'தேர்தலில் போட்டியிடும் வயதை 25-லிருந்து 18-ஆகக் குறைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்தகருத்துகளில் சில...

'தேர்தலில் போட்டியிடும் வயதை 25-லிருந்து 18-ஆகக் குறைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்தகருத்துகளில் சில...

சரியல்ல
தேர்தலில் போட்டியிடும் வயதை 25-லிருந்து 18-ஆக குறைக்க வேண்டும் என்ற கருத்து சரியல்ல. ஒருவருக்கு 19 வயது வயது என்பது இளமைப் பருவம். பருவ வயதிற்கு உரிய குணம், தான் நினைத்ததை எப்படியாவது சாதித்து முடிப்பதுதான். நியாய அநியாயங்களைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். எனவே 18 வயதில் தேர்தலில் போட்டியிடலாம் என்ற கருத்து சரியல்ல.
சீனி. மணி, பூந்தோட்டம்.

அனுபவம்
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓரளவாவது உலக அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். எனவே தேர்தலில் நிற்பதற்கு வயது 25 என்பதே முற்றிலும் சரியானது. இந்தியாவுக்கு அனுபவமும் திறமையும் தொலைநோக்குச் சிந்தனையும் கொண்ட மக்கள் பிரதிநிதிகள்தான் தேவை. ஆகவே தேர்தலில் போட்டியிடும் வயதை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

மிகவும் சரி
இக்கருத்து மிகவும் சரியே. இப்போது அறிவியல் எவ்வளவோ முன்னேற்றமடைந்துள்ளது. கணினி வளர்ச்சியால் இன்றைய இளைஞர்கள் அரசியல் களம் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளனர். எந்த பிரச்னையையும் விருப்பு - வெறுப்பற்று சரியான கோணத்தில் அணுகுகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்கள் அரசியலில் பங்குபெற வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

ஆற்றல்
இக்கருத்து சரியல்ல. 25 வயதானவர்கள் தங்கள் அனுபவத்தால் பெற்றுள்ள ஆற்றலை 18 வயதில் இருப்பவர்கள் நிச்சயமாகப் பெற முடியாது. எனவே 25 வயதில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதே சரி. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அரசியலைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு அதன்பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுதலே சிறப்பு.
வி.எஸ். கணேசன், சென்னை.

சிக்கலான பருவம்
வாக்களிப்பவரைவிட வாக்குகளைப் பெற்று, உறுப்பினராகக் கடமையாற்ற இருப்போருக்கு பொறுப்பு அதிகமல்லவா? 18 வயது என்பது சிக்கலான பருவம் ஆகும். இளங்கலை, முதுகலைப் பட்டம் பெறவே குறைந்தது 22 வயதாகிவிடும். 18 வயதுடையவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களானால் அவர்கள் நடத்துவது விளையாட்டுப் பேரவையாகத்தான் இருக்கும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

விஷப்பரீட்சை
நிர்வாகம் செய்வதற்கும் சிக்கலான சூழ்நிலையில் முடிவுகளை எடுப்பதற்கும் மனப்பக்குவமும் அறிவு முதிர்ச்சியும் தேவை. 18 வயதில் அதை எதிர்பார்க்க முடியாது. ஆர்வக் கோளாறினால் பொது வாழ்வுக்கு வருபவர்கள் திறம்பட செயல்பட இயலாது. எனவே தேர்தலில் போட்டியிடும் வயதை 18ஆகக் குறைக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடயைதல்ல. இது ஒரு விஷப்பரீட்சையாகும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

வெற்றி
இக் கருத்து முற்றிலும் தவறானதாகும். 18 வயதில் வாக்குரிமை கிடைத்ததும் சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களித்தல் முதற்கடமையாகும். அதன் பின்னர் நடைபெறும் சில தேர்தல்களின் அரசியல் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் 25 வயதுக்கு மேல் தேர்தலில் நின்றால் அனுபவம் கைகொடுக்கும். தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

நல்ல வழி
அரசியலில் இருக்கும் முதியவர்கள் இன்னும் ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். அப்படியிருந்தால் எப்பொழுதுதான் இளைய தலைமுறை ஆட்சி செய்வது? ஓட்டுப் போடும் வயதை 18 ஆகக் குறைத்தபின்தான் நாட்டில் பல நல்ல மாற்றங்கள் வரத் தொடங்கின. இளமைப் பருவத்தில் சவால்களை சந்திப்பது மிகவும் சுலபம். இளமைக்கு வழிவிடுங்கள், நல்ல வழி பிறக்கும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

அலட்சியப் போக்கு
25 வயதுதான் தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய வயது. சிந்திக்கும் ஆற்றலுடன் எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பக்குவம் கொண்டதாகவும் அமையும். 18 வயதில் விளையாட்டுத்தனம், வெகுளித்தனம், ஆவேசம் கலந்த அலட்சியப்போக்கு இவைதான் இருக்கும். தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய 25 வயது நிறைந்தவர்களாலேயே முடியும்.
சோம. பொன்னுசாமி, சென்னை.

ஏற்கத்தக்கதல்ல
பதினெட்டு வயதில் சமூக அக்கறையோடு பணியாற்றும் பக்குவம் வராது. விளையாட்டுத்தனமாக இருந்த சிறுவர் பருவத்தைக் கடந்து, வாலிபப் பருவத்தில் நுழைந்திருக்கக்கூடிய வயது. மக்கள் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய உலக விவகாரம் தெளிவாகப் புரியாத நிலையில் இருக்கும் வயது. அந்த வயதில் தேர்தலில் போட்டியிடுவது என்பது ஏற்கத்தக்கதல்ல.
தணிகை மணியன், சென்னை.

நாட்டு நடப்பு
25 வயதில்தான் கல்வித் தகுதியை முழுமையாகப் பெற்றிருப்பார். பொது அறிவு, நாட்டு நடப்பு, அரசியல் தெளிவு அனைத்தும் பெற்றிருப்பர். நாட்டு முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு, உலக நடப்பு இவையும் அறிந்திருப்பர். அப்படிப்பட்டவர்களே சிறப்பாக மக்கள் பணி ஆற்ற முடியும்.எனவே, 25 வயதுக்கு மேல் உள்ளவர்களே போட்டியிட தகுதி படைத்தவராவர்.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

வாய்ப்பு
தேர்தல்களில் போட்டியிட 18 வயது என குறைப்பது சரியே. சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட இது வாய்ப்பாக அமையும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என 18 வயதானவர்களால் முடிவெடுக்க முடியுமென்றால் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஊகிக்கவும் 18 வயதுக்காரர்களால் முடியும்.
சோ. இராமு, திண்டுக்கல்.

சகிப்புத்தன்மை
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற அதிகாரம்மிக்க பதவிகளுக்கே 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அவர்களை நிர்வாகம் செய்ய வேண்டிய எம்.எல்.ஏ.வுக்கோ, அமைச்சருக்கோ 18 வயது இருந்தால் போதும் என்பது சரியல்ல. மக்கள் பணியாற்ற சகிப்புத்தன்மை அவசியம். இந்த வயதில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதனால் வயது குறைப்பு கூடாது.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

அவசியம்
இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுக்குள் தொடர்பு கொண்டு அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொண்டும், தங்கள் கருத்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டும் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மன்றத்தில் இளைஞர்கள் பங்குபெறுவதே சரி. ஆகவே தேர்தில் போட்டியிடும் வயதை 25-லிருந்து 18-ஆகக் குறைக்க வேண்டியது அவசியம்.
டி.வி. சங்கரன், தருமபுரி.

கல்லூரி காலம்
ஒரு நபர் முதுநிலைக் கல்வி பெறுவதற்கே 22 வயது ஆகிவிடும். அதன் பின்னர் ஓரளவு உலக அனுபவம் கிடைப்பதற்கே இரண்டாண்டுகள் தேவைப்படும். எனவே நன்கு விவரமறிந்த நபராக மாறுவதற்கே ஒருவருக்கு 25 வயதாக வேண்டும். 18 வயது என்து கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலம். கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய வயதில் அரசியலில் நுழைந்தால் படிப்பு கெடும்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

மனப்பக்குவம்
ஒரு மனிதனுக்கு அவனது நடுத்தர வயதில்தான் நிறைந்த அனுபவமும் மனப்பக்குவமும் கிடைக்கும். வயது மிக குறைந்தவர்களாலோ, வயது மிக நிறைந்தவர்களாலோ மக்கள் தேவையறிந்து சரியாகச் செயல்படவோ, மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்று சிந்திக்கவோ இயலாது. நாட்டை ஆள மக்களைப் புரிந்து கொள்ளும் திறன் படைத்த 25 வயது நிரம்பியவர்களே தேவை.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com