பகுதி - 779

குற்றமற்ற மலரான
பகுதி - 779

பதச் சேதம்

சொற் பொருள்

காம அத்திரமாகி இளைஞர்கள் வாழ் நாள் கொடு போகி அழகிய காது ஆட்டிய பார இரு குழை அளவோடி

 

 

கார் போல் தவழ் ஓதி நிழல் தனில் ஆர் வாள் கடை ஈடு கனம் கொ(ண்)டு கால் ஏற்றும் வை வேலின் முனை கடை யம தூதர்

 

கார்போல்: மேகத்தைப் போல்; ஓதி: கூந்தல்; கால்: காற்று; வை வேல்: கூர்மையான வேல் (வை: கூர்மை);

ஏமாப்பு அற மோக இயல் செய்து நீலோற்பல ஆசு இல் மலருடன் நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார் பால்

 

ஏமாப்பு அற: இறுமாப்பு கெட; ஆசு இல் மலர்: குற்றமற்ற மலர்;

ஏகா பழி பூணும் மருள் அற நீ தோற்றி மு(ன்)னாளும் அடிமையை ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே

 

ஏகாப் பழி: நீங்காத பழி; மருளற: மயக்கம் கெட;

சீமாட்டியும் ஆய திரி புரை காலாக்கினி கோப பயிரவி சீல உத்தமி நீலி சுர திரி புவன ஈசை

 

சீமாட்டி: பெருமாட்டி;

சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு சீராட்டொடு பேண வட திசை கயிலாச

 

சீ: ஸ்ரீ;

கோமாற்கு உபதேச உபநிட வேத அர்த்த மெய்ஞ் ஞான நெறி அருள் கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே

 

கோமாற்கு: கோமானுக்கு—தலைவனுக்கு; கோதாட்டிய: குற்றத்தை நீக்கிய;

கோடா சிவ பூஜை பவுருஷ மாறா கொடை நாளும் மருவிய கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே.

 

கோடா: கோடாத, தவறாத; பவுருஷ: ஆண்மை நிறைந்த; மாறாக் கொடை: மறாக் கொடை—மறுக்காத கொடை;

(இப்பாடலில் ‘காமாத்திரமாகி’ என்பது தொடங்கி, ‘நீலோற்பல’ என்று தொடங்கும் விழி வருணிக்கப்படுகிறது.)

காம அத்திரமாகி இளைஞர்கள் வாழ் நாள் கொடு போகி அழகிய காது ஆட்டிய பார இரு குழை அளவோடி... மன்மதன் தொடுக்கும் அஸ்திரமாக விளங்கி; இளைஞர்களுடைய உயிரைக் கவர்ந்துகொண்டு போவதாகவும்; அழகிய காதுகளிலே ஆடுகின்ற கனமான இரண்டு குண்டலங்கள் வரையில் செல்வதும் (காதளவோடியதாக இருப்பதும்);

கார் போல் தவழ் ஓதி நிழல் தனில் ஆர் வாள் கடை ஈடு கன(ம்) கொ(ண்)டு... மேகத்தைப் போன்ற கூந்தலுக்குக் கீழே இருந்தபடி, வாளின் முனையைப் போல கூர்மையும் வன்மையும் கொண்டதும்;

கால் ஏற்று வை வேலின் முனைக் கடை யம தூதர் ஏமாப்பு அற மோக இயல் செய்து... வலிய காற்றின் தன்மையைக் கொண்டதும்; ‘கூரிய வேலின் முனையைப் போன்ற இக்கண்களின் கொடுமைக்குமுன்னால் நாம் எம்மாத்திரம்’ என்று யமதூதர்களும் தங்களுடைய இறுமாப்பை இழக்கச் செய்வதும்; மோகத்தை ஊட்டுவதும்;

நீலோற்பல ஆசு இல் மலருடன் நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார் பால் ஏகாப் பழி பூணும் மருள் அற... குற்றமற்ற மலரான நீலோற்பலத்தைப் போல பாவனைகளைக் காட்டுவதும்; விநோதங்களைக் கொண்டதுமான விழிகளை உடைய பெண்களால் நீங்காத பழியை அடைந்திருந்த மயக்கம் அடியோடு நீங்கும்படியாக,

நீ தோற்றி மு(ன்)னாளும் அடிமையை ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே... என் எதிரிலே நீ தோன்றி அடிமையாகிய என்னைக் கரையேற்றிய உன்னுடைய அருளின் திறத்த்தை நான் எப்போதும் மறவேன்.

சீமாட்டியும் ஆய திரி புரை காலாக்கினி கோப பயிரவி சீல உத்தமி நீலி சுர திரி புவன ஈசை... சீமாட்டியாக விளங்குகின்ற திரிபுரையும்; யுகங்களின் முடிவில் தோன்றும் காலாக்கினியைப் போன்ற சீற்றத்தையுடை பைரவியும்; சீலங்கள் நிறைந்த உத்தமியும்; நீலியும் மூவுலகங்களுக்கும் ஈஸ்வரியும்;

சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு சீராட்டொடு பேண... ஸ்ரீ கார்த்திகைப் பெண்கள் அறுவரும் ‘குமாரா’ என்று சீராட்டிப் பேணியவனும்;

வட திசை கயிலாச கோமாற்கு உபதேசம் உபநிட வேத அர்த்த மெய்ஞ் ஞான நெறி அருள்... வடக்கிலிருக்கின்ற கயிலாயத்தில் வீற்றிருக்கும் முதல்வரான சிவபெருமானனுக்கு வேத, உபநிடதங்களின் பொருளான மெய்ஞ்ஞான நெறியை உபதேசித்து,

கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே... (அவரிடத்திலிருந்து அறியாமை என்னும்) குற்றத்தை நீக்கியவனும்; அவருக்குக் குருமூர்த்தியாக விளங்குபவனுமான இளையவனே!

கோடாச் சிவ பூஜை பவுருஷ மாறாக் கொடை நாளும் மருவிய கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே.... தவறாத சிவபூஜையின் சிறப்பும்; ‘இல்லை’ என்று மறுக்காத கொடையும் எப்போதும் பொருந்தியிருக்கின்ற கோனாட்டைச்* சேர்ந்த விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

(* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு; மதிற்கரைக்குக் கிழக்கு;
காவிரிக்குத் தெற்கு; பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. விராலி மலை இங்குதான் உள்ளது.)

சுருக்க உரை

சீமாட்டியும் திரிபுரையும் காலாக்கினியைப் போன்ற சீற்றத்தை உடைய பைரவியும் உத்தமியும் நீலியும், மூவுலகங்களுக்கும் ஈஸ்வரியுமான உமையம்மையும்; கார்த்திகைப் பெண்கள் அறுவரும் ‘குமாரா’ என்றழைத்துச் சீராட்டியவனே! வடக்கே கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவனாருக்கு வேத, உபநிடதங்களின் பொருளான மெய்ஞ்ஞான நெறியை உபதேசித்து அவருடைய அறியாமை என்னும் குற்றத்தைப் போக்கிய குருமூர்த்தியான இளையவனே! என்றும் தவறாத சிவ பூஜையுடைய சிறப்பும் ‘இல்லை’ என்று சொல்லாத கொடையையும் உடைய கோனாட்டிலுள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

மன்மத பாணமாகி இளைஞர்களுடைய உயிரைப் பறிப்பதும்; குண்டலங்களை அணிந்த காதுகளைத் தொடும் அளவுக்கு நீளமானதும்; மேகத்தைப் போன்ற அடர்ந்த கூந்தலுக்குக் கீழே கூர்மையும் பருமையும் பெற்றிருப்பதும்; ‘கூரிய வேல்முனை போன்ற இவற்றின் கொடுமைக்கு முன்னால் நாம் எம்மாத்திரம்’ என்று யமதூதர்களையும் செறுக்கழியச் செய்வதும்; மோகத்தை ஊட்டுவதும்; குற்றமற்ற நீலோற்பல மலரைப் போலக் காட்சியளித்து பலவிதமான பாவனைகளைக் காட்டி விநோதங்களைச் செய்வதுமான விழிகளை உடைய பெண்களின் காரணமாகத் தீராப் பழியையும் மயக்கத்தையும் உடையவனாக இருந்த என்முன்னே நீ தோன்றியருளி ஆட்கொண்டருளிய உன்னுடைய கிருபையின் திறத்தை எப்போதும் மறவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com