிறக்காமல் செய்கின்ற தூய்மையை உடையதும் தமிழிலே முதுகிரி எனப்படுவதுமான விருத்தாசலத்தில் வெற்றியோடு எழுந்தருளியிருக்கும் பெருமாளே!


சுருக்க உரை:

உலகத்தவர் யாவரும் புகழும்படியாகத் திருவண்ணாமலையில் ஒரு நொடிப்போதில் மயில்மீது தோன்றியருளியவனே!  கரிய ரேகைகளை உடையதும் அம்பை ஒத்ததுமான விழிகளைக் கொண்ட வள்ளியின் கண்ணுக்கு எதிரிலேயே வேங்கை மரமாகக் காட்சியளித்தவனே! கரிய மேகத்தின் வண்ணத்தைக் கொண்டவரான திருமாலின் மருகனே! அடியேனுக்குக் கருணையோடு உபதேச மொழியைத் தந்தருளிய முதல்வனே! நறுமணம் கமழும் மலர்களைக் கொண்ட கற்பக விருட்சத்தின் அடியில் தங்குகின்ற தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக அசுரனான சூரனைச் சினந்தவனே!  (விருத்தாசலத்தில்) இறந்தவர்கள் மீண்டும் பிறவாதபடிச் செய்கின்ற தூய்மையை உடையதான முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு எழுந்தருளியிருப்பவனே!

பிரணவத்தின் பொருளை விளக்கவேண்டும் என்று சிவபெருமான் உன்னைப் பணிய அவருக்கு அப்பொருளை உபதேசித்தவனே! பொய்கையில் தோன்றியவனே! (திருஞான சம்பந்தராகத் தோன்றி) ஒளி நிறைந்த மதுரையில் சமணர்களோடு வாதிட்டு அவர்களுடைய உயிரைக் கழுவிலே சிதறுண்ணச் செய்தவனே! இணையற்ற உன் திருவருளில் அன்பற்றவனைப் போலத் துன்பத்தை அனுபவிப்பவனாகிய எனக்கு அருள்புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com