பகுதி - 851

வான் அப்பு கு பற்று..
பகுதி - 851

பதச் சேதம்

சொற் பொருள்

வான் அப்பு கு பற்றுமருத்து கனல் மேவு

 

வான்: ஆகாயம்; அப்பு: நீர்; கு: மண்; பற்று: (இவற்றோடு) கூடிய; மருத்து: காற்று; கனல்: நெருப்பு (பஞ்சபூதங்கள்);

மாய தெற்றி பொய்குடில் ஒக்க பிறவாதே

 

தெற்றி: திண்ணை அல்லது மாடம் (ஆகுபெயராகக் கட்டடம்);

ஞான சித்தி சித்திரநித்தம் தமிழால் உன்

 

ஞானச் சித்தி: ஞானம் சித்திக்க (கைகூட); சித்திர: அழகான; நித்தம்: அழியாதது;

நாமத்தை கற்றுபுகழ்கைக்கு புரிவாயே

 

 

கான கொச்சை சொல்குறவிக்கு கடவோனே

 

கான: காட்டில் (வசித்த); கொச்சைச் சொல்: மழலைச் சொல்; குறவி: குறத்தி;

காதி கொற்ற பொன் குலவெற்பை பொரும்வேலா

 

காதி: கூறுசெய்து; பொற்குல வெற்பு: கிரவுஞ்சம்;

தேனை தத்த சுற்றியசெச்சைதொடையோனே

 

தேனை: (ஆகுபெயராக) வண்டுகளை; தத்த: தாவ; செச்சை: வெட்சி; தொடையோனே: மாலையணிந்தவனே (தொடை: மாலை);

தேவ சொர்க்கசக்கிரவர்த்திபெருமாளே.

 

 

வான் அப்புக் குப் பற்று மருத்துக் கனல் மேவு... வானம், நீர், பூமி இவற்றோடு சேர்ந்த காற்று, தீ என்ற பஞ்சபூதச் சேர்க்கையால் ஏற்பட்ட,

மாயத் தெற்றிப் பொய்க்குடில் ஒக்கப் பிறவாதே... மாயக் கட்டடமும் பொய்க் குடிசையுமான இந்த உடலோடு பிறக்காமல்;

ஞானச் சித்திச் சித்திர நித்தத் தமிழால்... ஞானம் கைவரப்பெறும்படியாக அழகியதும் அழியாததுமான தமிழைக்கொண்டு,

உன் நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் புரிவாயே...  உன் திருநாமங்களை கற்றுணர்ந்து உன்னைப் போற்றுவதற்கு அருளவேண்டும்.

கானக் கொச்சைச் சொற்குற விக்குக் கடவோனே... காட்டில் இருந்தவளும் மழலைமொழியை உடையவளுமான வள்ளிக் குறமகளுக்குக் கடப்பாடு உடையவனே!

கொற்றப் பொற்குல வெற்பை காதிப் பொரும்வேலா... வெற்றியுடன் திகழ்ந்ததும் பொன்மயமானதும் குலபர்வதமுமான கிரெளஞ்ச மலையைப் பிளந்து அதனுடன் போரிட்ட வேலனே!

தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் தொடையோனே... வண்டுகள் தாவிச் சூழ்கின்ற (தேன் நிறைந்த) வெட்சி மலர்மாலையை அணிந்தவனே!

தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே.... தேவர்களுடைய நாடான சொர்க்கத்துக்கு சக்கரவர்தியாகத் திகழ்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

காட்டில் இருந்தவளும் மழலைமொழி பேசுபவளும் குறமகளுமான வள்ளிக்குக் கடப்பாடு உடையவனே! பொன்மயமானதும் வெற்றிச் சிறப்புடையதும் குலகிரியுமான கிரெளஞ்சத்தைப் பிளந்து அதனுடன் போரிட்டவனே!  வண்டுகள் தாவிக் குதித்து மொய்க்கின்ற வெட்சிப்பூ மாலையைச் சூடியவனே! தேவர்களுடைய அமரலோகத்துக்குச் சக்கரவர்த்தியாக விளங்குகின்ற பெருமாளே!

பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஏற்பட்டதும் மாயம் நிறைந்ததும் அழியக்கூடிய பொய்யுடலுமான இந்தக் குடிலில் நான் மீண்டும் பிறவாமலும்; அடியேனுக்கு ஞானம் கைவரப்பெறுமாறு அழகானதும் என்றும் அழியாததுமான தமிழைக் கொண்டு உன்னுடைய திருநாமங்களை அறிந்துணர்ந்து, ‘முருகா, குமரா, ஆறுமுகா என்றெல்லாம்) உரைத்துப் போற்றி உன்னுடைய புகழைப் பாட அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com