பகுதி - 845

வேலை வாளைகொடிய..
பகுதி - 845

பதச் சேதம்

சொற் பொருள்

வேலை வாளைகொடியஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர்எனல் ஆகும்

 

 

வேதை சாதித்த விழிமாதர் ஆபத்தில்விளையாடி மோகித்து இரியும்வெகு ரூப

 

வேதை: துன்பம் தருவதை; இரியும்: சிதறும், நிலைகுலையும்;

கோலகாலத்தைவிடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளியஅரிதான

 

கோலகாலத்தை: ஆடம்பரத்தை; குண விகாரம்: குணவேறுபாடுகள்;

கூற ஒ(ண்)ணாதற்பரம ஞானரூபத்தின் வழி கூடலாக பெருமைதருவாயே

 

தற்பரம: மேம்பட்டதான; கூடலாக: கூடல் ஆக—கூடும்படியாக, சேரும்படியாக;

வாலி மார்பை துணியஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும்மநு ராமன்

 

மரா: மரா மரங்கள்; வாளி: அம்பு: மநு ராமன்: மனு குலத்தில் உதித்த ராமன்;

வான் உலோகத்தில்அமரேசன் ஒலிக்கவளை ஊதிமோகித்து விழ அருள்கூறும்

 

வான் உலோகத்தில்: வானுலகத்தில் (என்பதன் விகாரம்); அமரேசன்: இந்திரன்; வளை: சங்கு;

நீல மேனிக்கு மருகாஉதாரத்து வரு நீசர்வாழ்வை களையும்இளையோனே

 

நீல மேனிக்கு: திருமாலுக்கு; உதாரத்து: மேம்பாடுடைய (உதாரம்: கொடை, இங்கே மேம்பாடு);

நேசமாக குறவர்தோகை மானைபுணரும் நீப தோள்ஒப்பு அரியபெருமாளே.

 

நீப: கடம்பு, கடப்ப மாலை;

வேலை வாளைக் கொடிய ஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர் எனல் ஆகும்... வேலுக்கும் வாளுக்கும் கொடிய ஆலகால விஷத்துக்கும் மன்மதன் தொடுக்கின்ற பாணங்களுக்கும் இணையானது என்று சொல்லக்கூடிய,

வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும்... துன்பம் தருவதையே சாதித்திருக்கின்ற கண்களை உடைய பெண்களால் ஏற்படும் ஆபத்தோடு விளையாடி, மோகம்கொண்டு நிலைதடுமாறுகின்ற,

வெகு ரூப கோலகாலத்தை விடல் ஆகி மாறக் குண விகாரம் ஓட...பலவகையான ஆடம்பரங்களை நான் விட்டொழிக்கவும்; நல்வழிக்கு மாறவும்; என்னுடைய குணவேறுபாடுகன் என்னைவிட்டு ஓடவும்;

தெளிய அரிதான கூற (ண்)ணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாகப் பெருமை தருவாயே... தெளிந்து உணர்வதற்கு அரியதும்; எடுத்துரைக்க முடியாததும்; மேம்பட்டதும் ஞானமயமானதுமான நெறியிலே நடக்கின்ற பெருமையை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

வாலி மார்பைத் துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போடக் கருது(ம்மநு ராமன்... வாலியுடைய மார்பைப் பிளப்பதற்காகவும்; ஏழு மராமரங்ளை வீழ்த்துவதற்காகவும் அம்பை எய்ய சித்தம்கொண்டவனும் மனுவம்சத்தில் தோன்றியவனுமான ராமனும்;

வான் உலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள் கூறும் நீல மேனிக்கு மருகா... தேவலோகத்தில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூக்குரல் எழுப்ப; சங்கை ஊதி, அதன் பேரோசையால் தேவர்களை மயங்கிவிழச் செய்த* நீலநிறத்துக் கண்ணனாகிய திருமாலுக்கு மருகனே!

(* கண்ணனுடைய தேவியான சத்தியபாமா பாரிஜாத மலரை விரும்பியபோது ‘இதை மானிடப் பெண்ணுக்குத் தரமுடியாது’ என்று இந்திராணி மறுக்கவே, கருடன் அந்தப் பாரிஜாதச் செடியைப் பறித்துவந்து சத்தியபாமாவின் இல்லத்தில் நட்டார். இதையறிந்த இந்திரனும் தேவர்களும் கண்ணனோடு போர்தொடுப்பதற்காக எழ, கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை ஊதவும் அதன் பேரோசையைக் கேட்ட தேவர்களும் இந்திரனும் மயங்கிச் சாய்ந்தார்கள் என்ற புராணம் இங்கே சொல்லப்படுகிறது.)

உதாரத்து வரு நீசர் வாழ்வைக் களையும் இளையோனே... மேம்பட்ட நிலையில் ஆடம்பரமாக வாழ்ந்திருந்த நீசர்களான அரக்கர்களை அழித்தவனான இளையவனே!

நேசமாகக் குறவர் தோகை மானைப் புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே....அன்பின் பெருக்கத்தால், வேடர் குலத்தவளும் மயிலையும் மானையும் ஒத்தவளுமான வள்ளியை அணைத்துக்கொள்கின்ற; கடப்பமாலையை அணிந்த இணையற்ற தோள்வலிமையை உடைய பெருமாளே!

சுருக்க உரை

வாலியின் மார்பைப் பிளக்கும்படியாகவும் ஏழு மராமரங்களை வீழ்த்தும்படியாகவும் அம்பை எய்த மனுக் குலத்தில் உதித்த ராமனும்; தேவலோகத்தில் தேவர் தலைவனான இந்திரன் அபயக் கூச்சலை எழுப்புமாறு பாஞ்சஜன்யத்தை ஊதி அதன் பேரோசையைக் கேட்ட தேவர்கள் மயங்கிச் சாயச் செய்த கண்ணனுமான திருமாலுக்கு மருகனே! மேன்மைகளோடு ஆடம்பரமாக வாழ்ந்திருந்த நீசர்களான அரக்கர்கள் அழியுமாறு வேலை எறிந்த இளையவனே!  வேடர் குலத்தில் உதித்தவளும் மானையும் மயிலையும் ஒத்தவளுமான வள்ளியை அன்பின் பெருக்கத்தால் தழுவுகின்றதும்; கடப்ப மாலையை அணிந்ததும்; இணையற்ற வலிமையைக் கொண்டதுமான தோள்களை உடைய பெருமாளே!

வேலையும் வாளையும் ஆலகால விடத்தையும் மன்மதனுடைய பாணங்களையும் ஒத்தவையும்; துன்பத்தையே தருபவையுமான கண்களைக்கொண்ட பெண்களோடு களித்து நிலைதடுமாறுகின்ற பலவிதமான ஆடம்பரமான போக்கு என்னைவிட்டு அகலவும்; நான் நல்ல நெறிக்கு மாறவும்; தீய குணங்கள் என்னை விட்டு ஓடவும்; தெளிந்து உணர்வதற்கு அரிதானதும் விரித்துச் சொல்ல முடியாததுமான ஞான மார்க்கத்தில் அடியேன் செல்லும்படியான பெருமையைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com