பகுதி - 859

மனை கனகம் மைந்தர்தமது..
பகுதி - 859

பதச் சேதம்

சொற் பொருள்

மனை கனகம் மைந்தர்தமது அழகு பெண்டிர் வலிமை குல(ம்) நின்றநிலை ஊர் பேர்

 

 

வளர் இளமை தஞ்சம்முனை புனை வளங்கள் வரிசை தமர் என்றுவரும் மாய

 

முனை: போர்முனை, துணிவு; புனை வளங்கள்: ஆபரணங்கள்; தமர்: சுற்றத்தார்;

கனவு நிலை இன்பம்அதனை எனது என்று கருதி விழி இன்பமடவார் தம்

 

 

கலவி மயல் கொண்டுபல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றதுஇயல்போ தான்

 

பல உடல்: பலரை;

நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர்வேலா

 

நினையும்: நினைக்கின்ற; நெடுவரை: நீண்ட மலை—கிரெளஞ்சம்;

நிலம் முதல் விளங்குநலம் மருவு செந்தில் நிலை பெற இருந்தமுருகோனே

 

 

புனை மலர் புனைந்தபுன மற மடந்தை புளகஇரு கொங்கை புணர்மார்பா

 

புளக இரு கொங்கை: மயிர்க்கூச்சம் அடைந்த மார்பகம்;

பொருது உடன் எதிர்ந்தநிருதர் மகுடங்கள் பொடிபட நடந்தபெருமாளே.

 

நிருதர்: அரக்கர்;

மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல(ம்நின்ற நிலைஊர் பேர்... வீடு, தங்கம், பிள்ளைகள், தன்னுடைய அழகிய மனைவி (முதலானவர்களும்); தன்னுடைய வலிமை, குலம், இருக்கின்ற நிலை, தன்னுடைய ஊர், பெற்ற பெயர்;

வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி... வளர்வதான இளமை, தன்னுடைய பற்றுக்கோடு, துணிவு, அணியும் ஆபரணங்களின் வரிசை, தன் சுற்றத்தார் என்று விரிகின்ற மாயமானதும் கனவு நிலையுமான இந்த இன்பங்களை என்னுடையது என்று கருதிக்கொண்டு;

விழி இன்ப மடவார் தம் கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான்... விழியால் இன்பத்தை விளைக்கின்ற பெண்களைக் கூடும் மயக்கத்தில் பலரைக் கூடி, மீண்டும் மீண்டும் கருவிலே விழுந்து பிறவிகளை எடுப்பது தகுமோ? (இனி பிறவி ஏற்படாதபடி காத்தருள வேண்டும்.)

நினையும் நினது அன்பர் பழ வினை களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா... உன்னைச் சிந்திக்கின்ற அன்பர்களுடைய தொன்மையான வினைகளை நீக்குபவனே!  கிரெளஞ்ச மலையைப் பிளந்த கதிர்வேலனே!

நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே... உலகத்திலே முதன்மைபெற்று விளங்குவதும் அழகியதுமான திருசெந்தூர் நிலைபெறுமாறு வீற்றிருக்கின்ற முருகனே!

புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு கொங்கை புணர் மார்பா... அழகிய மலர்களைப் புனைந்த குறமகள் இருந்த தினைப்புனத்தில் அவளுடைய புளகம் எய்திய மார்பகங்களைத் தழுவிய மார்பனே!

பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே.... போருக்கு எழுந்துவந்த அரக்கர்களுடைய மகுடங்கள் பொடியாகும்படியாக மிதித்து நடந்த பெருமாளே!

சுருக்க உரை

உன்னை நினைக்கின்ற அடியார்களுடைய பழவினைகளை நீக்குபவனே!  கிரவுஞ்ச மலையைப் பிளந்த கதிர்வேலனே! உலகில் முதலிடம் பெற்றுத் திகழ்வதான திருச்செந்தூர் நிலைபெறும்படியாக வீற்றிருக்கின்ற முருகனே!  அழகிய மலர்களைப் புனைந்து தினைப்புனத்தில் இருந்த குறமகளான வள்ளியின் தனங்களைப் பொருந்த அணைத்த மார்பனே!  போருக்கு எழுந்துவந்த அரக்கர்களுடைய மகுடங்கள் பொடிபடும்படியாகப் போரிட்டு, மிதித்து நடந்த பெருமாளே!

வீடு, பொன், மனைவி, மக்கள், தன் வலிமை, குலம், தன்னுடைய ஊர், பேர், இளமை, துணிவு, செல்வம், மேன்மை, சுற்றத்தார் என்றெல்லாம் விரிகின்ற மாயமான, கனவுநிலையான, நிலையற்ற இன்பங்களை என்னுடையவையாகக் கருதி, கடைக்கண்ணால் இன்பமூட்டுகின்ற மாதர்களுடைய கலவியில் மயங்கிப் பலரோடு கூடி, மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பது தகுமோ?  (அடியேன் கலவி மயக்கமுறாதவாறும் மீண்டும் பிறக்காதவாறும் ஆண்டருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com