"பள்ளிகளில் "ஆல் பாஸ்' முறை நீக்கப்பட்டு, ஐந்தாம் வகுப்பு முதல் கட்டாயத் தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு  வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஆல் பாஸ் என்பது மிகப்பெரிய தவறு. நன்கு எழுதப்படிக்கத் தெரியாத மாணவன்கூட ஐந்தாம் வகுப்புவரை செல்ல முடியுமென்றால்

தவறுகள்
ஆல் பாஸ் என்பது மிகப்பெரிய தவறு. நன்கு எழுதப்படிக்கத் தெரியாத மாணவன்கூட ஐந்தாம் வகுப்புவரை செல்ல முடியுமென்றால், அந்த மாணவன் ஆறாம் வகுப்புக்கு சென்று என்ன செய்யப் போகிறான்? அதுமட்டுமல்ல "ஆல் பாஸ்' என்ற நிலைமையில், முதல் ஐந்து வகுப்புகளில் பெரும்பாலும் பள்ளிக்கே வராதவனைக்கூட பள்ளிக்கு வந்ததாகக் காட்டி அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிடுவது போன்ற தவறுகள் அதிகமாகும். கல்வி என்பது அதனைக் கற்கும் மாணவனின் வாழ்க்கைக்கு உதவ வேண்டும். படிக்காமல் பாஸ் ஆவது வாழ்க்கையை வளமாக்குமா?
க. கிருஷ்ணன், திருச்சி.

தெரியாது
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் தேர்வெழுதாத மாணவர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்து ஆறாம் வகுப்பிற்கு அனுப்ப முடியும்? ஐந்து வகுப்பு வரையிலும் அவர்கள் என்ன கற்றார்கள். எந்த விதமாக அறிவை பெற்றார்கள் என்பது கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கும் தெரியாது, கற்க வைக்கும் பெற்றோருக்கும் தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதி அதில் பாஸ் ஆனபின் மேல் வகுப்புக்குச் செல்வதே மாணவர்களுக்கு நல்லது. எனவே ஆல் பாஸ் முறை நீக்கப்பட வேண்டும்.
ஜெ. சோபியா ஆல்ட்ரின், சிதம்பரம்.

ஏற்புடையதல்ல
"ஆல் பாஸ்' முறை நீக்கப்படுவது சரியல்ல. இந்த காலத்திலும்கூட, பள்ளிக்கூடத்திற்குப் போய் படிப்புது வீண் வேலை என்று நினைக்கும் கிராமத்து மக்கள் அதிகம் உள்ள நாடு நமது நாடு. எனவே, இக்கருத்து நமது நாட்டிற்கு இது ஏற்புடையதல்ல. தேர்வு முறை வைத்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஐந்தாம் வகுப்போடு நிறுத்தி விடுவார்கள். இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இப்போதைய கல்விமுறையில் பத்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்னும் முறையே பொருத்தமானது.
கி. சந்தானம், மதுரை.

அஸ்திவாரம்
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சியில்தான் அடங்கியுள்ளது. உறுதியான கட்டடம் கட்ட பலமான அஸ்திவாரம் தேவை. அதுபோலவே உயர் கல்வி சிறப்பாகவும், தரமானதாகவும் அமைய வேண்டுமானால் ஆரம்பக் கல்வி தரமானதாக இருக்க வேண்டும். அத்தகைய ஆரம்பக் கல்வியை தரமுள்ளதாக அமைக்க ஐந்தாம் வகுப்பு முதல் தேர்வு நடத்தி மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதே சரியானதாகும்.
ஆர். அகல்யா, திருச்சி.

முறைப்படுத்த வேண்டும்
ஐந்தாம் வகுப்பு முதல் கட்டாயத் தேர்வு என முடிவு எடுத்திருப்பது சரியே. தேர்வே இல்லாமல் அனைவரும் தேர்ச்சி என்று இருப்பது, கல்வி கற்பிக்காமல் ஆசிரியர் இருப்பதற்கும், கற்பித்த கல்வியை மாணவர்கள் படிக்காமல் இருப்பதற்கும் வழி செய்கிறது. தேர்வு என்ற கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால் ஆசிரியர்களும், மாணவர் விருப்பத்திற்கு ஏற்ப விட்டுவிடுகின்றனர். இந்நிலை பெரும்பாலும் அரசு பள்ளிகளில் நிலவுகிறது. பள்ளிக்குச் செல்லும் ஆய்வாளர்களும் பள்ளியின் தரத்தைக் கூர்ந்து நோக்கி முறைப்படுத்த வேண்டும். தேர்வு என்பதைக் கட்டாயமாக்கி இருப்பது மிகவும் சரியேயாகும்.
அரு. சுந்தரேசன், வேலூர்.

தடுமாற்றம்
அனைவரும் தேர்ச்சி செய்யப்படும் ஆல் பாஸ் முறையை ரத்து செய்வது சரியான முடிவாகும். கட்டாயத் தேர்ச்சி முறையால் மாணவர்கள் கல்வி கற்கும் ஆர்வம் குறைந்து போகிறது. இதனால் கல்வியில் அடிப்படை விஷயங்களைக்கூட அறியாமல் இருந்துவிட்டு மேல்நிலைப் படிப்புக்கு வரும்போது தடுமாற்றம் அடைகின்றனர். ஆல் பாஸ் முறையை ரத்து செய்வதால், அவர்கள் தங்களது முயற்சியிலேயே பயின்று தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் அவர்களது தேடல் பெருகி அறிவு விசாலமாகும்.
பா. அருள்ஜோதி, மன்னார்குடி.

விளையாட்டு
ஐந்தாம் வகுப்பு என்பது மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள பருவம். தற்பொழுது ஐந்தாம் வகுப்பு வரை விளையாட்டின் மூலமான கல்வியே சிறந்தது என ஏற்கப்பட்டு அதே முறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டும் வருகிறது. குழந்தைப் பருவம் மாறாத ஐந்தாம் வகுப்பில் கட்டாயத் தேர்வு நடத்துவதற்குப் பதில் குழந்தைகள் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து படிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கும் எட்டாம் வகுப்பிலிருந்து கட்டாயத் தேர்வு நடத்துவதுதான் சரியாக இருக்கும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

அலட்சியம்
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்பது மாணவர்களிடம் பொறுப்பின்மையையும், படிப்பில் அலட்சியத்தையும்தான் உண்டாக்கும். ஆசிரியர்களிடமும் ஒருவித அலட்சியத்தைக் கொடுக்கும். ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்களின் தகுதியை அறிந்து கொள்வதற்கு தேர்வு முறை அவசியமாகும். தேர்வில் தோல்வியடைவது என்பது மாணவர்களை நெறிப்படுத்துவதற்கான ஒரு முயற்சிதான். ஐந்தாம் வகுப்பு முதல் கட்டாயத் தேர்வு என்பது மகிழ்வுடன் ஏற்கவேண்டிய சரியான முடிவாகும்.
மல்லிகா அன்பழகன், சென்னை.

பயிற்சி
மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முதல் தேர்வு எழுத வேண்டும் என்பது சரியான முறையே. குழந்தைப் பருவம் என்பது பத்து வயது வரைதான். அதற்குப் பிறகு அவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற்றால்தான் பெரிய வகுப்புகளில் தேர்வு எழுதும்போது, தேர்வு பயம் இல்லாமல் இருக்கும். பாடங்களைப் புரிந்து கொண்டு படிக்கக்கூடிய திறமையும் அதிகரிக்கும். இவை மட்டுமல்ல, நிறைய மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளும் உருவாவார்கள்.
எஸ்.எஸ்.ஏ. காதர்,
காயப்பட்டினம்.

உந்துதல்
இந்த கருத்து நியாயமானதே. இக்கால குழந்தைகளுக்கு தோல்விகளை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். சிறு வயதில் "ஆல் பாஸ்' என்ற எளிதான முறையைக் கற்றுக்கொடுத்துவிட்டு, மேல் வகுப்பில் தேர்வுகள் நடத்தும்போதும் மாணவர்கள் பலவித மனப் பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். சிலர் தோல்வியால் தற்கொலை வரை கூட செல்கிறார்கள். குழந்தைகள் படிப்பதற்கான ஒரு சரியான உந்துதல் தேர்வு முறையே. "ஆல் பாஸ்' என்ற முறையை நீக்க முடிவெடுத்திருப்பது சரியே.
மீனாள் நாகராஜன், மதுரை.

என்ன பயன்?
பத்து வயதிலேயே பிஞ்சு உள்ளங்களில் தேர்வு பற்றிய ஒரு பயத்தை விதைத்து, பிள்ளைகளை அதே வகுப்புகளில் இருக்க வைப்பது பெரிய வன்முறையாகும். இதனால் பாதியிலேயோ படிப்பை நிறுத்திவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பத்து வயதுள்ள குழந்தைகளின் மனதில் பாடங்களைப் பதிய வைத்து, மீண்டும் எழுதும் தேர்வு முறையால் என்ன பயன் ஏற்படப்போகிறது?
ஆறு. கணேசன், திருச்செந்தூர்.

அவசியம்
ஆல் பாஸ் முறை தேவையில்லை. ஐந்தாம் வகுப்பு முதல் கட்டாயத் தேர்வு அவசியம். தேர்வில் தோல்வியடைந்தவர்கள் என்று மாணவர்களைக் குறிப்பிடாமல் அவர்களுக்கு சிறப்பு வகுப்பு, பயிற்சி அளித்து மீண்டும் தேர்வு எழுத வைக்க வேண்டும். தேர்வு இல்லை என்றால் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் கல்வியில் அக்கறை இல்லாமல் போய்விடும்.
கீர்த்தி மோகன், தஞ்சாவூர்.

அவமானம்
எழுத்துகளை எழுதுவதற்கான பலத்தை மாணவர்களின் விரல்கள் பெற்று, பயிற்சி அடைவதற்கு போதுமான கால அவகாசத்தை அவர்களுக்கு அளிக்கத்தானே வேண்டும். எட்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவனை தேர்வைக்காட்டி பயமுறுத்தி அவனைத் தோல்வியடைய வைத்தால் அவனுக்கு தேவையற்ற மன அழுத்தமும், அவமானமும் ஏற்படும். எனவே "ஆல் பாஸ்' முறையை நீக்குவது முறையற்றது. அது தொடர வேண்டும்.
மதியரசன், கிருஷ்ணாபுரம்.

தலைமுறை
"ஆல் பாஸ்' முறை நீக்கப்பட்டால் ஏழ்மை நிலையிலுள்ள குழந்தைகளின் பெற்றோர் தனது குழந்தைகளுக்கு படிப்பு வராது என குழந்தைத் தொழிலாளியாக மாற்றிவிடுவார்கள். எனவே, "ஆல் பாஸ்' முறை இருந்தால்தான் குறைந்தபட்ச கல்வியையாவது குழந்தைகள் பெறுவர். வரும் தலைமுறையினர் கல்வியறிவு பெற்ற தலைமுறையினராக இருக்க வேண்டுமெனில் "ஆல் பாஸ்' முறை நீடிக்க வேண்டியது அவசியமாகும்.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com