பகுதி - 861

மூப்பு உற்று செவிகேட்பு..
பகுதி - 861

பதச் சேதம்

சொற் பொருள்

மூப்பு உற்று செவிகேட்பு அற்று பெரு மூச்சு உற்று செயல்தடுமாறி

 

 

மூர்க்க சொல் குரல்காட்டி கக்கிட மூக்குக்குஉள் சளி (ஈ)ளையோடும்

 

ஈளை:கபம்;

கோப்பு கட்டி இனா பிச்சுஎற்றிடு கூட்டில் புக்குஉயிர் அலையா முன்

 

கோப்புக் கட்டி: கோத்து கட்டியதைப் போல; இனா: துன்ப(ம்); பிச்சு: வெறி; இனாப்பிச்சு: துன்பத்தால் ஏற்படுகின்ற வெறி, வேதனை; கூட்டில்: உடலில்;

கூற்ற தத்துவம் நீக்கிபொன் கழல் கூட்டிசற்று அருள் புரிவாயே

 

 

காப்பு பொன் கிரி கோட்டிபற்றலர் காப்பைகட்டவர் குருநாதா

 

காப்பு: காவலாயிருக்கும்; பொன்கிரி: மேரு மலையை; கோட்டி: வளைத்து; பற்றலர்: பகைவர்கள்; காப்பை: மதிலை; கட்டவர்: அழித்தவர்;

காட்டுக்குள்குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம்மொழிவோனே

 

குறவாட்டி: குறமகள்; காப்பு: ‘காக்க வேண்டும்’ எனல்; குத்திர(ம்): வஞ்சகம்;

வாய்ப்பு உற்ற தமிழ்மார்க்க திண் பொருள் வாய்க்கு சித்திரமுருகோனே

 

வாய்ப்புற்ற: செழிப்புற்ற; திட்பொருள்: திண்(மையான) பொருள்; வாய்க்கு: வாய்மையான (விளக்கத்துக்கு);

வார்த்தை  சிற்பர தீர்த்தசுற்று அலை வாய்க்குள்பொற்பு அமர்பெருமாளே.

 

வார்த்தை: சொல்லுக்கும்; சிற்பர: அறிவுக்கும் (எட்டாத); அலைவாய்: திருச்சீரலைவாய், திருச்செந்தூர்;

மூப்புற்றுச் செவி கேட்பற்று பெரு மூச்சுற்றுச் செயல் தடுமாறி... வயதேறிப்போய், காது கேட்காத நிலையை அடைந்து; பெருமூச்சு விட்டுக்கொண்டு; செயல்களில் தடுமாற்றத்தை அடைந்து;

மூர்க்கச் சொற்குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள்சளி இளையோடும் கோப்புக் கட்டி... கோபம் நிறைந்ததான சொற்களைக் கடுமையான குரலில் வெளிப்படுத்தி; (அப்போது) மூக்கினுள்ளே உள்ள சளியும் நெஞ்சிலுள்ள கபமும் ஒன்றாகக் கோத்துக்கொண்டதைப் போலக் கலந்து;

(ன்)னாப் பிச்சு எற்றிடு கூட்டிற் புக்கு உயிர் அலையாமுன்... (இவ்வகையான) துன்ப வெறி அதிகரித்திருப்பதான் இந்த உடலில் புகுந்திருக்கின்ற என் உயிர் தவிப்பதற்கு முன்னாலே,

கூற்றத் தத்துவ நீக்கி பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே... யமன் என் உயிரைக் கவரந்துகொள்ளும் தன்மையை நீக்கி, உன்னுடைய அழகிய திருவடிகளிலே என்னைச் சேர்த்துக்கொண்டு சற்றே அருள்புரியவேண்டும்.

காப்புப் பொற்கிரி கோட்டி பற்றலர்காப்பைக் கட்டவர் குருநாதா... உலகத்துக்குக் காப்பாக விளங்கும் மேரு மலையை வில்லாக வளைத்து, எதிரிகளுடைய அரண்களை அழித்தவரான சிவபெருமானுடைய குருநாதனே!

காட்டுக்குட் குறவாட்டிக்கு பல காப்புக் குத்திர மொழிவோனே... காட்டிலே இருந்த குறமகளான வள்ளியிடத்திலே, ‘என்னைக் காத்தருள வேண்டும்’ என்றெல்லாம் வஞ்சனையான நயவுரைகளைச் சொன்னவனே!

வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திட்பொருள் வாய்க்குச் சித்திர முருகோனே... செழிப்பான தமிழுடைய அகத்துறைக்குத் திண்மை வாய்ந்த பொருள் இதுவே என்று உண்மையை விளக்கிய* அழகிய முருகனே!

(முருகன் உருத்திரசென்மராய் வீற்றிருந்து இறையனார் அகப்பொருளுக்குப் பொருத்தமான உரை எது என்பதைச் சுட்டிய புராணம் சொல்லப்படுகிறது.)

வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலைவாய்க்குள் பொற்பமர் பெருமாளே.... சொல்லையும் அறிவையும் கடந்தவனே!  புண்ணிய தீர்த்தங்களால் சூழப்பட்டுள்ள திருச்சீரலைவாயில் அழகாக வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

உலகத்துக்குக் காப்பாக எழுந்து நிற்கின்ற மேருமலையை வில்லாக வளைத்துப் பகைவர்களுடைய மதிலைத் தகர்த்தவரான சிவபெருமானுடைய குருநாதனே!  செழிப்பான தமிழின் (இறையனார் அகப்பொருளுக்கு ஏற்ற) உரையைச் சுட்டிக் காட்டிய (உருத்திரசென்மராய் அவதரித்த முருகனே! சொல்லையும் அறிவையும் கடந்தவனே!  புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வயது முதிர்ந்து, காது கேட்காமல்போய், பெருமூச்சு விட்டுக்கொண்டு, செயல்களில் தடுமாற்றமடைந்து; கொடிய கோபத்துடனான சொற்களைக் கடுமை நிறைந்த குரலால் வெளிப்படுத்தும் அச்சமயத்திலே மூக்கிலும் நெஞ்சிலும் உள்ள கபமானது ஒன்றாகக் கோத்துக்கொண்டதுபோல் உடலைத் துன்புறுத்தி உயிரைத் தடுமாறச்செய்வதற்கு முன்னாலே,

யமன் வந்து என்னுடைய உயிரைக் கவர்ந்துகொள்ளும் தன்மையை நீக்கி உன்னுடைய திருவடிகளில் அடியேனைச் சேர்த்துக்கொண்டு அருள்புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com