பகுதி - 793

அரி அயன் புட்பிக்க குழுமி கொண்டு அமரர்
பகுதி - 793

பதச் சேதம்

சொற் பொருள்

அரி அயன் புட்பிக்க குழுமி கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று அவுணர் அங்கத்தை குத்தி முறித்து அங்கு ஒரு கோடி

 

அரி: திருமால்; அயன்: பிரமன்; புட்பிக்க: திருவாய் மலர (குறைகளைச் சொல்ல); தட்டுருவச் சென்று: ஊடுருவிச் சென்று;

அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று அந்தரியுடன் பற்றி குச்சரி மெச்சும்படி பாடி

 

தித்தியறுத்து: தாளச்சதி அறுத்து--Twosyllables sung to a tune, signifying time-measure; இயம்: வாத்தியக் கருவி; சக்கடி: நிந்தித்தல், பரிகசித்தல்; குச்சரி: குர்ஜரி ராகம் (குஜராத் என்பதை ஒட்டிப் பிறந்த பெயர்);

பரி முகம் கக்க செக்கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டுத் திக்கை உடைத்தும் படு களம் புக்கு தொக்கு நடிக்கும்படி மோதி

 

பரிமுகம்: குதிரை முகம்—வடவ முகாக்கினி; பவுரி: வட்டமாகச் சுழன்றாடும் கூத்து (மயில் விருத்தத்தில் மூன்றாம் பாடலில் ‘விழிபவுரி கவுரிகண்டு உளமகிழ’ என்று வருவதைப் பார்க்கவும்.)

படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின் பரவியும் சித்தத்துக்கு வர தொண்டு அடைவேனோ

 

பத்ம நினைத்தும்: தாமரைக் கரங்களை நினைத்தும்; பொற்பன்: அழகன்; பரவியும்: போற்றியும்;

பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சிக்கு ஒத்து எய்த்த நுசுப்பும் ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி

 

தண்: குளிர்ந்த; செச்சை: குங்குமக் குழம்பு; வஞ்சிக்கு: கொடிக்கு; எய்த்த: இளைத்த, மெலிந்த; நுசுப்பு: இடை; ப்ரிதி: ப்ரீதி, விருப்பம்; ஒக்க ஒழிந்து: முற்றிலும் நீக்கி; கைக்கிளை: தமிழிசையில் காந்தாரம்; துத்தம்: தமிழிசையில் ரிஷபம்; குரல்: தமிழிசையில் ஷட்ஜம்; ஆதி: முதலான;

பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும் பிரதி அண்டத்தை பெற்று அருள் சிற்று உந்தியும் நீல

 

பிரிவில் கண்டு இக்கப்பட்ட: இசைப் பிரிவுகளில் பகிர்வு செய்யப்பட்ட; உருட்டும்: புரள்கின்ற குரலிசையும்; கமுகமும்: கமகமும்; சிறு உந்தியும்: சிறிய வயிறும்;

கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம் பொன் பட்டமும் முத்தின் கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் திருவான

 

கரிய கொண்டற்கு: கருமேகத்துக்கு; ஒப்பித்த: நிகரான; கதுப்பு: கூந்தல் (கன்னம் என்பது இன்னொரு பொருள்);

கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே.

 

கவுரி: கௌரி; அம்பை: அம்பிகை;

அரி அயன் புட்பிக்கக் குழுமிக் கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவச் சென்று அவுணர் அங்கத்தைக் குத்தி முறித்து... திருமாலும் பிரமனும் தங்கள் குறைகளைத் திருவாய் மலர்ந்தருள; தேவர்கள் கூட்டமாகக் கூடி வணங்கி நிற்க; (உன்னுடைய வேல்) ஊடுருவிச் சென்றும் அரக்கர்களுடைய அங்கங்களைக் குத்தியும் முறித்தும் (சென்றபோது);

அங்கு ஒரு கோடி அலகை நின்று ஒத்தித் தித்தி அறுத்தும் பல இயம் கொட்டச் சக்கடி கற்று அந்தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்படி பாடி... அங்கே ஒருகோடிப் பேய்கள் நின்றபடி தாளம்போட்டும்; தித்தி என்ற தாள ஜதியைக் கூட்டியும்; பலவிதமான இசைக்கருவிகளை முழக்கியும்; பரிகாசமாகப் பேசியும்; துர்க்கையோடு சேர்ந்துகொண்டு குர்ஜரி என்னும் ராகத்தை மெச்சத் தகுந்த வகையிலே பாட;

பரி முகம் கக்கச் செக்கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டுத் திக்கை உடைத்தும் படு களம் புக்குத் தொக்கு நடிக்கும்படி மோதி...(அப்பேய்கள்) வடவமுகாக்கினியைப் போன்று தீயுமிழும் சிவந்த கண்களால் விழித்தும்; வட்டமாகச் சுழன்றாடியும்; எட்டுத் திக்குகளையும் அதிரச்செய்தும்; போர்க்களத்தில் புகுந்த ஒன்றுகூடி நடனமாடும்படியாக (அரக்கர்களைத்) தாக்கி;

படை பொரும் சத்திப் பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் எனப் பின் பரவியும் சித்தத்துக்கு வரத் தொண்டு அடைவேனோ...எல்லாவிதமான படைகளோடும் போரிட்டு வெல்லவல்ல சக்திவேலை ஏந்துகின்ற தாமரைக் கரங்களை தியானித்தும்; அதன் பின்னர் ‘சரவணன், காஞ்சியில் வீற்றிருக்கும் அழகன்’ என்றெல்லாம் போற்றியும் என்று இவையெல்லாம் என் மனத்தில் உதிக்க, தொண்டு செய்கின்ற பேற்றை அடைவேனோ? (பேற்றை அடையுமாறு அருளவேண்டும்.)

பெரிய தண் செச்சைக் கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சிக் கொத்து எய்த்த நுசுப்பும் ப்ரிதி ஒழிந்து ஒக்கக்*... பெரியதும் குளிர்ந்த குங்குமக் குழம்பைப் பூசியதும் கச்சு அணிந்ததுமான மலையை ஒத்த தனங்களையும்; சிறிய வஞ்சிக்கொடியை ஒத்து மெலிந்திருக்கும் இடையையும்; (இன்ன இசைதான் என்னும்) விருப்பத்தை அறவே நீத்து;

(* இங்கிருந்து பாடலின் இறுதி வரையில்—இசையைப் பற்றிய குறிப்புகள் உட்பட—அம்பிகையைப் பற்றிய வருணனைகள்.)

கைக்கிளை துத்தம் குரல் ஆதி பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும்... கைக்கிளை (காந்தாரம்) துத்தம் (ரிஷபம்) குரல் (ஷட்ஜமம்) என்று இசைப்பிரிவுகளில் பலவிதமாகப் பிரிக்கப்பட்டதும் புரள்வதுமான குரலிசையையும்; கமகங்களையும்;  

சிற்பச் சித்ரம் உருக்கும் பிரதி அண்டத்தைப் பெற்று அருள் சிற்று உந்தியும்... சிற்ப சாத்திரத்தில் சொல்லப்பட்டதும் அழகியதும் உருக்கமானதுமான நுண்கலைகளையும்; ஒவ்வொரு அண்டத்தையும் ஈன்றெடுத்த சிறிய வயிற்றையும்;

நீலக் கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம் பொன் பட்டமும் முத்தின் கன வடம் கட்டப்பட்ட கழுத்தும்... கருமுகிலை ஒத்த கூந்தலையும்; திலகத்தையும்; செம்பொன்னால் ஆகிய பட்டத்தையும்; பருமனான முத்துமாலையை அணிந்த கழுத்தையும்;

திருவான கருணையும் சுத்தப் பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும் கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே....மிகுந்த கருணையையும்; தூய பச்சை நிறத்து வனப்பையும் கொண்டு தன்னை நினைக்கின்ற அன்பர்களுக்கு சித்தியளிப்பவளும் கௌரியும் அம்பிகையுமான பராசக்தியின் புத்திரனே! எல்லோருக்கும் உரிய பெருமாளே!

சுருக்க உரை

பெரியதும்; குளிர்ந்த குங்குமக் குழம்பு பூசப்பெற்றதும்; கச்சணிந்ததும்; மலையை ஒத்ததுமான மார்பையும்; வஞ்சிக்கொடியைப் போல மெலிந்த இடையையும்; ‘இன்ன இசைதான்’ என்று தனித்த விருப்பம் எல்லாவற்றையும் முற்றவும் ஒழித்து; எல்லா இசைவகைகளையும் ஒன்றுபோல பாவித்து; கைக்கிளை, துத்தம், குரல் என்று பிரிக்கப்பட்ட இசைப்பிரிவுகளில் உருள்வதும்; கமகங்களை உதிர்ப்பதுமான குரலிசையையும்; சிற்ப சாத்திரத்தில் சொல்லப்பட்ட அழகையும் உருக்கி மெலிவடையச் செய்யவல்ல அழகையும்; எல்லா அண்டங்களையும் ஈன்றெடுத்த சிறிய வயிற்றையும்; கரிய மேகத்தை ஒத்த கூந்தலையும்; நெற்றிப் பொட்டையும்; செம்பொன் பட்டத்தையும்; பருமனான முத்து மாலையை அணிந்த கழுத்தையும்; மிகுந்த கருணையையும்; சுத்தமான பச்சைத் திருமேனியையும் கொண்டவளும்; தன்னை தியானிப்பர்களுக்கு முக்தியளிப்பளுமான கௌரியின் புத்திரனே! அனைவருக்கும் பெருமாளாக விளங்குபவனே!

திருமாலும் பிரமனும் வாய்திறந்து குறைகளை எடுத்துச் சொல்ல; கூட்டமாகக் கூடிநிற்கும் தேவர்கள் வணங்கி நிற்க; வேலை வீசி, அசுரர் கூட்டங்களை அது ஊடுருவிச்சென்று; அரக்கர்களுடைய அங்கங்களை அது வெட்டியும் முறித்தும் வீழ்த்துகையிலே,

அங்கே ஒருகோடிப் பேய்கள் நின்றபடி தாளச்சதி அறுத்தும்; பல வாத்தியங்களை முழக்கியும்; பரிகாசமாகப் பேசிக்கொண்டும்; துர்க்கையோடு சேர்ந்து குர்ஜரி என்ற ராகத்தை வியக்கும்படியாகப் பாடிக்கொண்டும்; சிவந்த கண்களால் வடவமுகாக்கினியைப் போன்ற தீயை உமிழ்ந்துகொண்டும்; வட்டமாகச் சுழன்று கூத்தாடியும்; எட்டுத் திசைகளையும் அதிரச் செய்தும்; போர்க்களத்தில் நுழைந்து ஒன்றாகச் சேர்ந்து நடனமாட,

எந்தவகையான படைகளையும் போரிட்டு வெல்லவல்ல வேலை ஏந்தும் சிவந்த திருக்கரத்தைத் தியானித்தும்; ‘சரவணன்’ என்றும் ‘காஞ்சியில் வீற்றிருப்பவன்’ என்றும் பலவிதமாகப் போற்றித் துதிக்கும் செயல் என் மனத்திலே உதிக்கும்படியாகத் தொண்டாற்றும் பேற்றை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com