பகுதி - 769

மனம் மகிழுமாறு
பகுதி - 769

பதச் சேதம்

சொற் பொருள்

படிறு ஒழுக்கமும் மடமனத்து 
உள்ளபடிபரித்து உடன் நொடிபேசும் 

 

படிறொழுக்கம்: வஞ்சனையுடன்
கூடிய செயல்பாடுகள்; பரித்து:
மேற்கொண்டு; நொடி: தந்திரப்
பேச்சு;

பகடிகட்கு உ(ள்)ளம்மகிழ மெய்
 பொருள் பல கொடுத்து அறஉயிர் வாடா 

 

பகடிகட்கு:
வெளிவேஷக்காரர்களுக்கு
(பகடி என்பதற்குப் பரிகாசம்
என்பது ஒரு பொருள்.
இது இன்னொரு பொருள்);
மெய்ப்பொருள்: மெய்யையும்
(உடலையும்) பொருளையும்;
வாடா: வாடி;

மிடி என பெருவடவை சுட்டிட 
விதனம் உற்றிட மிகவாழும்

 

மிடி: வறுமை; வடவை:
வடவமுகாக்கினி, பெரும் தீ; விதனம்: துன்பம்;

விரகு கெட்டு அருநரகு விட்டு இரு 
வினை அற பதம்அருள்வாயே 

 

விரகு: அழிவு நிலை; இருவினை: நல்வினை, தீவினை; அற: கெட; பதம் அருள்வாயே:
திருப்பாதங்களை அளிக்க
வேண்டும்;

கொடி இடை குறவடிவியை புணர்
 குமர கச்சியில்அமர்வோனே 

 

வடிவியை: அழகியை; கச்சியில்:
காஞ்சியில்;

குரவு செச்சை வெண்முளரி புத்து அலர் 
குவளை முற்று அணிதிருமார்பா 

 

செச்சை: வெட்சி; வெண் முளரி:
வெண்தாமரை; புத்தலர்: புதிதாக
மலர்ந்த;

பொடி படப்பட நெடியவில் கொடு  
புரம்எரித்தவர் குருநாதா 

 

நெடிய வில்: நீண்ட வில் (இங்கே
மேரு மலை); புரம்: திரிபுரம்;

பொரு திரை கடல்நிருதரை படைபொருது 
உழக்கியபெருமாளே. 

 

திரைக்கடல்: அலைவீசும் கடல்;
நிருதர்: அரக்கர்; பொருது:
போரிட்டு; உழக்கிய: கலக்கிய;

படிறொழுக்கமும் மடம னத்து உளபடி பரித்து உடன் நொடிபேசும்...  வஞ்சனையோடு கூடிய நடத்தையை அறிவற்ற மனத்துக்குள்ளே வைத்துக்கொண்டு தந்திரமாகப் பேசுகின்ற,

பகடிகட்கு உள மகிழ மெய்ப்பொருள் பலகொடுத்து அற உயிர்வாடா... வெளிவேஷக்காரர்களுடைய மனம் மகிழுமாறு என் உடலையும் பொருளையும் பலகாலமும் கொடுத்து, உயிர் அடியோடு வாடும்படியாக நின்று,

மிடியெ னப்பெரு வடவை சுட்டிட விதன முற்றிட மிகவாழும்... வறுமை என்ற பெருந்தீ என்னைச் சுட்டெரிக்க அதனால் ஏற்பட்ட துன்பத்துடன் வாழுகின்ற,

விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினையறப் பதம் அருள்வாயே... இந்த அழிவுநிலை கெடவும்; இந்தப் பெரிய நரகத்திலிருந்து நீங்குவதற்கும்; என் இருவினைகளும் ஒழிவதற்காகவும் உன்னுடைய திருப்பாதங்களைத் தந்தருள வேண்டும்.

கொடியிடைக்குற வடிவியைப்புணர் குமர கச்சியில் அமர்வோனே... கொடிபோன்ற இடையைக் கொண்ட குறமகளும் அழகியுமான வள்ளியை மணந்த குமரனே!  காஞ்சீபுரத்தில் வீற்றிருப்பவனே!

குரவு செச்சைவெண் முளரி புத்தலர் குவளை முற்றணி திருமார்பா .... குரா மலரையும் வெட்சிப் பூவையும் வெண் தாமமரையையும் புதிததாக மலர்ந்த குவளை மலரையும் நிறைய அணிகின்ற திருமார்பனே!

பொடிபடப்பட நெடிய விற்கொடு புரமெ ரித்தவர் குருநாதா... தூள்பட்டு அழியும்படியாக மேருமலையாகிய நீண்ட வில்லை வளைத்து, (சிரித்தே) திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய குருநாதனே!

பொருதிரைக்கடல் நிருதரைப்படை பொருது உழக்கிய பெருமாளே... எதிர்த்து எழுகின்ற அலைகளை உடைய கடலையும் அசுர்களையும் வேலாயுதத்தைக் கொண்டு போரிட்டு கலக்கிய பெருமாளே!


சுருக்க உரை:

கொடிபோன்ற இடையை உடைய குறக்குலத்து அழகியான வள்ளியை மணமுடித்த குமரனே!  காஞ்சியில் வீற்றிருப்பவனே! குரா, வெட்சி, வெண்டாமரை, அன்றலர்ந்த குவளைப்பூ எல்லாவற்றையும் நிரம்ப அணிந்திருக்கின்ற மார்பனே!  திரிபுரங்கள் பொடியாகும்படிய நெடிய வில்லான மேருமலையை வளைத்து, அவற்றைச் சிரித்தே எரித்த சிவபெருமானுடைய குருநாதனே!  எதிர்த்து எழும் அலைகளைக் கொண்ட கடலையும் அசுரர்களையும் வேற்படையைக் கொண்டு போரிட்டுக் கலக்கிய பெருமாளே!

அறியாமை நிறைந்த மனத்தில் வஞ்சகத்தை நிறைத்துக்கொண்டு அந்த மனம் சொன்னபடியெல்லாம் தந்திரமாகபப் பேசுகின்ற வெளிவேஷக்காரர்கள் மகிழ்ச்சி கொள்ளும்படியாக என் உடலையும் பொருளையும் பலகாலம் வீணாக்கி என் உயிர்வாடினேன்.  தரித்திரம் என்னும் பெருநெருப்பு என்னைச் சுட்டெரிக்க அதனைத் தாங்க முடியாமல் துன்பமடைந்து வாடியபடி வாழ்கிறேன்.  இந்த அழிவு நிலை நீங்கவும்; இந்த நரகத்திலிருந்து நான் விடுபடவும்; என் இருவினைகளும் ஒழியவும் உன்னுடைய திருவடியைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com