பகுதி - 743

இளமையையும் சோதியையும்
பகுதி - 743

பதச் சேதம்

சொற் பொருள்

கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள்காண்

 

தருண: இளமையான; அத்திமுக: யானை முக; சகோத்ர: சகோதரனான;

கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குரு நாத பெருமாள் காண்

 

கத்தர்: தலைவர்;

வித்துருப ராமருக்கு மருகான வெற்றி அயில் பாணி பெருமாள் காண்

 

வித்துருப: விந்துரூப—மழைமேகத்தின் வண்ணத்தைக் கொண்ட; மருகான: மருகனான; அயில்: கூர்மை, ஆகுபெயராக வேல்;

வெற்பு உள கடாகம் உட்கும் திர வீசு வெற்றி மயில் வாக பெருமாள் காண்

 

வெற்பு: மலை; கடாகம்: அண்ட கோளம்; உட்கும்: அஞ்சும்; திர: தீர, வலிமையுடன்;

சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு(ம்) திக்கினின் இ(ல்)லாத பெருமாள் காண்

 

திக்கினின் இலாத பெருமாள்: எந்தத் திக்கிலும் இல்லாத (அழகுள்ள) பெருமாள்;

தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண்

 

ஒத்தி: தாளமிட்டு;

சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண்

 

விர: வீர;

துப்பு வ(ள்)ளியோடும் அப்புலியூர் மேவு சுத்த சிவ ஞான பெருமாளே.

 

துப்பு: தூய;

கைத்தருண சோதி அத்திமுக வேத கற்பக சகோத்ரப் பெருமாள்காண்... துதிக்கையையும் இளமையையும் சோதியையும் யானைமுகத்தையும் கொண்ட வேதப் பொருளான கற்பக விநாயகனின் இளவலான பெருமாள் நீயல்லவா.

கற்பு சிவகாமி நித்யகலியாணி கத்தர்குரு நாதப் பெருமாள்காண்... கற்பரசியும் சிவகாமியும் நித்திய கல்யாணியுமான உமாதேவியின் தலைவரான சிவனாருக்குக் குருநாதனான பெருமாள் நீயல்லவா.

வித்துருப ராமருக்கு மருகான வெற்றி அயில் பாணிப் பெருமாள்காண்... மழைபொழியும் மேகத்தின் வண்ணத்தை உடைய ராமனுக்கு மருமகனும் வெற்றி வேலைக் கரத்தில் ஏந்ததியவனுமான பெருமாள் நீயல்லவா.

வெற்புள கடாகம் உட்குதிர வீசு வெற்றிமயில் வாகப் பெருமாள்காண்... மலைகள் நிறைந்த அண்டகோளங்கள் அஞ்சும்படியாகத் தோகையை வீசுகின்ற வெற்றி மயிலை வாகனமாக உடைய பெருமாள் நீயல்லவா.

சித்ரமுகம் ஆறு முத்துமணி மார்ப திக்கினில் இலாதப் பெருமாள்காண்... அழகிய ஆறு முகங்களையும்; முத்துமணி மாலைகளை அணிந்த மார்பையும் கொண்ட, எந்தத் திக்கிலும் காணமுடியாத பேரழகனான பெருமாள் நீயல்லவா.

தித்திமிதி தீதென ஒத்திவிளையாடு சித்திரகுமாரப் பெருமாள்காண்... தித்திமிதி தீதீ என்ற தாளம்கொட்டி விளையாடுகின்ற அழகிய குமாரப்பெருமாள் நீயல்லவா.

சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை தொட்ட கவி ராஜப் பெருமாள்காண்... சுத்த வீரனும்; சூரர்கள் அழியும்படியாக வேலை வீசியவனும்; கவிராஜனுமாகிய பெருமாள் நீயல்லவா.

துப்புவளி யோடும் அப்புலியுர் மேவு சுத்தசிவ ஞானப் பெருமாளே.... தூய வள்ளியோடு புலியூர் எனப்படும் அந்தச் சிதம்பரத்தில் வீற்றிருக்கின்ற சுத்தசிவ ஞான உருவமாக விளங்குகின்ற பெருமாளே.


சுருக்க உரை:

துதிக்கையையும் இளமையையும் சோதியையும் யானை முகத்தையும் கொண்டவரும் வேதப்பொருளாக விளங்கும் கற்பகவிநாயகரின் சகோதரன் அல்லவா நீ.  கற்பரசியும் சிவகாமியும் நித்திய கல்யாணியுமான உமாதேவியாரின் தலைவரான சிவபெருமானின் குருநாதன் அல்லவா நீ.  மேக வண்ணனான ராமனுடை மருகன் அல்லவா நீ.  மலைகள் நிறைந்த அண்டங்களெல்லாம் அஞ்சும்படியாகச் சிறகை வீசும் மயிலை வாகனமாகக் கொண்டவன் அல்லவா நீ.  அழகிய ஆறு முகங்களையும் முத்துமணிகளை அணிந்த மார்பையும் கொண்டு, எந்தத் திக்கிலும் காணமுடியாத அழகனல்லவா நீ.  தித்திமிதி தீதீ என்று தாளம் கொட்டி விளையாடும் குமாரப் பெருமாள் அல்லவா நீ. சுத்த வீரனும்; சூரன் அழியும்படியாக வேலை வீசியவனும் கவிராஜனும் அல்லவா நீ.  தூயவளான வள்ளியோடு புலியூர் எனப்படும் சிதம்பரம் தலத்திலே வீற்றிருக்கின்ற சுத்தசிவஞான உருவாக விளங்குகின்ற பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com