பகுதி - 741

பகுதி - 741

நெருக்கியடித்துக்கொண்டு வந்த

பதச் சேதம்

சொற் பொருள்

குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோல் இடை குளு குளு எனும்படி மூடிய மலம் மாசு

 

நிணம்: கொழுப்பு; என்பு: எலும்பு;

குதி கொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய

 

குரம்பை: உடல்;

அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று

 

அடலை: சாம்பல்; அவாவியே: விரும்பியே; அநவரதம்: எப்போதும்; சாரம் இலாத: பயனற்ற; அவுடதமும்: ஔடதமும்—மருந்துகளும்; முயலா நின்று: முயன்று (பயன்படுத்திப்) பார்த்து;

அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம் அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ

 

அலமரும்: மயங்கும்; ஆகுலம்: துன்பம்; அலம் அலம்: போதும் போதும்; தண்டை விடா மலர்: தண்டை சூழ்ந்துள்ள மலரடி;

இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக

 

மண்டும்: நெருங்கும்; நிசாசரர்: இரவில் உலவுபவர் (அசுரர்கள்); அடைய: அனைவரும்; எழு பூதரம்: ஏழு மலைகள்; மகோததி: மகா உததி, பெருங்கடல்; வறிதாக: வற்றிப் போக;

இமையவரும் சிறை போய் அவர் பதியுள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஓராயிரம் முகமான

 

ஆதர: ஆதரவாளனே; எழில் படம் ஒன்றும்: அழகிய படங்கள் பொருந்தும்;

விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர்

 

விடதர: விஷத்தைத் தரிப்பதாகிய; கஞ்சுகி: பாம்பு; வெயில் நகை: சினச் சிரிப்பு; புராரி: புரத்தை அழித்தவர்—சிவன்; மதனகோபர்: மன்மதனைக் கோபித்தவர்—சிவன்;

விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம் தனில் மேவிய பெருமாளே.

 

பகீரதி: பாகீரதி—கங்கை;

குடல்நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பிவை தோலிடை குளுகுளெ னும்படி மூடிய... குடலையும் கொழுப்பையும் எலும்பையும் மாமிசத்தையும் பரவியுள்ள குருதியையும் நரம்புகளையும் தோலுக்குள்ளே இட்டு ‘குளுகுளு’வென மூடியிருக்கிற;

மலமாசு குதிகொளும் ஒன்பது வாசலை யுடைய குரம்பையை நீரெழு குமிழியி னுங்கடிதாகியெ அழிமாய... மலமும் மாசும் நிறைந்திருக்கின்ற ஒன்பது துவாரங்களை உடைய இந்த உடலை; தண்ணீரிலே எழுகின்ற நீர்க்குமியைக் காட்டிலும் வேகமாக அழிகின்ற மாயமானதும்;

அடலை யுடம்பை யவாவியெ அநவரதஞ்சில சாரமில் அவுடதமும்பல யோகமு(ம்)... சாம்பலாகிப் போவதுமான இந்த உடலை விரும்பி சதாசர்வ காலமும் பயனற்ற மருந்துகளையும் பலவிதமான யோகப் பயிற்சிகளையும்,

முயலாநின்று அலமரு சிந்தையி னாகுலம் அலம் அலம் என்றினி யானுநின் அழகிய தண்டைவிடாமலர் அடைவேனோ...மேற்கொண்டு மயக்கம்கொள்கின்ற மனம் படுகின்ற துன்பம் போதும் போதும். எப்போதும் தண்டையை அணிந்திருக்கின்ற உன்னுடைய மலர்ப்பாதங்களை நான் எப்போது அடைவேனோ. (உடனே அடையும்படியாகத் திருவருள் புரியவேண்டும்.)

இடமற மண்டு நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக... இடைவெளியே இல்லாதபடி நெருக்கியடித்து வருகின்ற அரக்கர்கள் எல்லோரும் இறக்கும்படியாகவும்; ஏழு குலபர்வதங்களும் பொடியாகும்படியாகவும்; (காண்பதற்கு) இனிதான பெருங்கடல் வற்றிப் போகும்படியாகவும்;

இமையவருஞ்சிறை போய் அவர் பதியுள் இலங்க விடு ஆதர எழில்படம் ஒன்றும் ஒராயிர முகமான விடதர கஞ்சுகி... தேவர்கள் சூரனுடைய சிறையிலிருந்து விடுபட்டு அவர்களுடைய அமராவதிப் பட்டணத்தில் மீண்டும் குடியேறும்படியாகவும் வைத்த ஆதரவாளனே! அழகிய படங்களைக் கொண்ட ஆயிரம் முகங்களை உடைய விஷத்தைத் தரித்திருக்கின்ற ஆதிசேஷனாகிய (நாண் இழுபட்டு);

மேருவில் வளைவதன் முன் புர நீறெழ வெயில்நகை தந்த புராரி மதனகோபர்... மேருவாகிய வில் வளைக்கப்படும் முன்னரேயே திரிபுரத்தைத் தன் கோபமான புன்னகையால் எரித்தவரும்; மன்மதனைச் சினந்து கண்ணழலாலே பொசுக்கியவருமான சிவபெருமானுடைய,

விழியினில் வந்து பகீரதி மிசைவளருஞ்சிறுவா வட விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே.... நெற்றிவிழியிலிருந்து பொறியாகப் புறப்பட்டு, கங்கையில் வளர்ந்த சிறுவனே! வடவிஜயபுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

காலியிடம் ஏதுமில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வந்த அரக்கர்கள் அனைவரும் இறந்துபோகும்படியும்; குலகிரிகள் ஏழும் பொடிபடும்படியும்; அழகிய கடல் வற்றிப்போகும்படியும்; தேவர்கள் சூரனுடைய சிறையிலிருந்து விடுபட்டு அவர்களுடைய தேவலோகத்தில் மீண்டும் குடியேறும்படியும் செய்வித்த ஆதரவாளனே! ஆயிரம் அழகிய படங்கள் பொருந்தியிருக்கும் ஆதிசேஷனாகிய நாண் இழுபட்டு, மேருவாகிய வில் வளைக்கப்படுவதற்கு முன்னரேயே தன்னுடைய கோபப் புன்னகையால் திரிபுரங்களை எரித்தவரும்; காமனைக் கண் அழலால் பொசுக்கியவருமான சிவபெருமானுடைய நெற்றிவிழியில் பொறியாகக் கிளம்பி கங்கையாற்றில் வளர்ந்தவனே! வடவிஜயபுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், குருதி, நரம்பு இவை அனைத்தையும் தோலாலே மூடி ‘குளுகுளுவென்று’ மூடியிருப்பதும்; மலமும் மாசுகளும் நிறைந்ததுமான இந்த உடலை விரும்பி, பயனற்ற மருந்துகளை உட்கொண்டும் யோக முறைகளைப் பயின்றும் வேதனைப்படுகின்ற இந்தத் துன்பம் போதும், போதும்.  இதை நான் என்றைக்கு உணர்ந்து தண்டையணிந்த உன்னுடைய மலர்ப்பாதத்தை அடைவேன்? (இப்போதே உணர்ந்து உன் மலர்ப்பாதத்தை அடையும்படி அருளவேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com