பகுதி - 929

நினைத்தது எத்தனையில்..
பகுதி - 929

 

பதச் சேதம்

சொற் பொருள்

நினைத்தது எத்தனையில் தவறாமல்

எத்தனையில்: எல்லா வகையிலும்;

நிலைத்த புத்தி தனை பிரியாமல் 

 

 

கனத்த தத்துவம் உற்று அழியாமல்

கனத்த: பெருமை வாய்ந்த;

கதித்த நித்திய சித்த(ம்) அருள்வாயே

 

சித்தருள்வாயே: சித்தத்தை அருள்வாயே;

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே

 

மதித்த முத்தமிழில் பெரியோனே

 

 

செனித்த புத்திரரில் சிறியோனே

செனித்த: உதித்த; (சிவகுமாரர்கள், விநாயகன், வீரபத்திரன், பைரவன், முருகன் என நால்வர். இவர்களில் இளையவன் முருகன் என்பது கருத்து.)

திருத்தணி பதியில் பெருமாளே.

 

 

நினைத்தது எத்தனையில் தவறாமல்... நினைத்தது சற்றும் மாறாமல் அப்படியே கைகூடும்படியாகவும்;

நிலைத்த புத்திதனைப் பிரியாமல்... நிலையான புத்தி என்னைப் பிரியாமல் இருக்கும்படியாகவும்; (என் புத்தி எப்போதும் ஒருவழியில் நிலைத்திருக்கவும்;)

கனத்த தத்துவம் உற்றழியாமல்... பெருமை வாய்ந்தனவாகிய (முப்பத்தாறு) தத்துவங்களைக் கடந்த நிலையை அடியேன் அடைந்து அதனாலே அழியாமல் இருக்கும்படியாகவும்;

கதித்த நித்தியசித்தருள்வாயே...வெளிப்படுவதும் நிரந்தரமானதுமான அறிவை அளித்தருள வேண்டும்.

மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே... மனிதர்களுக்குள்ளே பக்தி நிறைந்தவர்களுக்கு எளியவனே!

மதித்த முத்தமிழில் பெரியோனே... மதிக்கப்படுகின்ற முத்தமிழில் சிறந்தவனே!

செனித்த புத்திரரிற் சிறியோனே... சிவனாரிடத்தில் தோன்றிய நான்கு குமாரர்களில் இளையவனே!

(சிவகுமாரர்கள், விநாயகன், வீரபத்திரன், பைரவன், முருகன் என நால்வர்.)

திருத்தணிப்பதியிற் பெருமாளே.... திருத்தணிப் பதியிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

மனிதர்களுக்குள் பக்தர்களுக்கு எளிவயனே!  மதிக்கப்படும் முத்தமிழில் சிறந்தவனே!  சிவகுமாரர்களுள் இளையவனே!  திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

நினைத்தது எல்லாம் நினைத்தபடி கைகூடுவதற்காகவும்; நிலையான புத்தி என்னைவிட்டு அகலாகமல் இருப்பதற்காகவும்; அடியேன் உண்மைப் பொருளை உணர்ந்து அதன் பயனாக முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையை அடைந்து நிலையான அறிவைப் பெறும் நிலையை அடைவதற்காகவும் சாசுவதமான அறிவை அளித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com