பகுதி - 863

பகுதி - 863

ஆதாளிகள் புரிகோலாகல..

பதச் சேதம்

சொற் பொருள்

ஆதாளிகள் புரிகோலாகல விழியாலே அமுது எனு(ம்)மொழியாலே

 

ஆதாளி: பகட்டுப் பேச்சு; ஆதாளிகள் புரி: அப்படிப் பேசும் பெண்கள்;

ஆழ் சீர் இள நகையாலேதுடி இடையாலே மணமலி குழலாலே

 

துடி இடை: உடுக்கு போன்ற இடை (துடி: உடுக்கு); மணமலி: மணம் நிறைந்த;

சூது ஆர் இளமுலையாலே அழகிய தோடு ஆர் இரு குழைஅதனாலே

 

சூது ஆர்: பகடைக் காயைப் போன்ற;

சோரா மயல் தருமானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே

 

சோரா மயல்: சோர்வடையச் செய்யும் மையல்;

போது ஆர் இரு கழல்சூழாது அது தொழில் பூணாது எதிர் உறமதியாதே

 

போதார்: மலர் நிறைந்த;

போர் ஆடிய அதி சூராபொறு பொறு போகாதேஎன அடு திறலோனே

 

 

வேதா உடனொடு மால்ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா

 

வேதா: பிரமன்; மாலானவன்: திருமால்; அறியாதார்: (திருமாலாலும் பிரமனாலும்) அறியப்படாதவர்—பரமேஸ்வரர்;

வீரா புரி கோவேபழநியுள் வேலாஇமையவர் பெருமாளே.

 

 

ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு(ம்மொழியாலே...  பகட்டான பேச்சையும் ஆடம்பரமான விழிகளையும் அமுதம் போன்ற இனிய மொழியையும் உடைய,

ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே... ஆழமானதும் அழகியதுமான புன்னகையாலும் உடுக்கையைப் போன்ற இடையாலும் மணம் நிறைந்த கூந்தலாலும்,

சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே... பகடைக் காய்களை ஒத்த இளைய மார்பகத்தாலும் அழகிய தோடுகளை அணிந்திருக்கின்ற இரண்டு செவிகளாலும்,

சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள் புரிவாயே... தளர்ச்சியடையச் செய்கின்ற மையலைத் தருகின்ற பெண்களுடைய உறவால் ஏற்படும் துன்பங்கள் என்னைச் சூழாதபடிக்கு அருள்புரிய வேண்டும்.

போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே...மலர் நிறைந்த திருவடிகளை மனத்தில் இருத்தாமலும்; அப்படிச் சிந்திப்பதை மேற்கொள்ளாமலும் (போரில்) எதிர்த்து வந்த (சூரனைச்)  சற்றும் பொருட்படுத்தாமல்,

போர் ஆடிய அதி சூரா பொறு பொறு போகாதே என அடு திறலோனே... ‘போர்புரிய வந்த சூரனே, பொறுபொறு, போய்விடாதே’ என்று கூறியவண்ணமாக அவனை அழித்த திறலனே!

வேதா உடன் நெடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா... பிரமனாலும் நெடியவனான திருமாலாலும் அறியமுடியதவராகிய பரமேச்வரன் அருளிய குமரேசா!

வீரா புரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே.... வீரைநகரில்* வீற்றிருக்கும் அரசே!  பழநிப்பதியிலே இருக்கின்ற வேலனே! தேவர்கள் பெருமாளே!

(வீரைநகர் என்பது திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத்தலமாகும்.)

சுருக்க உரை

மலர்கள் நிறைந்த உனது திருவடிகளைச் சிந்தியாமல் உன்னோடு போர்புரிய வந்த சூரபதுமனை, ‘கொஞ்சம் நில். போய்விடாதே’ என்று சொன்னபடி எதிர்த்துப் போரிட்டு வதைத்த திறலனே! பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியதவரான பரமசிவனார் அருளிய குமரனே! வீராபுரியுல் எழுந்தருளியிருப்பவனே! பழநியில் வீற்றிருக்கும் வேலனே! இமையவர்கள் பெருமாளே!

பகட்டுப் பேச்சையும் ஆடம்பரமான கண்களையும் அமுதம்போன்ற சொற்களையும் ஆழமான புன்சிரிப்பாலும் உடுக்கையைப் போன்ற இடையாலும் இள முலையாலும் அழகிய தோடுகளை அணிந்த இரு செவிகளாலும் மயக்குகின்ற பெண்களுடைய உறவால் ஏற்படும் துன்பம் சூழாதபடிக்கு அடியேனைக் காத்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com