பகுதி - 785

அரிவையர் நெஞ்சு உருகா
பகுதி - 785

பதச் சேதம்

சொற் பொருள்

அரிவையர் நெஞ்சு உருகா புணர் தரு விரகங்களினால் பெரிது அவசம் விளைந்து விடாய்த்து அடர் முலை மேல் வீழ்ந்து

 

அரிவையர்: பெண்க(ளின்மேல்); உருகா: உருகி; அவசம்: (அ-வசம்) வசமிழந்து; விடாய்த்து: தாகம் மேலிட்டு; அடர்: நெருங்கியுள்ள;

அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை அடியில் நகம் பிறை போல் பட விளையாடி

 

எதிர் கூப்பு கை: எதிரேற்று (வரவேற்று) கூப்பிய கை;

பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய மருங்கு உடை போய் சில பறவைகளின் குரலாய் கயல் விழி சோர

 

பரிமளம்: நறுமணம்; மருங்கு: இடையில்; சோர: சோர்வடைய;

பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய் பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ

 

வேர்ப்பு: வியர்வை; பகடியிடும்படி: கூத்தாடும்படி; தூர்த்தனை: கொடியவ(னாகிய என்னை);

சரியை உடன் க்ரியை போற்றிய பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு க(ண்)ணன் ரங்க புரம் உ(ச்)சிதன் மருகோனே

 

ரங்க புரோச்சிதன்: ரங்க புரத்து உசிதன்—மேன்மையானவன்;

சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் சகம் அறியும்படி காட்டிய குருநாதா

 

சயிலம்: மலை (கிரெளஞ்சம்);

திரி புவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் தெருவில் விளங்கும் சிராப் ப(ள்)ளி மலைமீதே

 

திரிபுவனம்: மூவுலகம் (மூவுலகும்); பார்த்திபன்: மன்னவன்—குணதரன் என்ற மகேந்திர வர்மன்; கோட்டிகள்: கூட்டங்கள்—நூற்றுக்கால், ஆயிரங்கால் எனத் தூண்களை உடைய;

தெரிய இருந்த பராக்ரம உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு திலதம் எனும் படி தோற்றிய பெருமாளே.

 

குன்று உடையார்க்கு: திரிசிராப்பள்ளிக் குன்றில் வீற்றிருக்கும் தாயுமானவரான சிவனுக்கு;

அரிவையர் நெஞ்சு உருகாப் புணர் தரு விரகங்களினால் பெரிது அவசம் விளைந்து விடாய்த்து... பெண்களிடத்திலே மன உருக்கம் ஏற்பட்டு; கூடுகின்ற இச்சையால் ஏற்பட்ட விரகதாபத்தான் வசமழிந்து; தாகம் மேலிட்டு;

அடர் முலை மேல் வீழ்ந்து அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை அடியில் நகம் பிறை போல் பட விளையாடி... நெருங்கிய தனங்களின் மேலே விழுந்து; அகில், சந்தனக் கலவைகளின் சேற்றிலே மூழ்கிக் கிடந்து; வரவேற்றுக் கூப்பிய கையின் அடியில் இருக்கும் நகம் பிறைபோல் பதியும்படியாக விளையாடி;

பரிமளம் விஞ்சிய பூக்குழல் சரிய மருங்கு உடை போய்ச் சில பறவைகளின் குரலாய்க் கயல் விழி சோரப் பனி முகமும் குறு வேர்ப்பு எழ... நறுமணம் கமழும் பூக்களைச் சூடிய கூந்தல் கலைந்துவிழ; இடையிலிருக்கும் உடை கலைய; (கலவியால் கம்மிய குரல் குருவியைப் போன்ற) சில பறவைகளின் குரலாக ஒலிக்க; மீன்போன்ற கண்களில் சோர்வு பெருக; குளிர்ச்சியான முகத்தில் குறுவியர்வை பூக்க;

இதழ் அமுது உண்டு இரவாய்ப் பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ... உதட்டிலே ஊறும் அமுதத்தை உண்டபடி இரவும் பகலும் கூத்தடிக்கும்படியாக இந்தக் கொடியவனை கைவிட்டு விடலாமோ? (அவ்வாறு ஆகாமல் அடியேனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்.)

சரியை உடன் க்ரியை போற்றிய பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு க(ண்)ணன் ரங்க புரம் உ(ச்)சிதன் மருகோனே... சரியை, கிரியை* எனப்படும் மார்க்கங்களை மேற்கொண்டு மேலான பதத்தைப் பெறத் தகுதியானவர்களுக்கு அருளைத் தரும் கண்ணனும்; திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள மேலானவனுமான திருமாலின் மருகனே!

(சரிசை, கிரியை மார்க்கங்களின் விளக்கத்துக்குத் தவணை எண் 781-ஐக் காணவும்.)

சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் சகம் அறியும்படி காட்டிய குருநாதா... கிரெளஞ்ச மலை பொடியாகும்படி வீசிய வேலைக் கையில் ஏந்தியபடி மயில்மீது வந்து என்னை ஆட்கொண்டதை உலகம் அறியும்படியாகக் காட்டிய* குருநாதா!

(* இது திருவண்ணாமலையில் குருநாதரை முருகன் தடுத்தாட்கொண்டதைக் குறிக்கிறது.)

திரி புவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் தெருவில் விளங்குச் சிராப் ப(ள்)ளி மலைமீதே தெரிய இருந்த பராக்ரம...மூவுலங்களும் தொழுகின்ற பல்லவ மன்னன்* கட்டிய பல தூண்களை உடைய மண்டபங்கள் வீதிகளிலெல்லாம் விளங்குகின்ற திரிசிராப்பள்ளி மலையின் மேலே வீற்றிருக்கின்ற வீரனே!

(* இது நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், பதினாறுகால் மண்டபம், மணிமண்டபம் முதலான பல மண்டபங்களைக் கட்டிய ‘குணதரன்’ எனப்படும் மகேந்திர பல்லவன், ராஜராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்களைக் குறிக்கிறது என்பது தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையர்களின் கருத்து.)

உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு திலதம் எனும் படி தோற்றிய பெருமாளே.... அழகிய உருவத்தைக் கொண்ட குன்றிலே விளங்குபவரான தாயுமானவராய் இருக்கும் சிவனாருடைய திலகத்தைப்போலத் தோன்றி விளங்குகின்ற பெருமாளே!

சுருக்க உரை

சரியை, கிரியை மார்க்கங்களைக் கடைப்பிடித்து மேலான பதங்களைப் பெறவிரும்புவோருக்கு அருளைத் தரும் கண்ணனும்; ஸ்ரீரங்கத்திலே பள்ளிகொண்டிருக்கும் மேலானவனுமான திருமாலின் மருகனே! கிரெளஞ்ச மலையை பொடியாக்கிய வேலைக் கையில் ஏந்தியபடி, மயிலின்மேல் அமர்ந்துவந்து என்னைத் திருவண்ணாமலையில் ஆட்கொண்டதை உலகறியும்படிச் செய்த குருநாதனே! மூவுலகங்களும் போற்றும்படியாக அரசாண்ட சோழ, பல்லவ மன்னர்கள் கட்டிய பல தூண்களை உடைய மண்டபங்கள் நிறைந்து விளங்குகின்ற வீதிகளைக்கொண்ட திரிசிராப்பள்ளி மலையின்மீது வீற்றிருக்கின்ற வீரனே! அழகிய உருவத்தைக் கொண்ட குன்றிலே வீற்றிருக்கின்ற தாயுமானவரான சிவனுடைய திலகத்தைப்போலத் தோன்றி விளங்குகின்ற பெருமாளே!

பெண்களின் மீது உள்ளம் உருகி, அவர்களைச் சேரவேண்டும் என்ற விரகதாபத்தால் தன் வசத்தை இழந்தும்; நெருங்கிய தனங்களின் மேலே பூசப்பட்டுள்ள அகில், சந்தனக் குழம்புகளின் கலவையில் மூழ்கி எழுந்தும்; உடலில் நகம் பதியும்படியாக விளையாடியும்; நறுமணம் மிகுந்த பூக்களைச் சூடிய கூந்தல் கலையவும்; இடையிலிருந்து உடை நழுவவும்; கலவியினாலே குரல் உடைந்து சில பறவைகளுடைய ஓசையைப் போல சப்திக்கவும்; கண்கள் சோர்வடையவும்; குளிர்ந்திருக்கின்ற முகத்திலே குறுவியர்வை தோன்றவும்; உதடுகளில் ஊறுகின்ற அமுதத்தை இரவும் பகலும் உண்டு கூத்தாடுகின்ற இந்த மூர்க்கனைக் கைவிட்டு விடலாமோ?  (இவ்வாறு ஆகாமல் தடுத்தாட்கொள்ள வேண்டும்.) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com