கடந்த வாரம் கேட்கப்பட்ட "கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் வங்கித் தேர்வை எழுத அனுமதியில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வங்கிப் பணியில் சேர வேண்டும் என்றால் கடுமையான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே முடியும்.

வாசகர் அரங்கம்
முடிச்சுப்போடுவது சரியில்லை!
 கல்விக் கடனுக்கும், வங்கித் தேர்வுக்கும் முடிச்சுப்போடுவது சரியில்லை. ஒருவருக்கு வேலைவாய்ப்புத் தராமல் கடனைச் செலுத்து என்பதும், வேலைவாய்ப்புக்காக எழுதும் தேர்வுக்கு அனுமதி இல்லை என்பதும் எவ்விதத்திலும் நியாயமில்லை. அரசியல் கட்சிகளோ சுயலாபத்துக்காக கல்விக் கடனை தள்ளுபடி செய்வோம் என "வேடிக்கை' அரசியல் செய்து தேர்தலில் வாக்குறுதி அளிக்கின்றன.
 ரெ. காமராஜ், கள்ளப்பெரம்பூர்.

வாய்ப்புக்கு வழி
 நம் நாடு ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் உரிமைகளும், கடமைகளும் உணரப்பட வேண்டும்; காப்பாற்றப்பட வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் முக்கியப்பணி. ஆகையால், வாய்ப்புகள் தந்து வழிகாட்ட வேண்டும். வாய்ப்பு, வசதிகள் கொடுத்தும் பெறப்பட்டும் கல்விக் கடன் செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி கண்டிப்பும், தண்டிப்பும் வழங்க வேண்டும்.
 அர. தாரணிரங்கநாதன்,
 வெள்ளலூர்.

எவ்வாறு இயலும்?
 கல்விக் கடனைப் பெற விழையும் மாணவர், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளோரே. கடன் பெற்று படிப்பை முடித்துப் பின் பணி ஏற்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர். பணிகிடைத்த பின், தானே தாம் பெறும் மாத ஊதியத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த அவர்களால் இயலும்? வேலை தரும் முன்னரே கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த அவர்களால் எவ்வாறு இயலும்?
 சி. ஆனந்தவல்லி, கோயம்புத்தூர்.

களங்கம் கற்பிப்பது
 வங்கிப் பணியில் சேர உள்ளோர், தாம் திருப்பியளிப்பதாக உறுதியளித்த கடனை திருப்பி செலுத்தாது இருப்பது அவர்கள் சேர உள்ள பணிக்கே களங்கம் கற்பிப்பது போன்றதாகும். ஏனெனில், தாம் பெற்ற கல்விக் கடனையே திரும்பிச் செலுத்தாத ஒரு வங்கி ஊழியர், எப்படி தான் அளிக்கும் வங்கிக் கடனை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிப்பார் என எதிர்பார்க்க இயலும்?
 வே. சின்னத்தம்பி, கோயமுத்தூர்.

சமூகத்துக்கு நல்லதல்ல..
 நமக்குத் தேவையாக இருக்கும்போது கல்விக் கடன் பெற எவ்வளவு முயற்சி எடுக்கிறோம்? அதேபோல, படித்து முடித்த பின் கடனைத் திருப்பிச் செலுத்த முயல வேண்டும். அவ்விதம் முயலாதவர்களை வங்கித் தேர்வு எழுதக் கூடாது என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அரசியல்வாதிகள் கூறுவதுபோல், கடனையெல்லாம் தள்ளுபடி செய்தால் வங்கிகள் திவாலாகிவிடும். கடனைத் திரும்பச் செலுத்தாத மனநிலை வளர்வது சமூகத்துக்கு நல்லதல்ல.
 மா. தங்கமாரியப்பன்,
 கோவில்பட்டி.

அதிக சுமை
 கடன் என்று ஆன பிறகு, அதை திரும்பத் தருவதுதான் சிறந்தது. இப்படியே ஒவ்வொருவரின் கடனும் சேர்ந்தால் வங்கிகளுக்கு அதிக சுமையே கூடும். நம் நாடு கல்வியறிவு பெற்ற நாடு. பாரத வங்கியும், ஏழைகள் நலனைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுத்து கடன் செலுத்த அவகாசம் தந்து தேர்வு எழுத அனுமதிப்பதுதான் நல்லது.
 சிவ. ராம்கோபால், மதுரை.

பரிதாபப் பிறவிகளா?
 இந்த வங்கிகள் வாங்கிய கடனையும், அதற்கு உண்டான வட்டியையும் செலுத்தாத முதலாளிகளுக்கு வாசலைத் திறந்துவிட்டு, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையின் வழிகளை அடைக்குதே. படித்த இளைஞர்கள் என்ன பரிதாபப் பிறவிகளா?
 ஆ. தங்கசாமி, சேரமங்கலம்.

பலவீனமாகும்..
 வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்திவிட்டு, பிறகு வங்கித் தேர்வை எழுத அனுமதிக்கலாம். கடன், கடன் என்று எல்லாத் துறைகளிலும் கடனளித்துவிட்டு வங்கிகளின் சுமையை அதிகரித்தால், வங்கிகள் பலவீனமாகும். ஆட்சியாளர்களால் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், அது வரியாக நம் தலையில் தான் விழும். கடன் பெறுபவர்களின் தகுதி பார்த்து, எழுதி வாங்கிய பிறகு, தேர்வு எழுத அனுமதியளிக்க வேண்டும்.
 எஸ். சம்பூரணி, மதுரை.

உறுதிமொழி!
 பாரத ஸ்டேட் வங்கி கூறுவது சரியில்லை. ஏன் என்றால், வசதியற்றவர்கள்தான் வங்கியில் கடன் பெற்றிருப்பார்கள். அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேரும்போது குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை அடைத்துவிட வேண்டும் என உறுதி மொழி பெற்றுக்கொண்டு பணி ஆணை வழங்கலாம். அதுதான் சிறந்த வழியாக இருக்கும்.
 பா. நாகசுப்பிரமணியன், ஸ்ரீரங்கம்.

அநீதி!
 அரசுப் பணியைத் தேடும் முதல் தலைமுறை இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது. இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து, பின்னர் தங்கள் கடனை வசூலிக்கலாம். அரசும் ஆட்சியாளர்களும் இந்த நடவடிக்கைகளை காலம் கடந்து நடைமுறைப்படுத்துவதாகவே தோன்றுகிறது. வங்கியாளர்கள் இந்த அக்கறையை பல்லாயிரக்கணக்கான கோடி வாராக்கடனை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளட்டும்.
 சாமி, நாகதாசம்பட்டி.

போகாத ஊருக்கு வழி
 கடன் பெறுவது கல்வி கற்பதற்கு. பின் பணியினைப் பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்கவும் தேர்வு எழுதவும் வேண்டும். பணியில் அமர்ந்த பிறகு கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துங்கள் என்று கூறுவதில் பொருளுண்டு. பணியினைத் தேடும் முயற்சியில் தேர்வு எழுத முற்படும்போதே கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு எழுதுங்கள் என்று தடை போடுவது, போகாத ஊருக்கு வழி காட்டுவது போலாகும்.
 ஜி. கிருஷ்ணமூர்த்தி, தஞ்சாவூர்.

வேதனை!
 வங்கித் தேர்வு எழுத அனுமதி மறுப்பது மிகவும் தவறான செயல். அவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மாதந்தோறும் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். கடன் வாங்கிப் படித்தவர்கள், வேலைக்குப் போனால் தான் கடனைச் செலுத்த முடியும் என்ற சிந்தனையே வங்கி அதிகாரிகளுக்கு இல்லாதது வேதனையே அளிக்கிறது.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

சில தவணைகளில்...
 வேலை இல்லாமல் எப்படி வங்கிக் கடனைச் செலுத்த முடியும்? ஆதலால், தேர்வு எழுத அனுமதி அளித்துவிட்டு, வேலைக்கு வந்தபின் மாத ஊதியத்திலிருந்து கல்விக் கடனை சில தவணைகளில் பிடித்தம் செய்து கொள்ளலாம். அதுவே சிறந்த வழி.
 அரு. சிதம்பரம், திருச்சிற்றம்பலம்.

கருணை - கெடுபிடி..
 வங்கிப் பணி தவிர்த்துப் பிற பணிகளுக்கான தேர்வை எழுதக் கூடாது என்று வங்கிகளால் நிபந்தனை விதிக்க முடியுமா? மேற்படிப்பு படிக்க வசதியின்றிதான் வங்கிகளில் கல்விக் கடனைப் பெறுகின்றனர். ஒரு பக்கம் கடனைக் கொடுத்துக் கருணையுடன் நடந்துகொள்ளும் வங்கிகள், மறு பக்கம் கெடுபிடி செய்வது, ஒரு கதவைத் திறந்து, இன்னொரு கதவை மூடுவது போலுள்ளது. இதை வங்கி மறுஆய்வு செய்தல் நலம்.
 புஷ்பா ஆதவன், ஆற்காடு.

மன உளைச்சல்!
 கடன் கொடுத்தவர்களை திருப்பிச் செலுத்தச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இந்த கடன் வழங்கும் திட்டம் தான் சரியில்லை. கல்வி என்பதை இலவசமாகக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், இப்போது உள்ள நடைமுறை, படிக்கும்போதே மாணவர்களைக் கடனாளியாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்தி, அவர்களுடைய ஆசைகளை எல்லாம் நிராசையாக்கும்படியாகவே இருக்கிறது.
 சி.கா. சிதம்பரம், கோவில்பட்டி.

புத்திசாலித்தனம்!
 வங்கிப் பணியில் சேர வேண்டும் என்றால் கடுமையான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே முடியும். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து ஊதியம் பெறும்போது, வங்கிக்குச் சேர வேண்டிய கல்விக் கடன் கண்டிப்பாக சிரமம் இல்லாமல் வசூலாகும். வேலை இல்லையேல் அது வாராக்கடன்தான். வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையைக் கைவிட்டு, வங்கித் தேர்வை எழுத அனுமதிப்பதுதான் புத்திசாலித்தனம்.
 பொ.ஆ. இராமசாமி, திருச்சி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com