பகுதி -773

பழ மறை மொழி
பகுதி -773

பதச் சேதம்

சொற் பொருள்

விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல

 

விரகொடு: திறமையோடு; வளை: வளைக்கின்ற; வெம்பிணி: கொடிய பாசக் கயிறு (பிணி: பிணித்தல்);

வெறி கொடு சமனின் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடு போதில்

 

சமன்: யமன்;

கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாயும்

 

கரவடம்: களவு, வஞ்சகம்;

கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே

 

குலவினை: கூட்டமான வினை, வினைக்கூட்டம்; இயல் தந்து: இயல்பைத் தந்து;

பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவு அணை கண் துயில் மால் அம்

 

பரவிடும்: போற்றிடம்; விடம்: விஷம்; பட அரவணை: படத்தைக்கொண்ட ஆதிசேஷனாகிய படுக்கை; மால்: திருமால்; அம்: அழகிய;

பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி

 

பங்கயன்: பிரமன்;

அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அங்கையில் மேவ

 

 

அரிவையும் ஒரு பங்கு இடம் உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே.

 

 

விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு... திறமையோடு சூழ்ந்துகொண்டு துன்பத்தை ஏற்படுத்துகின்ற கொடிய பாசக்கயிற்றைக் கொண்டு,

விழி வெம் கனல் போல வெறி கொடு சமன் நின்று... கண்களில் கொடிய நெருப்பைப்போல கோபக்கனல் பறக்க, யமன் எதிரில் வந்து நின்று,

உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடு போதில்... விதியின் முறைப்படி உயிரைப் பறிக்க வேண்டிய நாள் இது என்று அருகில் நெருங்குகின்ற சமயத்தில்,

கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாயும் கலகமும் வரு முன்... வஞ்சனை பொங்குகின்ற மனத்தோடு பெண்களும் உறவினர்களும் கண்ணால் நீர்சொரிகின்ற குழப்பம் வருவதற்கு முன்பாகவே,

குலவினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே... என் வினைக்கூட்டங்களை வேரறுக்கின்ற திருவடிகளைத் தொழுகின்ற இயல்பைத் தந்து அருளவேண்டும்.

பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவு அணை கண் துயில் மால் அம் பழ மறை மொழி பங்கயன் .. போற்றுபவர்களுடைய மனத்தில் உறைபவரும் நஞ்சை உமிழ்கின்றதும் படங்களைக் கொண்டதுமான தலைகளை உடைய ஆதிசேஷனாகிய படுக்கையில் அறிதுயில் கொள்கின்ற திருமாலுக்கும் தொன்மையான வேதத்தை ஓதுபவனான பிரமனுக்கும்,

இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி  அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அங்கையில் மேவ...தேவர்களுக்கும் பயம் தொலையும்படியாக ஆலகால விஷத்தைப் பருகி, விடையிலேறி, பாம்பையும் சந்திரனையும் தரித்திருக்கிற சடாமுடியின் மேலே கங்கையும் விளங்க, உள்ளங்கையில் தீ விளங்க,

அரிவையும் ஒரு பங்கு இடம் உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே.... உமையம்மையைத் தமது இடது பாகத்தில் கொண்டிருக்கின்ற சிவபெருமான் குடிகொண்ட திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

துதிப்பவர்களுடைய மனத்தில் உறைபவரும்; விஷத்தைக் கக்குவதும் படங்களைக் கொண்ட பல தலைகளை உடையதுமான ஆதிசேஷனாகிய படுக்கையில் அறிதுயில் கொண்டிருக்கும் திருமாலுக்கும் தொன்மையான வேதங்களை ஓதுபவனான பிரமனுக்கும் தேவர்களுக்கும் ஏற்பட்ட பயம் தொலையும்படியாக ஆலகால விஷத்தைப் பருகி; விடையேறி; பாம்பையும் சந்திரனையும் தரித்திருக்கின்ற ஜடாமுடியில் கங்கையையும் தரித்து, உள்ளங்கையில் தீ விளங்க; உமையம்மையைத் தன் இடதுபாகத்தில் கொண்டவரான சிவபெருமான் குடியிருக்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மிகத் திறமையோடு வந்து விழுந்து சுருக்கிட்டுத் துன்பத்தை விளைக்கின்ற கொடிய பாசக்கயிற்றைக் கையில் ஏந்தியபடி; கண்களில் கோபத்தால் தீப்பொறி பறக்க; ‘விதிப்படி இந்த உயிரைப் பறிக்கவேண்டிய நாள் இது’ என்று ஆராய்ந்த யமன் எதிரில் வந்து நிற்கின்ற சமயத்தில்—

வஞ்சனை நிறைந்த மனத்தோடு பெண்களும் உறவினரும் கண்ணில் நீரைப் பெருக்குகின்ற குழப்பம் ஏற்படும் காலத்துக்கு முன்னதாகவே என்னுடைய வினைக்கூட்டங்களை வேரறுக்க வல்லதான உன்னுடைய திருவடியைத் தொழுகின்ற இயல்பை எனக்குத் தந்தருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com