"அரசு பணிக்கு வரும் டாக்டர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அரசு பணிக்கு வரும் டாக்டர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என்கிற கருத்து வரவேற்கத்தக்கது.

மனநிறைவு

அரசு பணிக்கு வரும் டாக்டர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என்கிற கருத்து வரவேற்கத்தக்கது. இதனால் டாக்டர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். வருமான இழப்பு இருப்பினும் ஏழை மக்களுக்கு உதவினோம் என்ற மனநிறைவு ஏற்படும். கிராமங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றபின் தாங்கள் விரும்புமிடத்திற்கு சென்று பணியைத் தொடரலாம்.
வி.எஸ். கணேசன், சென்னை.

கட்டுப்பாடு
தாங்கள் மருத்துவப் படிப்பிற்கு செலவு செய்த தொகையை நகரங்களில் பணி புரிந்தால் தனியாக கிளினிக் நடத்தி சம்பாதித்துவிடலாம் என்று மருத்துவர்கள் எண்ணுகின்றனர். அதனால்தான் கிராமங்களுக்குச் செல்லத் தயங்குகின்றனர். அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் கிராமங்களில் பணிபுரிந்த பின்னரே விரும்புமிடத்திற்கு மாறுதல் வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

எட்டாக்கனி
கிராமப்புற மக்களின் மருத்துவத் தேவை நிறைவு பெறவில்லை. மருத்துவப் பணியில் மனிதநேயம் தேவை. இன்று மருத்துவப் பணியில் வணிகநோக்கு அதிகரித்து வருவது கவலைக்கு உரியது. உயர் சிகிச்சை என்பது ஏழைகளுக்கு இன்று எட்டாக்கனியாக உள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமத்தில் பணிபுரிதல் வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

அறியாமை
இக்கருத்து சரியல்ல. கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளில் சரியான கழிப்பறைகூட இருப்பதில்லை. இந்நிலையில் மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அங்கு அனுப்பினால் சிகிச்சையில் தவறுகள் ஏற்படும். கிராமத்து மக்கள் அறியாமை காரணமாக நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவரிடம் வருகிறார்கள். அனுபவமற்ற மருத்துவர்களால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது.
கி. சந்தானம், மதுரை.

மரியாதை
காய்ச்சல் வந்தாலே கிராம மக்கள் நகரத்துக்குதான் சிகிச்சைக்கு போக வேண்டி உள்ளது. அவசரச் சிகிச்சை தேவைப்படும்போது கிராம மக்கள் படும் கஷ்டம் சொல்ல முடியாது. எனவே மருத்துவர்கள் கிராமங்களில் சேவை செய்ய வேண்டியது அவசியம். மருத்துவர்களிடம் கிராம மக்கள் காட்டும் அன்பும் மரியாதையும் அவர்களை அங்கேயே தொடர்ந்து இருக்கச் செய்துவிடும்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

வாழ்க்கை நிலை
லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து மருத்துவம் பயின்றவர்கள் அந்தப்பணத்தை விரைவில் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைப்பதில்லை. அவர்கள் போலி மருத்துவர்களை நம்பி உயிரை போக்கிக் கொள்கிறார்கள். கிராமத்தில் பணி புரிந்தால் மருத்துவர்களுக்கு கிராம மக்களின் வாழ்க்கை நிலை புரியும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

அனுபவம்
மருத்துவ படிப்பு முடித்த உடனே மருத்துவர்களை கிராமத்தில் பணிபுரிய விடக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு படிப்பு இருக்கலாம். ஆனால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து அனுபவம் இருக்காது. நோய் முற்றிய நிலையில் வரும் கிராமப்புற நோயாளிகளுக்கு அனுபவம் இல்லாத டாக்டர்களால் எப்படி சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்? எனவே, இந்தக் கருத்து தவறு.
மகிழ்நன், சென்னை.

பயிற்சி
பெரும்பாலான கிராமங்களில் திறமையான மருத்துவர்களும் இல்லை; எல்லா வசதிகளும் நிறைந்த மருத்துவமனைகளும் இல்லை. ஆகவே, அரசுப் பணிக்கு வரும் டாக்டர்கள் கிராமங்களில் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பது சரியே. அது புதிதாக மருத்துவப் பணி புரியும் மாணவர்களுக்கு நல்ல பயிற்சியாகவும் அமையும்.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, வரட்டணப்பள்ளி.

அறப்பணி
மருத்துவப் பணி என்பது மனித உயிர்களைக் காக்கும் அறப்பணி. நகரத்தில் படித்து மருத்துவரானவர்களுக்கு நகரத்து மக்களின் வலியும் வேதனையும் மட்டும்தான் தெரியும். ஆனால் அது மட்டும் தெரிந்தால் போதாது. கிராமத்து மக்களின் வலியும் வேதனையும் தெரிய வேண்டும். அதற்கு அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் கிராமத்தில் கட்டாயம் பணிபுரிய வேண்டும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

வாய்ப்பு இல்லை
கல்லூரியில் படித்து முடித்தவுடன் கிராமத்திற்கு சென்று பணிபுரியும் மருத்துவருக்கு அனுபவம் இருக்காது. கிராமங்களில் படிப்பதற்கு நூலகங்கள் இருக்காது. பிற மருத்துவர்களை சந்திக்கக்கூடிய கூட்டங்களுக்கும் வாய்ப்பில்லை. தான் படித்தை மறந்து போவதுதான் நடக்கும். படித்து முடித்தவுடன் பெரிய மருத்துவமனையில் பணிபுரிந்தவர்களே சிறந்த மருத்துவர்களாகி இருக்கிறார்கள்.
ச.கா. சிதம்பரம், கோவில்பட்டி.

பொருத்தம்
நகர்ப்புறத்தில் வசிக்கும் மனிதர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்கும். ஆனால் கிராம மக்களுக்கு அது எளிதல்ல. தரமான மருத்துவ சேவை அவர்களுக்கும் கிடைக்க வேண்டும். மருத்துவர்கள் தங்கள் சேவையை முதலில் கிராமப்பகுதிகளில் தொடங்குவதே பொருத்தமானதாக இருக்கும்.இதை விரும்பாதவர்களுக்கு அரசு பணி இல்லை என அறிவிக்கலாம்.
சோ. இராமு, திண்டுக்கல்.

கடமை
கிராம மக்களின் நலம்தான் ஒரு நாகரிக சமுதாயத்தின் நலம். நகரத்திற்கு வர முடியாத மக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடி சென்று அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிப்பதுதான் மருத்துவர்களின் தலையாய கடமை. மூடநம்பிக்கையின் காரணமாக உயிரை பணயம் வைக்கும் மக்களை மருத்துவ வசதியளித்துக் காக்க வேண்டியது அரசின் கடமை.
கீர்த்தி. மோகன், கீழவாசல்.

நியாயமற்றது
அரசு பணிக்கு வரும் டாக்டர்கள் எங்கு வேலை பார்த்தாலும் மனித நேயத்துடன் பணியாற்றுவார்கள். இளம் வயது டாக்டர்கள் நிச்சயமாக ஏழை, எளியவர்களுக்கும் கிராம மக்களுக்கும் சேவை செய்ய விரும்புவார்கள். இருப்பினும் அரசு பணிக்கு வரும் டாக்டர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமற்றது.
இரா. துரைமுருகன், தியாகதுருகம்.

உன்னதம்
படிப்பு முடிந்தவுடன் கிராமப்புற மக்களுக்கு பணிபுரியக்கூடிய வாய்ப்பு என்பது உன்னதமானது. கிராமப்புற மக்களுடன் பழகும் வாய்ப்பும், சாதாரண மக்களின் உணர்வுகள், அவர்களின் வாழ்நிலையை புரிந்துகொள்ள வாய்ப்பும் கிட்டும். மேலும் இதனால் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகள் கிட்டும்.
எனவே இக்கருத்து சரியானதே.
சீனி. மணி, பூந்தோட்டம்.

கட்டாயம்
தமக்கு வந்துள்ள நோயின் தன்மை பற்றி அறியாதவர்களே கிராமங்களில் அதிகம். கிராமங்களில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களைவிட, சிகிச்சையின்றி இறப்பர்களே அதிகம். எதுவும் கட்டாயப்படுத்தப்பட்டால்தான் நடக்கும். எனவே அரசுப் பணிக்கு வரும் டாக்டர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என்ற கருத்து சரியானதே.
சி. இராசேந்திரன், மணலி.

உயிர்நாடி
நகரங்களில் வசிப்பவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதி உள்ளது. கிராமத்து மக்கள் சரியான சிகிச்சையின்றி இறக்கின்றனர். இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள்தான். அங்கு இரண்டு ஆண்டுகள் பணிபுரியும்போதுதான் அவர்களின் துயரங்களை உணர முடியும். அரசும் கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நவீன மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com