பகுதி - 907

கரி குழல் விரித்தும் புறகயல்..
பகுதி - 907

பதச் சேதம்

சொற் பொருள்

கரி குழல் விரித்தும் புறகயல் 
விழித்தும் கரிகுவடு இணைக்கும் 
தனபார

 

கயல்: கயலைப் போன்ற கண்; கரி: யானை; குவடு: மலை; இணைக்கும்: இணையான, இரண்டான;

கரத்து இடு வளைசங்கிலி 
சரம் ஒலித்தும் கலை துகில்மினுக்(கி)யும்
பணிவோரை

 

மினுக்யும்: மினுக்கியும்—பளபளப்பாக உடுத்தும்; பணிவோரை: தன்னைப் பணிகின்றவர்களை;

தரித்து உளம் அழிக்கும்கவட்டர்கள் 
இணக்கம் தவிர்த்து உனது 
சித்தம்களி கூர

 

தரித்து: ஏற்று; கவட்டர்கள்: வஞ்சகர்கள்;

தவ கடல் குளித்துஇங்கு உனக்கு 
அடிமைஉற்று
உன் தலத்தினில்இருக்கும்படி பாராய்

 

 

புரத்தையும் எரித்து அம்கயத்தையும் 
உரித்துஒண் பொடி பணி என்அப்பன் குருநாதா

 

புரத்தையும்: திரிபுரத்தையும்; கயத்தையும்: கஜத்தையும்—யானையையும்; ஒண்பொடி: ஒளிமிகுந்த திருநீறு; பணி: பாம்பு; என் அப்பன்: சிவபெருமான்;

புய பணி கடப்பம்தொடை சிகரம் 
உற்றுஇன் புகழ்ச்சி அமுததிண் புலவோனே

 

புய: தோளில்; பணி: ஆபரணமாக; கடப்பம் தொடை: கடப்ப மாலை (தொடை: மாலை);

 

திரள் பரி கரிக்கும்பொடிப்பட
அவுணர்க்கும் தெறிப்புஉற விடுக்கும் 
கதிர்வேலா

 

பரி: குதிரை; கரி: யானை; அவுணர்: அரக்கர்; தெறிப்புற: சிதறும்படியாக;

சிறப்பொடு குற பெண்களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும்பெருமாளே.

 

 

கரிக் குழல் விரித்தும் புறக் கயல் விழித்தும் கரிக் குவடு இணைக்கும் தன பாரக்...கரியதான கூந்தரை விரித்தும்; வெளியே தென்படுகின்றதும் கயல்மீனை ஒத்ததுமான கண்களை விழித்தும்; யானையையும் மலையையும் ஒத் மார்பகங்கங்களைக் கொண்டவர்களாக,

கரத்து இடு வளைச் சங்கிலிச் சரம் ஒலித்தும் கலைத் துகில் மினுக்(கி)யும் பணிவாரைத்... கைகளில் அணிந்துள்ள வளையல்களையும் சங்கிலி மாலைகளையும் ஒலிக்கச் செய்தும்; ஒட்டியாணம் அணிந்துள்ள சேலையைப் பளபளக்கச் செய்து உடுத்தியும்; தங்களைப் பணிகின்ற ஆடவர்களை,

தரித்து உளம் அழிக்கும்  கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களி கூரத்... ஏற்று அவர்களுது மனங்களை அழிக்கின்ற வஞ்சகர்களான பெண்களுடைய தொடர்பை நீங்ககி, உனது மனம் மகிழும்படியாக (நான்),

தவக் கடல் குளித்து இங்கு உனக்கு அடிமை உற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய்... தவமாகிய கடலிலே குளித்து, உனக்கே அடிமையாகி உன்னுடைய தலமான திருத்தணியில் இருக்கும் பேற்றைப் பெறும்படியாக கடைக்கண் பாலித்தருள வேண்டும்.

புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடிப் பணி என் அப்பன் குருநாதா... முப்புரங்களையும் எரித்து; யானையின் தோலை உரித்து அணிந்து; திருநீற்றையும் பாம்பையும் அணிந்திருக்கும் என் அப்பனான சிவபெருமானுடைய குருநாதனே!

புயப் பணி கடப்பம் தொடைச் சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுதத்திண் புலவோனே... தோளில் கடப்ப மாலையை ஆபரணமாக அணிந்து, மேலான தன்மையை உற்று இனிய புகழாகிய அமுதத்தைக் கொண்ட திண்மையான புலவனே!

திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்பு உற விடுக்கும் கதிர் வேலா... திரளான குதிரைகளும் யானைகளும் பொடிபடும்படியாகவும் அரக்கர்கள் சிதறும்படியாகவும் வேலை வீசிய கதிர்வேலனே!

சிறப்பொடு குறப் பெண் களிக்கும் விசயத் தென் திருத்தணி இருக்கும் பெருமாளே.... சிறப்போடு குறப்பெண்ணான வள்ளி மனம் மகிழ்கின்றதும்; வெற்றியும் அழகும் நிறைந்ததுமான திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

திரிபுரத்தை எரித்து, யானையின் தோலை உரித்து, திருநீற்றையும் பாம்பையும் ஆபரணமாக அணிந்திருக்கும் அப்பனான சிவபெருமானுடைய குருநாதனே!  தோளில் கடப்ப மாலையை அணிந்து மேலான தன்மையை உற்று; புகழாகிய இனிய அமுதத்தைக் கொண்ட திண்மையான புலவனே! குதிரைப் படைகளும் யானைப் படைகளும் அரக்கர்களும் தெறித்து ஓடும்படியாக வேலை வீசியவனே! வள்ளியம்மை மகிழ்பவனே! வெற்றியும் அழகும் நிறைந்த திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

கரிய கூந்தலை விரித்தும் கயல்போன்ற கண்களை விழித்தும்; ஒலிக்கின்ற வளையல்களாலும் பொன் சங்கியிலகளாலும் ஆடவர்களை மயக்குபவர்களான பொதுப்பெண்களுடைய நட்பைத் தவித்ர்து; உனது மனம் மகிழும்படியாகத் தவமாகிய கடலில் குளித்து; உன் தலமான திருத்தணியில் தங்கியிருக்கும் பேற்றை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com