பகுதி - 789

அழுதும் ஆவா என தொழுதும்...
பகுதி - 789

789

பதச் சேதம்

சொற் பொருள்

அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று

 

ஆவா என: ‘ஆ! ஆ!’ என; ஊடூடு: அவ்வப்போது; ஆதார: ஆதர—அன்பு; ஊடுற்று: மூழ்கி;

அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு அறி ஒணா மோன முத்திரை நாடி

 

அமைவில்: அமைவு இல்—அமைதியற்ற; கோலாகல: ஆடம்பரமான; அறியொணா: அறிய முடியாத; மோன முத்திரை: மௌனமாகிய (அடையாளக்) குறி;

பிழை படா ஞான மெய் பொருள் பெறாதே வினை பெரிய ஆதேச புற்பதம் மாய

 

ஆதேச(ம்): ஆதேயம்—தாங்கப்படுவது (That which is supported—இங்கே தாங்கப்படும் பிறவிகள்); புற்புதம்: நீர்க்குமிழி; மாய: மாயையான;

பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே

 

வாராகரம்: கடல்; வாராகரச் சுழி: கடலின் நீர்ச் சுழி;

பழைய பாகீரதி படுகை மேல் வாழ்வு என படியும் ஆறு ஆயின தன சாரம்

 

பாகீரதி: பகீரதி, கங்கை; ஆயின: தாய்களுடைய; தன சாரம்: முலைப்பால்;

பருகும் ஆறு ஆனன சிறுவ சோணாசல பரம மாயூர வித்தக வேளே

 

ஆறு ஆனன: ஆறுமுக (ஆனனம்: முகம்); சோணாசல(ம்): திருவண்ணா மலை; மாயூர: மயூர, மல்;

பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன

 

பொழுதுசூழ் போது: பொழுதுபோன வேளையிலே, அந்தி நேரத்திலே; பொடிபடா: பொடிபட்டு;

புணரி கோ கோ என சுருதி கோ கோ என பொருத வேலாயுத பெருமாளே.

 

புணரி: கடல்; சுருதி: வேதம்;

அழுதும் ஆவா எனத் தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதரக் கடல் ஊடுற்று... அழுதும் ‘ஆகா’ என வியந்து தொழுதும்; அவ்வப்போது நெகிழ்ந்து தன்வசமிழந்து அன்பு (பக்தி) என்னும் கடலிலே மூழ்கித் திளைத்தும்;

அமைவில் கோலாகலச் சமய மா பாதகர்க்கு அறி ஒணா மோன முத்திரை நாடி... அமைதியாக இல்லாதவர்களும் ஆடம்பரமானவர்களுமான சமயவாதம் பேசும் பாதகர்களால் அறிய முடியாததான ‘மௌனம்’ என்னும் அறிகுறியைத் தேடியலைந்த போதிலும்,

பிழை படா ஞான மெய்ப் பொருள் பெறாதே வினைப் பெரிய ஆதேச புற்பதமாய... சற்றும் தவறுதலற்ற ஞான மெய்ப் பொருளை நன் அடையாமலும்; என்னுடைய வினைகளுக்குச் சமமானதும் பெரிதானதும்; தாங்கப்பட வேண்டியதும்; நீர்க்குமிழியை ஒத்ததும்; மாயை நிறைந்ததுமான,

பிறவி வாராகரம் சுழியிலே போய் விழப் பெறுவதோ நான் இனிப் புகல்வாயே... பிறவி என்னும் கடலிலே இருக்கின்ற நீர்ச் சுழியிலே நான் விழத்தான் வேண்டுமோ? இதை நீ சொல்லியருள வேண்டும்.  (அடியேனைப் பிறவிக் கடலில் அகப்பட்டுக்கொள்ளாமல் காக்க வேண்டும்.)

பழைய பாகீரதிப் படுகை மேல் வாழ்வு எனப் படியும்... தொன்மையான கங்கையாற்றில் சரவணப் பொய்கயில் (ஆறு) செல்வக் குமாரர்களாய்த் தோன்றி;

ஆறு ஆயினத் தன சாரம் பருகும் ஆறு ஆனனச் சிறுவ சோணாசலப் பரம மாயூர வித்தக வேளே... ஆறு கார்த்திகைப் பெண்களான தாயரிடம் முலைப்பால் பருகியவனே! ஆறு முகங்களைக் கொண்ட பாலனே! திருவண்ணாமலைப் பரமனே! மயில் வாகனனே! ஞான மூர்த்தியே!

பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட... பொழுது சாய்கின்ற அந்திப் பொழுதிலே கிரெளஞ்சமலை பொடிபடும்படியும்; உலகில் புழுதி பறக்கும்படியும்; அசுரர்கள் ஓடும்படியும்;

முத்து எறி மீனப் புணரி கோ கோ என சுருதி கோ கோ என பொருத வேலாயுதப் பெருமாளே.... முத்துகளை வாரி எறிவதும் மீன்களை உடையதுமான கடல் ‘கோகோ’ என்று கதறி முறையிட; வேதங்கள் ‘கோகோ’ என்று கதறி முறையிடும்படியாகப் போரிட்ட வேலை ஆயுதமாக உடைய பெருமாளே!

சுருக்க உரை

தொன்மையான கங்கையில் சரவணப் பொய்கையில் ஆறு குமாரர்களாகத் தோன்றி, கார்த்திகைப் பெண்கள் அறுவரிடம் முலைப்பால் பருகியவனே!  ஆறு திருமுகங்களைக் கொண்டவனே! திருவண்ணாமலைப் பரமனே! மயில்வாகனனே! ஞானமூர்த்தியாகிய வேளே! மாலைப் போதிலே கிரெளஞ்ச மலையைத் தூளடித்து உலகெலாம் புழுதி பறக்கவும் அசுரர்கள் ஓடவும் வேலை எறிந்தவனே!  கடலும் வேதங்களும் ‘கோகோ’ என்று கதறி முறையிடும்படியாகப் போர்புரிந்த வேலை ஆயுதமாக ஏந்திய பெருமாளே!

அழுதும்; மனமுருகித் துதித்தும்; நெகிழ்ந்தும்; பக்தி என்னும் கடலிலே மூழ்கித் திளைத்தும்; அமைதியற்றவர்களும் ஆடம்பரமானவர்களுமான சமயவாதிகளால் அறிந்துகொள்ள முடியாத ‘மௌனம்’ என்றும் குறியைத் தேடியும்; சற்றும் தவறாத ஞான மெய்ப்பொருளை அடையாமல்; வினைக்கு ஏற்றாற்போல பலவகையான பிறவிகளைத் தாங்கி; நீர்க்குமிழியைப் போன்ற இந்தப் பிறவிக் கடல் என்னும் சுழியிலே நான் விழுவதுதான் முறையோ?  நீதான் விடைகூற வேண்டும். (அடியேன் பிறவிக் கடலில் வீழாமல் காத்தருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com