கடந்த 2.11.2016 அன்று கேட்கப்பட்ட "மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தெரு நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது அல்ல என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த  கருத்துகளில் சில...

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தெரு நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது அல்ல என்கிற கருத்து சரியே.

அச்சுறுத்தல்
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தெரு நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது அல்ல என்கிற கருத்து சரியே. தெரு நாய்களை உடனே கொன்றுவிட அரசு ஆவன செய்ய வேண்டும். மனித உயிரைவிட தெரு நாய்களின் உயிர் எந்தவிதத்திலும் பெரிதல்ல. தெரு நாய்கள் பலரைக் கடிப்பதுடன், சிறுவர்களுக்கு இது மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வருவது வேதனையே.
கே. தங்கவேலு, உடுமலைப்பேட்டை.

தண்டனை
உயிர் விலை மதிப்பற்றது. ஓர் உயிரை எடுப்பது படைத்தவனான இறைவனுக்குத்தான் அந்த உரிமை உண்டு. ஆறறிவு படைத்த மனிதன் அடுத்த மனிதனின் உயிரைப் பறிக்கும்போது நீதிமன்றம் தண்டனை வழங்குகிறது. ஐந்தறிவு உள்ள நாய்களால் மனித உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயலுக்கு அதனைக் கொல்வதுதான் சரி. இது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது அல்ல.
சு. இலக்குமணசுவாமி, மதுரை.

ரேபிஸ்
"ரேபிஸ்' என்கிற நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய் மனிதர்களை கடிப்பதால் ஏற்படக்கூடிய நோய்க்கு உடனடி சிகிச்சை இல்லையென்பதுடன் மரணம் நிச்சயம். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி அளிப்பதால் நோய் பரவுவதில்லை. ஆனால் தெரு நாய்களுக்கு அவ்வாய்ப்பு இல்லை. எனவே தெரு நாய்களை கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரான செயல் அல்ல.
எம். ஜானகிராமன், போளூர்.

கருத்தடை
உயிர்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானதுதான். தெரு நாய்கள் உருவாகாமல் தடுப்பது, அப்படியே உருவாகி விட்டாலும் அவைகளின் எண்ணிக்கை கூடி விடாமல் இருக்க கருத்தடை செய்வது என அரசு எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, மனிதர்களை அச்சுறுத்துகிறது என்று தெரு நாய்களை அதிக எண்ணிக்கையில் கொல்பவர்களுக்குப் பரிசு கொடுப்பது தவறு.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

சுகாதாரச் சீர்கேடு
அதிபயங்கரமான நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது ஜீவகாருண்யத்திற்கு எதிரானதா? தெருவிலே திரியும் நாய், பன்றிகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அவை மனிதனைத் தாக்கினால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. அப்படியிருக்கையில் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய தெரு நாய்களை அழிப்பது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது அல்ல.
ஞானி, கடையநல்லூர்.

பாதுகாப்பு மையம்
"நாய் வீட்டைக் காக்கும்; நாய் நன்றியுள்ளது' என்றாலும் வெறி பிடித்த நாய்கள் மனித உயிர்களை கடித்துக் குதறுவதைக் காண்கிறோம். ஆதலின், வீட்டில் விரும்பி வளர்க்கும் நாய்களைத் தவிர்த்து தேவையற்ற நாய்களை கொன்று விடுவதே சரியான செயல். அல்லது அரசே பொறுப்பேற்றுக் கொண்டு நாய்களுக்கு பாதுகாப்பு மையம் அமைத்து அதன் மூலம் பராமரிக்கலாம்.
அரு. சுந்தரேசன், வேலூர்.

ஜீவன்
ஜீவன்களிலேயே மிக உயர்ந்தது மனித ஜீவனே. அவற்றிக்கு நல்லது செய்யவே மற்ற ஜீவன்கள் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன. அப்படி உதவிக்காக படைக்கப்பட்ட பிற ஜீவன்களால் மனிதர்களுக்கு உபத்திரவம் ஏற்படும்பொழுது, அப்படி உபத்திரவம் செய்யும் விலங்குகளை மட்டும் அடையாளம் கண்டு கொல்வது எந்த விதத்திலும் தவறாகாது.
க. சுல்தான் ஸலாஹூத்தீன், 
காயல்பட்டினம்.

அறியாமை
மனித உயிருக்கு விலங்குகள் மட்டுமல்ல கொடிய நோய் கொண்ட மனிதர்களும் ஆபத்தானவர்கள்தான். அந்த மனிதர்களை தனிக் கவனம் செலுத்தி தனிமையில் மருத்துவம் செய்யப்படுகிறது. அதற்காக நோய் பாதித்த மனிதர்களையும் கொன்று விடுவதில்லை. மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய ஓரிரு நாய்களுக்காக எல்லாவற்றையும் விரட்டிக் கொல்வது என்பது மக்களின் அறியாமையே.
க.மா. சிட்டிபாபு, சென்னை.

நற்காரியங்கள்
அரிது, அரிது மானிடராய் பிறப்பது அரிது. மானிடரின் உயிர் விலை மதிப்பில்லாதது. அந்த மனிதனால் இந்த நாட்டிற்கும், மக்களுக்கும், மற்றும் வீட்டிற்கும் குடும்பத்தாருக்கும் நற்காரியங்கள் செய்ய வேண்டி உள்ளவராகவும் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய தெரு நாய்களை கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது ஆகாது.
என்.கே. திவாகரன், கோயம்புத்தூர்.

தலையாய படைப்பு
தெருக்களில் கட்டுப்பாடில்லாமல் சுற்றித் திரியும் தெரு நாய்களில் சில வெறி நாய்களும் இருக்கின்றன. அம்மாதிரியான வெறி நாய்களால் மனித சமூகத்துக்கு அவ்வப்போது  பேராபத்து நேரிடுகிறது. மனிதர்களை அச்சுறுத்தும் வெறி நாய்களை கொல்வது எந்தவகையிலும் ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக இருக்காது. கடவுள் படைப்புகளிலே தலையாய படைப்பு மனித உயிரினம்தான்.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

தனி முகாம்
நகரம், பேரூராட்சிகளில்தான் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளன. இரவு பத்து மணிக்கு மேல் தெருக்களில் சாமானியர்களால் நடமாட முடிவதில்லை. தெரு நாய்களை காப்பவர்கள் தனியாக முகாம் அமைத்துக் காத்துக் கொள்ளட்டும். இரவில் தெருவில் நடந்து சென்றால்தான் உண்மை நிலை தெரிய வரும். தெரு நாய்களின் உயிரைவிட மனிதர்களின் உயிரே மேன்மையானது.
பெ. இராமலிங்கம், ஈரோடு.

நல்லதல்ல
எல்லா நாய்களும் கடிப்பதில்லை. கடிக்கின்ற நாய்களும் எல்லோரையும் கடிப்பதில்லை. எப்போதாவது, அத்தி பூத்தாற்போல் வெகு அபூர்வமாக நடக்கின்றது என்பதற்காக நாயை ஒழிக்க வேண்டும் என்பது நல்லதில்லை. நாய்களுக்கு என்று சில குணங்கள் உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நடந்து கொள்வதை விட்டுவிட்டு நாய்களைக் கொல்வது தவறு.
மு. சிதம்பர வில்வநாதன், சென்னை.

துன்பத்தின் வெளிப்பாடு
ஜீவகாருண்யம் பேசுவோர் தெரு நாய்கள் திரியும் பகுதியில் தினமும் நடந்து செல்ல வேண்டும். அப்படிச் சென்றால், அவர்கள் பேசும் ஜீவகாருண்யத்தைப் பற்றி யோசிக்கலாம். அவர்களை கொசுக்கள் மிகுந்த பகுதியிலும் குடியிருக்கச் செய்யலாம். இது துன்பம் அனுபவிக்கும் மக்களின் வெளிப்பாடு. ஆகவே தெரு நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது அல்ல.
சுமா, திருத்துறைப்பூண்டி.

தேவையற்ற சர்ச்சை
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரு நாய்களைக் கொல்வது குற்றமில்லை என்ற தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. மனிதனுக்காகவே மற்ற ஜீவன்களைப் படைத்ததாக இறைவன் கூறும்போது, ஜீவகாருண்ய சர்ச்சை தேவையற்றது. விலைமதிப்பற்ற மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்க முற்படும்போது தெரு நாய்களைக் கொல்வதில் தவறேதுமில்லை.
மு. அன்வர்தீன், திட்டச்சேரி.

எதிரானது அல்ல
பாலை ஊற்றிப் பாம்பை வளர்த்தாலும், அது நம்மை கடிக்கத்தானே செய்யும். கடித்தால் நாம் அதனை அடிக்கத்தானே செய்வோம். மனிதனுக்குத் தொல்லை தராத பிற உயிரினங்களைக் கொன்றால்தான் ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாகும். ஆனால் மனிதனைக் கடித்துத் துன்புறுத்தும் வெறி பிடித்த தெரு நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது அல்ல.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

பிறப்பொக்கும்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் தெய்வப் புலவர் வள்ளுவர். எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்பதுதான் ஜீவகாருண்யம், நாய் நன்றி உள்ளது என்று விசுவாசத்திற்கு சான்று கூறும் நாம், அவைகளைக் கொல்வது பாவமல்ல என்பது முரண்பாடாக உள்ளது. கொசுக்களால் மனித குலத்திற்கு ஏற்படும் உயிரிழப்பை விடவா தெரு நாய்கள் மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்குகின்றன?
பொன் நடேசன், சின்ன அய்யம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com