பகுதி - 833

பணிகள் பணமும்..
பகுதி - 833

பதச் சேதம்

சொற் பொருள்

பணிகள் பணமும்அணி கொள்துகில்கள்  
பழையஅடிமையொடு மாதும்

 

பணிகள்: ஆபரணங்கள்; அணிகொள் துகில்கள்: அணிகின்ற ஆடைகள்; பழைய அடிமையொடு: பலகாலம் பணியாற்றிய வேலைக்காரனோடு; மாதும்: மனைவியும்;

பகரில் ஒருவர் வருகஅரிய  பயணம்அதனில் 
உயிர் போக

 

பகரி: சொல்லப்போனால்; ஒருவர்: இவர்களில் ஒருவரும்; வருக அரிய: கூட வருவதற்கு முடியாத;

குணமும் மனமும்உடைய கிளைஞர் 
குறுகி விறகில் உடல்போடா

 

குறுகி: அருகே அடைந்து; உடல் போடா: உடலைப் போட்டு;

கொடுமை இடு(ம்)முன் அடிமை அடிகள்
குளிர மொழிவது அருள்வாயே

 

கொடுமை இடுமுன்: (தீயில் இடுவதாகிய) கொடிய செயலைச் செய்வதன் முன்னால்; அடிமை: அடிமையாகிய நான்; அடிகள்: உன் திருவடிகளை; குளிர: உள்ளம் குளிரும்படியாக; மொழிவது: துதிப்பதை;

இணை இல் அருணைபழநி கிழவ 
இளையஇறைவ முருகோனே

 

 

எயினர் வயினின்முயலும் மயிலை
இரு கை தொழுதுபுணர் மார்பா

 

எயினர்: வேடர்க(ளுடைய); வயினின்: இடத்தில்; முயலும்: (புனம்) காக்கும்;

அணியொடு அமரர்பணிய அசுரர் அடைய 
மடிய விடும்வேலா

 

அணியொடு: வரிசையாக; அடைய: முழுவதும்;

அறிவும் உரமும்அறமும் நிறமும் அழகும் 
உடையபெருமாளே.

 

நிறம்: ஒளி;

பணிகள் பணமும் அணி கொள் துகில்கள் பழைய அடிமையொடு மாதும்... ஆபரணங்களோ, பணமோ, உடுத்தும் ஆடைகளோ, நெடுநாள் வேலை செய்த வேலைக்காரர்களோ, மனைவியோ,

பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக... சொல்லப்போனால் (இவர்களில்) யாருமே கூட வருவதற்கு முடியாததான (இறுதிப்) பயணத்தில் உயிர் பிரிய,

குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகில் உடல் போடாக் கொடுமை இடுமுன்... நல்ல குணங்களையும் நல்ல மனத்தையும் உடைய உறவினர்கள் ஒன்றாகக்கூடி இந்த உடலை விறகிலே இடுகின்ற கொடுமையைச் செய்வதற்கு முன்னதாக,

அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே... உனது அடிமையாகிய நான் என்னுடைய உள்ளம் குளிரும்படியாக உனது திருவடிகளைத் துதிக்கின்ற தன்மையைத் தந்தருள வேண்டும்.

இணை இல் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே... இணையற்றவையான திருவண்ணாமலை, பழநி ஆகிய தலங்களுக்கு உரியவனே! என்றும் இளையவனே! இறைவனாகிய முருகனே!

எயினர் வயினின் முயலு(ம்மயிலை இரு கை தொழுது புணர் மார்பா... வேடர்களிடத்திலே (தினைப்புனத்தைக்) காக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த வள்ளியை இரு கைகளாலும் தொழுது அணைத்துக்கொண்ட திருமார்பை உடையவனே!

அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா...தேவர்கள் வரிசையாக நின்று பணிய; அரக்கர்கள் எல்லோரும் இறக்கும்படியாக வீசிய வேலை ஏந்தியவனே!

அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே.... அறிவையும் வலிமையையும் அறநெறியையும் ஒளியையும் அழகையும் உடைய பெருமாளே!

சுருக்க உரை

தன்னிகரில்லாத திருவண்ணா மலைக்கும் பழநிக்கும் உரியவனே! என்றும் இளையவனே! இறையவனே! முருகனே! வேடர்களுடைய தினைபுனத்தைக் காத்துக்கொண்டிருந்த மயிலைப் போன்றவரான வள்ளியை இருகரத்தாலும் வணங்கி, தழுவிக்கொண்ட மார்பை உடையவனே! தேவர்கள் வரிசையாக நின்று பணிபவனே!  எல்லா அசுரர்களும் அழியும்படியாக வீசிய வேலை ஏந்தியவனே!  அறிவையும் வலிமையையும் அறநெறியையும் ஒளியையும் அழகையும் உடைய பெருமாளே!

அணிந்திருக்கின்ற ஆபரணங்களோ; சேர்த்து வைத்திருக்கின்ற பணமோ; உடுத்தியிருக்கின்ற நல்ல ஆடைகளோ; பலகாலமாகப் பணியாற்றும் வேலைக்காரர்களோ; மனைவியோ யாருமே கூடவர முடியாத பயணத்தில் உயிர் பிரிந்ததும் நல்ல குணங்களையும் நல்ல மனத்தையும் உடைய உறவினர்கள் ஒன்றுகூடி இந்த உடலை விறகிலே கொண்டுபோட்டு எரிக்கின்ற கொடுமை நேர்கின்ற தருணம் வருவதற்கு முன்னாலேயே உனது திருவடிவகளைப் பணிந்து போற்றும் நல்ல தன்மையை உனது அடியவனாகிய எனக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com