பகுதி - 855

என்னால் பிறக்கவும்..
பகுதி - 855

பதச் சேதம்

சொற் பொருள்

என்னால் பிறக்கவும்என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும்கண்களாலே

 

 

என்னால் அழைக்கவும்என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும்பெண்டிர் வீடு

 

 

என்னால் சுகிக்கவும்என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும்தொந்த நோயை

 

முசிக்கவும்: மெலிவடையவும் (முசித்தல்: மெலிவடைதல், களைத்துப் போதல்); தொந்த(ம்): பிணைப்பு, பாசம்;

என்னால் எரிக்கவும்என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும்இங்கு நான் ஆர்

 

தரிக்கவும்: தாங்கிக் கொள்ளவும்;

கல் நார் உரித்த என்மன்னா எனக்கு நல் கர்ண அமிர்த பதம் தந்தகோவே

 

கர்ணாமிர்த: செவிக்கு இன்பமான; பதம்: நிலை, உபதேச மொழி;

கல்லார் மனத்துடன்நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம்கண்ட வேலா

 

கல்லார்: உன்னைக் கல்லார், உணரார்;

மன்னான தக்கனைமுன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும்தங்க ரூபன்

 

மன்னான: மன்னனான; தங்க ரூபன்: பொன்னார் மேனியனான சிவன்;

மன்னா குறத்தியின்மன்னா வயல் பதி மன்னா முவர்க்கு ஒருதம்பிரானே.

 

வயற்பதி: வயலூர்; முவர்க்கு: மூவருக்கு—பிரம, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு;

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும்...என்னுடைய முயற்சியால் பிறப்பதற்கும்; என்னுடைய செய்கையால் இறப்பதற்கும்; என்னுடைய முயற்சியாலே உன்னைத் துதிப்பதற்கும்;

கண்களாலே என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும்... என்னுடைய கண்களால் மற்றவரைப் பார்த்து அழைப்பதற்கும்; என்னுடைய முயற்சியால் காலைக் கொண்டு நடப்பதற்கும்; என்னுடைய முயற்சியால் நான் வாழ்ந்திருப்பதற்கும்;

பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும்... மனைவியையும் (குடும்பம்,) வாழ்கின்ற வீட்டையும் நான் அனுபவிப்பதற்கும்; துன்பப்பட்டு மெலிவடைவதற்கும்; ‘எதுவுமே வேண்டாம்’ என்று அலுப்டையவும்;

தொந்தநோயை என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர்.... பந்தங்களின் காரணமாக ஏற்படும் நோய்களை என்னுடைய முயற்சியால் எரிப்பதற்கும்; என் மனத்தைக் கொண்டு பலவற்றையும் நினைப்பதற்கும்; என் வலிமையால் இன்ப துன்பங்களைத் தாங்கிக் கொள்ளவும் இங்கே நான் யார்? (எல்லாமே உன் செயல்).

கன்னார் உரித்த என் மன்னா எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே... என் மனமாகிய கல்லை உரித்து என்னைக் கனியச் செய்த என் அரசே! செவிக்கு அமுதமாக விளங்ககம் உபதேச மொழியை எனக்கு அருளிய தலைவனே!

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்டவேலா...  உன்னை நினையாதார், உணராதார்களின் மனத்திலே வீற்றிருக்கச் சம்மதியாத மனத்தைக் கொண்டவனே! கண்ணாடி போன்ற தெளிவான தடாகத்தை உன்னுடைய வேலால்* தோற்றுவித்தவனே!

(திருமுருகன் பூண்டி என்னும் தலத்திலே முருகன் தன்னுடைய வேலால் ஒரு தடாகத்தை ஏற்படுத்தியதைக் குறிக்கிறது.)

மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை வன்வாளியிற் கொளும்... மன்னனாக விளங்கிய தட்சப் பிரஜாபதியை முற்காலத்தில், மகுடம் அணிந்த தலையோடு கொடிய அம்பைச் செலுத்திக் கொய்தவனும்,

தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு தம்பிரானே... பொன்னார் மேனியனுமாகிய சிவபெருமானுடைய குருநாதனே! குறமகளான வள்ளியின் தலைவனே! வயலூரின் இறைவனே! பிரமன், திருமால், சிவன் என்னும் மும்மூர்த்திகளுக்கும் தலைவனாக விளங்கும் தம்பிரானே!

சுருக்க உரை

கல்லைப் போன்ற என் மனத்திலிருந்து நார் உரிப்பதுபோல என்னைக் கனியச் செய்தவனே!  செவிக்கு அமுதமாக விளங்கும் உபதேச மொழிகளை அடியேனுக்கு அருளியவனே! (திருமுருகன் பூண்டி என்னும் தலத்தில்) கண்ணாடி போன்ற தடாகத்தை வேலால் உண்டாக்கியவனே! தட்சப் பிரஜாபதியின் தலையை முன்னொரு காலத்திலே தலையில் அணிந்திருக்கும் கிரீடத்தோடு அம்பெய்து கொய்தவரும் பொன்னார் மேனியருமான சிவபிரானின் குருநாதனே! குறவள்ளியின் தலைவனே! மும்மூர்த்திகளுக்கும் தலைவனாக விளங்கும் தம்பிரானே!

நான் பிறப்பதும் என் முயற்சினால் இல்லை; இறப்பதும் என்னுடைய செயலால் இல்லை; துதிப்பதும் என்னுடைய திறத்தால் இல்லை; கண்ணால் ஒருவரை அழைப்பதும் என்னுடைய திறத்தால் இல்லை; கால்கொண்டு நடப்பதும் என்னுடைய முயற்சியால் இல்லை; இந்த உலகத்தில் இருப்பதும் என்னுடைய திறத்தால் இல்லை; மனைவி, குடும்பம், வீடு என்று பல சுகங்களை அனுபவிப்பதும் என்னுடைய ஆற்றலால் இல்லை; எதையெதையோ விரும்பி இளைப்பதும் என்னுடைய தன்மையால் இல்லை; ‘இனி எதுவும் வேண்டாம்’ என்று அலுத்துப்போய் ஒதுக்குவதும் என் கையிலில்லை; பந்த பாசங்களைச் சுட்டுப் பொசுக்குவதும் என்னுடைய முயற்சியால் இல்லை; இந்த மனத்தைக் கொண்டு பலவற்றையும் நினைப்பதும் என்னுடைய செயலால் இல்லை; இன்ப துன்பங்களைத் தாங்கி நிற்பதும் என்னுடைய வலிமையால் இல்லை.  இவை எல்லாவற்றையும் என்னுடைய முயற்சியால் அடைவதற்கு நான் யார்?  எல்லாமே உன் செயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com