பகுதி - 775

அறம் தழைத்த
பகுதி - 775

பதச் சேதம்

சொற் பொருள்

நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால(ம்) நேர் என நெடும் சுருட்டு குழல் ஜீமூத(ம்) நேர் என நெஞ்சின் மேலே

 

துப்பு: பவளம்; துப்பிதழ்: பவளம் போன்ற இதழ்; தேனூறல்: ஊறுகின்ற தேன்; மறம் தரித்த: கொல்லுவதைப் போன்ற; ஜீமூதம்: மேகம்;

நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என நைந்து சீவன்

 

மருங்கு: இடை; நிட்கள(ம்): உருவமற்ற; நிதம்பம்: அல்குல், இடை;

குறைந்து இதம்பட வாய் பாடி ஆதரம் அழிந்து அணைத்து அணை மேல் வீழும் மால் கொடு குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி

 

இதம்பட: இன்பம் அழிய; ஆதரம்: அன்பு; அணை: படுக்கை; மால்கொடு: மயக்கம் கொண்டு; குமண்டை இட்டு: மகிழ்ச்சியால் குதித்து; உடை சோரா: உடை நெகிழ்ந்து; விடாயில்: தாகத்தில்;

குடைந்து இளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம் என்று சேர்வேன்

 

குடைந்து: மூழ்கி; கோமாளம்: மகிழ்ச்சி; மனோலயம்: மன ஒடுக்கம்;

மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது ஏது சொல் மனம் களித்திடல் ஆமோ துரோகிதம் முன்பு வாலி

 

சுக்ரிப: சுக்ரீவா; உலுத்தன்: உலோபி, பேராசைக்காரன்; ஓராதது: எண்ணிப் பாராதது; துரோகிதம்: பாதகம்;

வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் என்று பேசி

 

விக்ரம: பராக்கிரம; சீராமன்: ஸ்ரீராமன்; சரம்: அம்பு; ஓகோ: ‘ஓகோ’ என்று அதட்டுதல்; கெடாது: கெட்டுப்போகாமல்; ஆகவம்: போர், போரின் விளைவு;

அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன் அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான

 

 

அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே.

 

நாரணன் மைந்தனான அநங்கன்: (அநங்கன்: மன்மதன்); திருமாலின் மகனான மன்மதன்; கலாபி: மயில்; செய்ப்பதி: வயலூர்; வியன் நலம்: சிறப்பும் நலமும்; கயப்பதி: ஆனைக்கா—திருவானைக்கா;

நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால(ம்) நேர் என... நிறைவான பவளம் போன்ற உதடுகளில் ஊறும் நீர் தேனை ஒக்கும் என்றும்; (ஆளைக்) கொல்வதுபோன்ற கண்கள் ஆலகால விஷத்தை ஒக்கும் என்றும்;

நெடும் சுருட்டு குழல் ஜீமூத(ம்) நேர் என நெஞ்சின் மேலே நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என... நீண்டதும் சுருண்டதுமான கூந்தல் மேகத்தை ஒக்கும் என்றும்; மார்பின்மேல் நெருங்கியிருக்கின்ற தனங்கள் மேரு மலையை ஒக்கும் என்றும்;

மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என நைந்து சீவன் குறைந்து இதம்பட வாய் பாடி...(இல்லையோ எனத்தக்க) இடை உருவமற்ற ஆகாயத்தை ஒக்கும் என்றும்; அல்குல், முக்கண்ணனாகிய சிவபெருமான் அணிந்துள்ள பாம்பை ஒக்கும் என்றும் சொல்லிச் சொல்லி நைந்து ஜீவன் வாட்டம் எய்தி; இன்பம் அழியுமாறு வாயால் பாடி,

ஆதரம் அழிந்து அழைத்து அணை மேல் வீழு(ம்) மால் கொடு குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி குடைந்து...அன்பில்லாமலேயே அழைத்துப் படுக்கையில் வீழ்த்தப்படும் மயக்கத்தை அடைந்து; மகிழ்ச்சிக் கூத்தாடி; ஆடை நெகிழ; மோக தாகத்தில் விழுந்து; (அப்பெண்களின்) நாபியில் விழுந்து திளைத்து;

இளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம் என்று சேர்வேன்... சோர்வடைகின்ற பெருமாய வாழ்வைத் தருகின்ற பெண்களின் பின்னாலே மகிழ்ந்து குதிக்கின்ற குரங்கைப்போலத் திரிந்துகொண்டிருப்பேனோ? என்றைக்கு மன ஒடுக்கத்தை அடைவேன்? (மனோலயத்தை விரைவில் அருளவேண்டும்.)

மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது ஏது சொல் மனம் களித்திடல் ஆமோ துரோகித(ம்)... (சொன்ன வார்த்தையை) மறந்த சுக்ரீவனாகிய இழிவான குரங்கரசனுடைய வாசலில் நின்று, ‘உலுத்தனே! நீ எண்ணிப்பாராதது ஏன்? சொல். (சொன்னதை முடிக்காமல்) மனத்திலே இன்பம் கொள்வது தகுமா?  இது பாதகமல்லவா.

முன்பு வாலி வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதிச் சரம் ஓகோ கெடாது இனி வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் என்று பேசி... ‘முன்னர் வாலியை வதம்செய்த சீராமன் நான். ஓகோ! உலகெலாம் அறிந்த (ஆற்றல்மிக்க) என் அம்பு தவறாது. (சீதையைத் தேட உன் சேனையை) இனி வரச் சொல். நடக்கப்போகும் பல போர்களின் விளைவை நீயே பார்’ என்றெல்லாம் சொல்லி (இலக்குவன் மூலமாகத் தூது அனுப்பி)

அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன் அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான அநங்கன் மைத்துன வேளே... அறநெறியில் நிற்கும் அனுமனோடு பெருங்கடலை அடைத்து சேதுபந்தனம் செய்வித்து; அந்தச் சேதுவின்மீது நடந்துசென்று; ராவணனுடைய மதில்களை அழித்து எதிர்த்துப் போர்தொடுத்த நாராயணனுடைய மகனான மன்மதனுடைய மைத்துனனே*! வேளே!

(* வள்ளி திருமாலின் மகள்; மன்மதன் மகன் என்பதால் மனைவியின் சகோதரன் மைத்துனன் ஆகிறான்.)

கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் தம்பிரானே.... மயில்மீது விளங்குகின்ற வயலூர் வேலாயுதனே!  சிறப்பும் நலமும்கொண்ட திருவானைக்காவில் வீற்றிருப்பவனே! தேவர்களின் தம்பிரானே!

சுருக்க உரை

சுக்ரீவனுடைய மாளிகை வாயிலுக்குச் சென்று, ‘சொன்ன வாக்கை மறந்த சுக்ரீவனே! நீசனே! உலுத்தனே! சொன்ன சொல்லை யோசிக்காதது ஏன்? அதற்குள் என்ன களிப்பு? இது பாதகமல்லவா! முன்னர் வாலியை அழித்த சீராமன் நான்.  அவனை வீழ்த்திய, உலகறிந்த அம்பு இன்னமும் என்னிடத்தில்தான் இருக்கிறது. கெட்டுப்போகவில்லை.  (நீ சொன்னதைப்போல் பிராட்டியாரைத் தேட உன் சைனியத்தை) வரச்சொல். அதன்பின்னர் நடக்கப்போகும் பல போர்களின் விளைவுகளை நீயே பார்ப்பாய்’ என்று இலக்குவன் மூலமாக தூதனுப்பி; அறநெறியில் நிற்கும் அனுமனோடு சென்று கடலை அடைத்து சேதுபந்தனம் செய்து அதன்மீது சென்று ராவணனுடைய மதிலையும் கோட்டையையும் அழித்து எதிர்த்துப் போரிட்ட நாராயணனுடைய மைந்தனான மன்மதனுடைய மைத்துனனே! வேளே! மயில்மீது தோன்றுபவனே! வயலூர் வேலாயுதனே! சிறப்பும் நலமும் கொண்ட திருவானைக்காவில் வீற்றிருப்பவனே!  தேவர்கள் தலைவனே!

‘பவளம்போன்ற உதடுகளில் ஊறும் நீர் தேனை ஒக்கும்; ஆளை வீழ்த்தும் கண் ஆலகால விஷத்தை ஒக்கும்; நீண்டு சுருண்டிருக்கின்ற கூந்தல் கருமேகத்தை ஒக்கும்; மார்பகங்கள் மேரு மலையை ஒக்கும்; இடை, உருவம் இல்லாத ஆகாயத்தை ஒக்கும்; அல்குல் சிவபெருமான் அணிந்துள்ள பாம்பை ஒக்கும்’ என்றெல்லாம் பிதற்றிச் சோர்வடைந்து; சீவன் மங்கி, இன்பம் அழிய, வாயால் பாடி; மனத்தில் அன்பு இல்லாமலேயே அழைத்து, படுக்கையில் வீழ்த்தி, மகிழ்ச்சியுடன் குதித்து, ஆடை நெகிழ, மோகாவேசத்தால் நாபியில் மூழ்கித் திளைக்கச் செய்து களைப்படையச் செய்கின்ற மாதர்களிடத்திலே மகிழ்ச்சியைக் கொண்ட குரங்கைப் போல அவர்கள் பின்னால் அலைந்தபடி இருப்பேனோ? மனோலயத்தை என்று அடைவேன்? (அதை உடனே தந்தருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com