பகுதி - 745

ஏழு நரகங்கள்
பகுதி - 745

பதச் சேதம்

சொற் பொருள்

இரு வினையின் மதி மயங்கி திரியாதே

 

 

எழு நரகிலும் உழலு(ம்) நெஞ்சு உற்று அலையாதே

 

எழு நரகு: ஏழு நரகங்கள். கீழேயுள்ள விளக்கக் குறிப்பைக் காண்க.

பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே

 

 

பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே

 

எற்கு: எனக்கு;

தெரி தமிழை உதவு சங்க புலவோனே

 

 

சிவன் அருள் முருக செம் பொன் கழலோனே

 

 

கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே

 

 

கனக சபை மருவு கந்த பெருமாளே.

 

 

எழு நரகம்: நரகங்கள் 28 வகையென்றும் 56 வகையென்றும் இருவிதமாகச் சொல்வார்கள். அடிப்படையில் பின்வரும் ஏழு நரகங்களின் வேறுபாடே அவை. (1) கூடாசலம்; (2) கும்பிபாகம்; (3) அள்ளல்; (4) அதோகதி; (5) ஆர்வம்; (6) பூதி; (7) செந்து.

இருவினையின் மதிம யங்கி திரியாதே... என்னுடைய நல்வினை, தீவினைகளால் அறிவில் மயக்கமடைந்து நான் திரியாமலும்,

எழுநரகில் உழலும் நெஞ்சுற்று அலையாதே... ஏழு நரகங்களிலும் உழன்று துன்புறும் மனத்தைக்கொண்டு அலையாமலும்,

பரமகுரு அருள்நினைந்திட்டு உணர்வாலே... பரமகுருவாகிய உன்னுடைய அருளை எண்ணியபடி உணர்வு (தெளிவு) பெற்று,

பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே... போற்றும்படியான உன்னுடைய தரிசனத்தை எனக்கு எப்போது அருளப் போகிறாய்? (இப்போதே அருளவேண்டும்.)

தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே... எல்லோரும் தெரிந்து மகிழும்படியாகத் தமிழை ஆய்ந்து உதவிய சங்கப் புலவனாகத் தோன்றியவனே*!

(* உக்கிர பாண்டியராக வந்து மதுரையை ஆண்டு, சங்கப் புலவர்களோடு தமிழாய்ந்தது முருகனே என்பது கருத்து.)

சிவனருளு முருக செம்பொற் கழலோனே... சிவபெருமான் பெற்ற முருகனே! செம்பொன்னால் ஆன வீரக்கழலை அணிந்தவனே!

கருணைநெறி புரியும் அன்பர்க் கெளியோனே... அருள்நெறியைக் கடைப்பிடிக்கும் அன்பர்களுக்கு எளியவனே!

கனகசபை மருவு கந்தப் பெருமாளே.... பொன்னம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே!


சுருக்க உரை:

உக்கிரப்பெரு வழுதியாக வந்து சங்கப் புலவர்களோடு தமிழாய்ந்தவனே! சிவபெருமான் பெற்றெடுத்தவனே!  பொன்னாலான வீரக் கழலை அணிந்தவனே!  அருள்நெறியைக் கடைபிடிக்கும் அன்பர்களுக்கு எளியவனே!  பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

நன்னெறி, தீநெறிகளின பயனால் என்னுடைய அறிவு மயக்கமடைந்து நான் திரியாமலும்; ஏழு நரகங்களில் விழுந்து கலங்குவதற்குரிய மனத்தைக் கொண்டு நான் அலையாமலும்; பரமகுருவான உன்னுடைய திருவருளை மனத்தில் வைத்து தெளிவை அடைந்து, போற்றிப் பாடுவதற்கு உரிய உன்னுடைய தரிசனத்தை அடியேனுக்கு உடனே அளித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com