19-10-2016 அன்று கேட்கப்பட்ட "முதலமைச்சரும் அமைச்சர்களும் அரசு ஊழியர்கள் அல்ல; அரசியல் பதவி வகிப்பவர்களே என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவி ஏற்கும்போது உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். மக்களுக்குச் சேவை செய்யும் பணிக்காக ஊதியமும், பின்னர் ஓய்வூதியமும் பெறுகின்றனர்.

அரசு இயந்திரம்
முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவி ஏற்கும்போது உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். மக்களுக்குச் சேவை செய்யும் பணிக்காக ஊதியமும், பின்னர் ஓய்வூதியமும் பெறுகின்றனர். அவர்கள் மீது குற்றச்சாட்டுக் கூறவேண்டுமானால், ஆளுநரின் அனுமதி பெறவேண்டும். இவ்வளவு தகுதியும் அரசு ஊழியருக்கு அல்லாமல் அரசியல் பதவி வகிப்பவர்களுக்கா இருக்கிறது? மக்களையும், அரசு அதிகாரிகளையும் நிர்வகிக்கும் உயர்ந்த பொறுப்புள்ள முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் அரசு ஊழியர்களே. அவர்களால்தான் அரசு இயந்திரம் இயக்கப்படுகிறது.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

பொதுவானவர்கள்
அரசின் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் சம்பளம் பெறுவதால் அவர்களும் அரசு ஊழியர்களே. அரசியல் பதவி என்று கூறினால், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சியினர்க்கு மட்டுமா அவர்கள் அமைச்சர்கள்? இல்லையே. ஓர் அரசியல் கட்சி சார்பாக அவர்கள் தேர்நதெடுக்ப்பட்டாலும், ஆட்சியில் அமர்ந்த பிறகு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்கள் பொதுவானவர்களாகி விடுகிறார்கள். ஆகவே அவர்கள் அரசு ஊழியர்களே.
எஸ்.எஸ்.ஏ. காதர், காயல்பட்டினம்.

மக்கள் சேவை
அவர்கள் அரசு ஊழியர்கள் அல்லர். அரசியல் பதவி வகிப்பவர்கள் என்பதே சரி. ஐந்தாண்டு கால மக்கள் சேவைக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசு ஊழியர்கள் ஆகமாட்டார்கள். 58 வயது அல்லது 60 வயது வரை முறையான பணி நியமன ஆணையின் அடிப்படையில், குறிப்பிட்ட கால நேர அளவில் பணியாற்றுபவர்களே அரசு ஊழியர்கள். மக்கள் சேவையில் நேரடியாக பணியாற்றுபவர்களுக்கு விடுமுறைக் காலம் என்று எதுவு மில்லை. அப்படியிருக்க இவர்கள் எப்படி அரசு ஊழியர்கள் ஆவார்கள்?
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

கடமை
முதலமைச்சரும், அமைச்சர்களும், அரசு ஊழியர்கள் அல்ல என்கிற கருத்து சரியல்ல. அவர்கள் அரசு ஊதியம் பெறுவதால் அரசு ஊழியர்களே. தேர்தலில் வாக்களித்தவர்கள் அவர்களிடமிருந்து சமூக மேம்பாட்டிற்கான சேவைகளை எதிர்பார்க்கிறார்கள். எனவே தம் கடமையை உணர்ந்து நற்பணிகளை திட்டமிட்டுச் செய்ய வேண்டும். சீரிய முறையில் மக்கள் நலப் பணியை மேற்கொள்ள வேண்டும். தமது தொகுதிகளுக்கு மட்டுமன்றி மாநிலம் முழுதும் தேவைப்படும் அனைத்துப் பணிகளையும் முடித்துத் தருவது அவர்கள் கடமை. அப்படிப்பட்டவர்கள் அரசு ஊழியர்கள்தானே?
வி.ஜி. லக்ஷ்மி, சென்னை.

ஏன்? ஏன்? ஏன்?
முதலமைச்சரும் அமைச்சர்களும் அரசு ஊழியர்கள் அல்ல அரசியல் பதவி வகிப்பவர்களே என்கிற கருத்து சரியல்ல. அப்படியென்றால் அரசின் உயர் அலுவலகமான தலைமைச் செயலகத்தில் பணியாற்ற அவர்களை அனுமதித்தது ஏன்? அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதித்தது ஏன்? அரசு ஊழியர்களுக்கான ஆணைகளில் கையொப்பமிட அனுமதிப்பது ஏன்? அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்கின்ற கருத்து தவறானதே ஆகும்.
கோ. ராஜேஷ்கோபால், அருவங்காடு.

வரிப்பணம்
முதலமைச்சரும், அமைச்சர்களும் அரசு ஊழியர்கள்தான். என்றைக்கு அவர்கள் மக்கள் வரிப் பணத்திலிருந்து சம்பளமும், பிற சலுகைகளும் பெறத் தொடங்கி விட்டார்களோ அன்றையிலிருந்தே அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசு ஊழியர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் அரசியல் கட்சியை பயன்படுத்தி அரசுப் பதவிக்கு வந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசு ஊழியர்கள் என்பதே சரியாகும்.
கி. சந்தானம், மதுரை.

மக்கள் பிரதிநிதிகள்
அவர்கள் மக்கள் பிரதிநிதிகள். மக்களின் குறைகளையும், தேவைகளையும் அரசின் வழிநின்று நிறைவேற்றுபவர்கள். அரசியல் பதவியில் இருந்தால் மட்டுமே இப்பணியினை செய்ய இயலும். மக்கள் பிரதிநிதியான இவர்கள் சுயநலம் கருதாத பொதுநல நோக்குடையவர்களாக இருக்க வேண்டும். பதவியில் இருக்கும் ஐந்து ஆண்டு காலத்தில் மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்ற வேண்டியவர்கள். ஆகவே இவர்கள் அரசியல் பதவி வகிப்பவர்களே; அரசு ஊழியர்கள் அல்லர்.
பி. ரேணுகா தேவி, குப்பனூர்.

ஜனநாயகம்
முதலமைச்சரும், அமைச்சர்களும் அரசியல் சட்டத்தின் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவியாளர்கள். ஜனநாயகத்தின்படி இவர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் மட்டும்தான். இவர்களால் அரசு ஊழியர்களைப்போல் நீண்ட காலம் பணியில் இருக்க முடியாது. அப்படியிருக்க இவர்கள் அரசு ஊழியர்களாக எப்படி ஆக முடியும்?
இராம. முத்துக்குமரன், கடலூர்.

முக்கோண நிர்வாகம்
அரசு ஊழியர்களை பணி நியமனம் செய்வது அரசு. அவர்களை நிர்வகிப்பவர்கள் துறை அமைச்சர்கள். முதல்வர், அமைச்சர், அரசு ஊழியர்கள் என்பது தொடர் நிர்வாக முக்கோணம். அப்படியிருக்க முதல்வரும் அமைச்சர்களும் மட்டும் அரசு ஊழியர் இல்லை என்பது எப்படி? ஒரு ரூபாய் அரசு சம்பளம் வாங்கினாலும் அவர் அரசு ஊழியரே. அப்படி இருக்க அரசு சம்பளம் வாங்கும் முதல்வரையும் அமைச்சர்களையும் அரசு ஊழியர் இல்லை எனக் கூறுவது தவறானது.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,
வேம்பார்.

நடத்தை விதிகள்
அரசிடம் இருந்து மாத ஊதியமும் இதர படிகளும் பெறுவோர் அனைவரும் அரசு ஊழியர்களே. அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் அவர்களுக்கும் பொருந்தும். எனவே அரசியல் பதவி வகிப்பவர்களே என்ற கருத்து ஏற்புடையதாகாது. அரசியல் பதவி என்பது கட்சிக்கு பொருந்துமே தவிர அரசுப் பணிகளுக்கு பொருந்தாது.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

தொண்டு
இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. இவர்கள் பொதுமக்களின் உண்மையான ஊழியர்கள். இது அரசியல் பதவியல்ல. மக்களுக்கு தொண்டு செய்வதற்கு மக்கள் வழங்கிய நன்கொடை. ஊழல் என்ற சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் பொதுமக்களுக்காக புனிதமான தொண்டாற்ற வேண்டும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

மக்களாட்சி
மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களுக்குச் சேவையாற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆக ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே அரசியல் பதவி என்பது இல்லாததாகி விடுகிறது. மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் போன்று முதல்வர், அமைச்சர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்றனர். மக்களுக்காகச் செயலாற்றும் துறைகளைக் கையாளுகின்றனர். எனவே இவர்கள் அரசு ஊழியர்களே தவிர அரசியல் பதவி வகிப்பவர்கள் அல்லர்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

விதிமுறைகள்
பணி நியமனம், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஆண்டு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பணி ஓய்வு - இவை யாவும் அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகள். ஆனால் அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் ஊதியம் தவிர்த்து வேறு எதுவும் பொருந்தாது. மேலும் அவர்களின் பதவிக் காலம் என்பதும் தேர்தலில் அவர்கள் வெற்றி பெறுவதைப் பொருத்துதான். எனவே அவர்கள் அரசு ஊழியர்கள் என்கிற வாதம் சரியல்ல.
கே. வேலுச்சாமி,
தாராபுரம்.

ஒப்புகைச் சீட்டு
முதலமைச்சரும் அமைச்சர்களும் அரசு ஊழியர்கள் அல்ல, அரசியல் பதவி வகிப்போர் என்பதே சரி. ஒரு குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும் ஒப்புகைச் சீட்டுத்தான் அரசியல் பதவிக்கான பணி. அரசு பதவி அப்படி அல்ல. ஒவ்வொரு துறையைச் சார்ந்த பதவிக்கு கல்வித் தகுதி, ஓய்வு பெறும் வரம்பு உண்டு. முதுமையிலும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளைக் காணலாம். அறுபது வயதைத் தாண்டிய அரசுப் பணியாளர்களைக் காணமுடியாது.
ப. அடைக்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com