பகுதி - 847

வீணை இசை கோட்டி..
பகுதி - 847

பதச் சேதம்

சொற் பொருள்

வீணை இசை கோட்டிஆலம் மிடறு ஊட்டு வீர(ம்) முனை ஈட்டிவிழியார் தம்

 

கோட்டி: வளைத்து, பிறப்பித்து; ஆலம்: விஷம்; மிடறு ஊட்டும்: தொண்டையில் செலுத்தும்;

வேதனையில் நாட்டம்ஆகி இடர் பாட்டில் வீழும் மயல் தீட்டிஉழலாதே

 

மயல் தீட்டி: மையலைக் கூராக்கி, அதிகரித்து;

ஆணி உள வீட்டைமேவி உளம் மாடு ஐ ஆவலுடன் ஈட்டிஅழியாதே

 

ஆணியுள வீடு: ஆதாரமான வீடு; உளம்: உள்ளம்: மாட்டை: செல்வத்தை (மாடு: செல்வம்);

ஆவி உறை கூட்டில்ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டிஅருள்வாயே

 

 

கேணி உற வேட்ட ஞானநெறி வேட்டர் கேள்சுருதி நாட்டில்உறைவோனே

 

கேணியுற: கிணற்றைப் போல (ஆழமாக, ஆழத்திலிருந்து); வேட்ட: விரும்பிய; வேட்டர்: விரும்பியவர்கள்; சுருதி நாட்டில்: வேதத்தின் இடம் அல்லது வேதத்தின் மொழி;

கீத இசை கூட்டி வேதமொழி சூட்டு கீரர் இயல்கேட்ட க்ருபை வேளே

 

கீரர்: நக்கீரர்;

சேணின் உயர் காட்டில்வாழும் மறவாட்டி சீதஇரு கோட்டில்அணைவோனே

 

சேண்: தொலைவு (இங்கே விண்ணைத் தொடும்); சீத: குளிர்ந்த; கோட்டில்: (கோடு: மார்பகம்) மார்பகத்தை;

சீறு அவுணர் நாட்டில்ஆர அழல் மூட்டி தேவர்சிறை மீட்ட பெருமாளே.

 

அவுணர்: அரக்கர்; ஆர: நிரம்ப, முழுவதும்;

வீணை இசை கோட்டி ஆலம் மிடறு ஊட்டு வீர(ம்முனை ஈட்டி விழியார் தம்.. வீணையில் இசையை மீட்டி, தொண்டையில் விஷத்தைச் செலுத்துகின்ற வீரத்தைக் கொண்ட வேல் விழிகளைக் கொண்ட பெண்களால் விளைகின்ற,

வேதனையில் நாட்டம் ஆகி இடர் பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே...  வேதனையில் மனத்தை வைத்தவனாக, துன்பத்தில் வீழ்த்துகின்ற மோக உணர்வை அதிகரித்துக்கொண்ட நான் திரியாமல்,

ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை ஆவலுடன் ஈட்டி அழியாதே... ஆதாரமாக இருப்பதான (குடியிருக்கும்) வீட்டை அடைந்து, ஆவலோடு செல்வத்தைச் சேர்த்துச் சேர்த்து அழிந்து போகாமல்,

ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி அருள்வாயே... உயிரின் இருப்பிடமான இந்த உடலுக்குள் ஞான மறைப்பொருள்களை ஊட்டி, நன்மையைத் தருகின்ற நிலையைக் காட்டி அருளவேண்டும்.

கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே... கிணற்றைப்போல அடியாழத்திலிருந்து ஊறுவதும் விரும்பப்படுவதுமான ஞானமார்க்கத்தை நாடுபவர்கள் ஆராயும் வேதமொழியில் (வேதத்தில்) உறைபவனே!

கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே... கீத இசையோடு வேதமொழியைப் போன்ற திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரருடைய தமிழைக் கேட்டருளிய கருணை வேளே!

சேணின் உயர் காட்டில் வாழும் மறவாட்டி சீத இரு கோட்டில் அணைவோனே... ஆகாயம் வரையிலே உயர்ந்திருக்கின்ற வள்ளிமலைக் காட்டில் வாழ்ந்த குறமகளான வள்ளியின் குளிர்சி பொருந்திய தனங்களைத் தழுவுபவனே!

சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே....  சீறுகின்ற அரக்கர்களுடைய நாட்டில் நெருப்பை நிரம்ப மூளும்படியாகச் செய்து, தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே!

சுருக்க உரை

கிணற்றைப் போன்ற ஆழத்திலிருந்து ஊறுவதும் விரும்பப்படுவதுமான ஞான மார்க்கத்தை விரும்புபவர்கள் ஆராய்கின்ற வேதத்தின் உள்ளுறையாய் விளங்குபவனே!  நக்கீரர் கீத இசையோடு வேதமொழியைப் போன்ற திருமுருகாற்றுப் படையை இயற்ற அதைக் கேட்டருளிய கருணை நிறைந்தவனே!  வானை முட்டும்படி வளர்ந்திருக்கின்ற வள்ளிமலையில் வாழ்ந்த குறப்பெண்ணான வள்ளியின் குளிர்ந்த மார்பகங்களைத் தழுவுபவனே!  கோபித்துச் சீறுகின்ற அரக்கர்களுடைய நாட்டில் தீயைப் பெரிதாக மூட்டி (அவர்களை அழித்த காரணத்தால்) தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே!

வீணையில் இசையை மீட்டி, தொண்டைக்குள் ஆலகால விஷத்தைச் செலுத்துகின்றவையும்; ஈட்டி முனை போன்றவையுமான கண்களை உடைய பெண்களால் ஏற்படும் துன்பங்களிலே நாட்டம் உடையவனாய், துன்பங்களை அதிகரித்துக்கொண்டும் மையலை வளர்த்துக்கொண்டும் நான் திரியாமலும்; இருப்பதற்கு ஆதாரமாக உள்ள வீட்டை விரும்பியும்; பொன்னை ஆவலுடன் சேகரித்தபடியும் பொழுதை வீணில் போக்கி அழியாதபடி, உயிர் வாசம் செய்வதான இந்த உடலுக்குள் ஞான மறைப் பொருளை ஊட்டி (உபதேசித்து) நன்மை தருவதான நிலைமையைக் காட்டியருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com