பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோரின் விரலில் "அழியாத மை' வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோரின் விரலில் "அழியாத மை' வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தில்லுமுல்லு
இந்த நடவடிக்கை சரியே. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆவணத்தைக் கொடுத்து அரசை ஏமாற்றும் நபர்களை திருத்த வேண்டும் என்ற நோகத்தில்தான் இந்தத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் தில்லுமுல்லு செய்து பணம் பெற நினைப்பவர்கள் ஏமாற்றமடைவார்கள். உண்மையான பயனாளிகள் விரைவில் புதிய நோட்டுகளைப் பெற முடியும்.
என்.எஸ். குழந்தைவேலு, சங்ககிரி.

முற்றுப்புள்ளி
ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற திடீர் அறிவிப்பால் கருப்புப் பண முதலைகள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். பணத்தை மாற்ற அவர்கள் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றைத் தடுக்க இந்த அழியாத மை ஒரு முற்றுப்புள்ளி வைக்கும். நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாம் சிரமத்தை ஏற்போம்.
பா. அருள்ஜோதி, மன்னார்குடி.

தேவையற்றது
பொதுமக்கள் ஒருமுறை மாற்றுவதற்குரிய தொகையும், அதற்குரிய காலமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்போது அவர்களின் விரலில் அழியாத மை வைப்பதென்பது தேவையற்றது. இதனை அரசு திட்டமிட்டுச் செய்திருக்க வேண்டும். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் இப்படிப்பட்ட செயலால் மக்களை அரசு அவமானப்படுத்துகிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

பிநாமிகள்
இந்த நடவடிக்கை சரியே, இதனால் ஏ.டி.எம். மையங்கள் மற்றும் வங்கிகளில் மீண்டும் மீண்டும் ஒரே நபர் பணம் எடுக்க வருவது தடுக்கப்படும். அது மட்டுமல்ல, அனைவருக்கும் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் தங்களின் பிநாமிகள் மூலம் பணத்தை மாற்ற முயற்சி செய்வது இதனால் தடுக்கப்படுகிறது.
பா. சிதம்பரநாதன், கருவேலங்குளம்.

கண்காணிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஆதார், வருமானவரி கணக்கு எண் போன்ற ஏதாவதொரு அடையாள அட்டையைக் கொடுக்க வேண்டியுள்ளது. பிறகு எதற்கு விரலில் அழியாத மை வைக்க வேண்டும்? மிக அதிக அளவில் பணப் பரிமாற்றம் செய்பவர்கள் யார் என்பதை அரசு அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். சாதாரண மக்களை கஷ்டப்படுத்தத் தேவையில்லை.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்.

விவேகமல்ல
இந்த நடவடிக்கை சரியே. கருப்புப் பணம் வைத்திருப்போர் சில கமிஷன் ஏஜண்டுகளை நியமித்து தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தப்பித்துக் கொள்ள முயல்வார்கள். அதனைத் தடுக்க இதுதான் சிறந்த வழி. பிரதமரின் இந்த நல்ல நடவடிக்கையை பொதுமக்களில் சிலர் எதிர்ப்பது விவேகமல்ல.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா,
ராஜபாளையம்.

அவமானம்
இது சரியான நடவடிக்கை அல்ல. வங்கிகளில் தங்கள் சொந்தப் பணத்தை மாற்றுவோரை குற்றவாளிகளைப் போலவும், ஏமாற்றுக்காரர்களைப் போலவும் அரசு கருதுவது நாட்டிற்கே அவமானம். வங்கிகளில் பணம் மாற்றுவோர் நடுத்தர மக்களும், அதற்குக் கீழே உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுமே ஆவர். எனவே அவர்கள் கையில் அழியாத மை வைப்பதை நிறுத்த வேண்டும்.
அரு. சுந்தரேசன், வேலூர்.

அரசியல்தான்
இது சரியான நடவடிக்கையே. இதனை எதிர்க்கக் காரணம் அரசியல்தான். பெரும்பாலான அரசியல்வாதிகள் இன்று பிநாமி முறையைப் பின்பற்றி தங்களது சொத்துகளை பன்மடங்கு பெருக்கியுள்ளனர். அவர்கள் ஏழை, எளிய மக்களைப் பயன்படுத்தி தங்களிடமுள்ள பழைய நோட்டுகளை மீண்டும் மீண்டும் மாற்ற முயற்சிக்கிறார்கள். இதனைத் தடுக்கவே அரசின் இந்த நடவடிக்கை.
இரவி ராமானுஜம், திருக்குறுங்குடி.

அவலம்
குறைந்த அளவு நல்ல நோட்டைப் பெற்று அன்றைய நாளின் வாழ்வை நடத்த நினைக்கும் சாமானியர்கள் பணத்தை அவர்களே பெற வரிசையில் காக்க வைத்து விரலில் கருப்பு மை வைப்பது மக்களின் மீது நம்பிக்கையற்றவர்கள் வைக்கும் கரும்புள்ளியே ஆகும். நம்முடைய பணத்தை நாமே எடுக்க விரலில் கருப்பு மை வைக்க வேண்டிய அவலம் வந்திருக்கிறது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

பாதிப்பு இல்லை
விரலில் மை வைக்கும் முறை நியாயமானதே.மை வைத்தால் யாரும் ஏமாற்ற முடியாது. இந்த அழியாத மை முறை விநோதமாகத் தெரிந்தாலும் உழைத்துச் சேர்த்த நம் பணத்திற்குப் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை. ஒரே நாளில் சில வங்கிகளுக்குச் சென்று ஒருவரே பணத்தை மாற்றுவது தடுக்கப்படும். வங்கிகளில் கூட்டம் குறையும். தகுதியானவர்கள் விரைவில் பலனடைவார்கள்.
சோ. இராமு, திண்டுக்கல்.

மக்கள் தொண்டு
அவசரத் தேவைகளுக்கு வங்கியில் உள்ள தங்கள் பணத்தை எடுப்பதற்கு மக்களுக்கு உரிமையில்லையா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு பாதகம் இல்லாமல் ஒரு முடிவை நன்கு திட்டமிட்டு எடுத்திருக்க வேண்டும். பதவி என்பது மக்கள் தொண்டுக்குத்தான். அதனை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இந்த முடிவு சரியல்ல.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

முறைகேடு
சிலர் முறைகேடான வழியில் சம்பாதித்த பணத்தை, சில அப்பாவி மக்கள் மூலம் மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள். விரலில் மை வைக்கும் இந்த நடவடிக்கை மூலம், பண முதலைகள், கருப்புப் பணம் வைத்திருப்போர் வருமானவரித் துறையினரின் பிடியில் சிக்குவதற்கு வாய்ப்புண்டு. இதனால், அவர்களின் முயற்சி முற்றிலும் தோற்றுவிடும். எனவே, இந்த நடவடிக்கை முற்றிலும் சரியே.
சு. இலக்குமண சுவாமி, திருநகர்.

குழப்பம்
இது சரியல்ல. மை குறியானது பல நாட்கள் வரை நீடிப்பதால் தேர்தல் அதிகாரிகளுக்கும் குழப்பமே. தேர்தல் நடக்கும்போது இடது கை இல்லாதவர்கட்கு வலது கை ஆள்காட்டிலில் மையிட வேண்டும் என தேர்தல் விதி கூறுகின்றது. பணம் மாற்றுவோருக்கு வலது கை விரலில் மை இடப்படுகிறது. இது தேர்தல் நடத்தும் பகுதிகளில் குழப்பத்திற்கு வழிவகுக்கும்.
இரெ. இராமமூர்த்தி, சிதம்பரம்.

முதல் வெற்றி
கருப்புப் பண ஒழிப்பில் முதல் வெற்றி காஷ்மீரில் அமைதி திரும்பியது ஆகும். பல அரசியல்வாதிகளும், கருப்புப் பண முதலைகளும் பல்வேறு விதங்களில் குரல் எழுப்புகிறார்கள். நம் நாட்டில் 99% பேர் தற்போது வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளனர். உண்மையான பணமென்றால், கணக்கில் செலுத்தி எடுத்துக்கொள்வதில் எந்தவித சிரமமுமில்லை. இதனை வரவேற்போம்.
டி. சேகரன், மதுரை.

தொல்லைகள்
மக்கள் அனைவருமே கருப்புப் பணம் பதுக்குபவர்கள், கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் என்று கருதுவது மிகவும் தவறானது. பணத்தை மாற்ற இயலாமல் மக்கள் பரிதவித்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் விரலில் அழியாத மை வைக்கும் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. மக்கள் துன்பத்தைத் தவிர்க்க அரசு முயல வேண்டும். தொல்லைகள் தரக்கூடாது.
வலங்கொண்டான், சேலம்.

தவிர்க்க முடியாது
எவ்வளவு தொகை இருந்தாலும் அதை அவரவர் கணக்கில் வரவு வைத்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு சில நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே எடுக்க வேண்டும் என அரசு கூறியிருக்கிறது. நாட்டுக்கு நல்லது நடக்க சில சிரமங்களை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். கருப்புப் பணத்தை ஒழிக்க இதைப் போன்ற சில கட்டுப்பாடுகள் விதிப்பது தவிர்க்க முடியாதது.
கி. தேவி, சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com