'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டுமென்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டுமென்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

காத்திருத்தல்
இக்கருத்து சரியல்ல. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழப்பமின்றி எளிதாக வேட்பாளர்களை தேர்வு செய்து வாக்களிக்கலாம். மேலும், வாக்குச் சீட்டு முறையில் செல்லாத வாக்கு விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் வெற்றி - தோல்வி பற்றி அறிந்துகொள்ள நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறை தொடர்வதே சரி.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

காலத்தின் கட்டாயம்
வாக்குச் சீட்டு முறை தேவையற்றது. பாதுகாப்பு, கால விரயத்தைத் தவிர்த்தல் போன்றவற்றைக் கருதி கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அற்புதம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம். தேர்தலில் தோற்றுப் போகும் அரசியல் கட்சிகள் இயந்திரத்தைக் குறைகூறுவதும், வெற்றி பெற்றால் தமது செல்வாக்கு என்று மார்தட்டிக் கொள்வதும் வழக்கமானதே. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் காலத்தின் கட்டாயம்.
கீர்த்தி. மோகன், கீழவாசல்.

அவசியம்
மீண்டும் வாக்குச் சீட்டுமுறை கொண்டு வரப்பட வேண்டியது மிகவும் அவசியம். மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைபெறுவதாக செய்திகள் பரவுகின்றன. ஒரு காலத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறைதான் நடைமுறையில் இருந்தது. அப்போது சரியான முறையில் தேர்தல்கள் நடைபெற்றன. எனவே வாக்குச் சீட்டு முறை மீண்டும் வேண்டும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தேவையற்றது
நாட்டில் எல்லாமே மின்னணுமயமாகி விட்ட நிலையில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை என்பது தேவையற்றது. முடிவுகளை விரைவில் அறிவிக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே சரியானதாகும். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்திப்பவர்கள் மறுவாக்கு எண்ணிக்கையை வற்புறுத்துவார்கள். வாக்குச்சீட்டு முறை என்றால் முடிவுகள் அறிவிக்க காலதாமதமாகும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

சீர்திருத்தம்
வாக்குச் சீட்டு எனும் பழைய முறைக்கு வருவது நல்லதே. வாக்குப்பதிவு காலதாமதம் ஆகும் எனும் கருத்து ஏற்புடையதன்று. மேலை நாடுகளெல்லாம் வாக்குச்சீட்டு முறைக்கு மாறிவிட்டதே. போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற சில சீர்திருத்தங்களை மேற்கொண்டு வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கருத்து வரவேற்கத்தக்கதே.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

பிற்போக்குத்தனம்
மின்னணு இயந்திரத்தில் தவறு நிகழ வாய்ப்பு இருப்பின் அதை தகுந்த நிபுணர்களை கொண்டு சரி செய்ய வேண்டுமே தவிர, மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டு வருவது பிற்போக்குத்தனமானது. வாக்குச் சீட்டுகள் தயாரிப்பதற்காக ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. நேரத்தை மிச்சப்படுத்துவதே விஞ்ஞான வளர்ச்சியின் நோக்கம். நீண்ட வாக்குச் சீட்டு இனி உதவாது.
கி. சந்தானம், மதுரை.

நிராகரிப்பு
வாக்குச் சீட்டுக்கு மாறும் முறை சரியல்ல. அரசியல்வாதிகள் அடிக்கடி தங்கள் நிலையையும், எண்ணத்தையும் மாற்றிக் கொள்பவர்கள். அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்பதற்காக தேர்தல் ஆணையம் பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரக்கூடாது. மின்னணு வாக்குப் பதிவுதான் சரி. அரசியல்வாதிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்.
டி.கே. கங்காராம், கோயம்புத்தூர்.

சந்தேகம்
வாக்குச் சீட்டில் முத்திரையிடும்போது ஏற்படும் நம்பிக்கை ஓட்டு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தும்போது கிடைப்பதில்லை. காரணம் சந்தேகம். மின்னணு இயந்திரத்தை பொருத்தவரையில், நாம் எப்படி அதை செட் பண்ணி வைக்கிறோமோ அப்படித்தான் செயல்படும். ஒப்புகை சீட்டு கிடைத்தாலும், நம் வாக்கு அதே சின்னத்தில்தான் பதிவாகி இருக்கிறது என்பது என்ன நிச்சயம்?
எஸ். மோகன், கோவில்பட்டி.

நம்பகத்தன்மை
மீண்டும் வாக்குச் சீட்டுமுஎறை என்பது தேவையில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது; பாதுகாப்பானது; சிக்கனமானது; கையாள எளிமையாக உள்ளது. யாருக்கும் ஓட்டுப் போட்டோம் என்பதையும் காட்டும் வசதியும் வந்துவிட்டது. தொழில்நுட்ப உலகில் மக்களை அரசு முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். பின்னோக்கிப் பயணிக்கக் கூடாது.
சோ. இராமு, செம்பட்டி.

வாய்ப்பு
இந்தியாவில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கைக்கோத்துக் கொண்டு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டார்கள். இந்தியாவில் பணம் இருந்தால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இயந்திரத்தை இயக்குவது அரசு அதிகாரிகள்தான் எனும்போது இயந்திரத்தில் தவறு நடக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு. உடனடியாக வாக்குச் சீட்டு முறைக்கு திரும்புவதே சரியானது.
த. வேலவன், திருக்கோவிலூர்.

முன்னேற்றப் பாதை
மீண்டும் வாக்குச் சீட்டு முறை தேவையற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில நேரங்களில் கோளாறு ஏற்படுகின்றது. பெரும்பாலான இடங்களில் அவை சரியாகவே இயங்குகின்றன. வாக்கு எண்ணுவதும் மிகவும் எளிதாக அமைகிறது. நாம் இன்னும் முன்னேற்றப் பாதைக்குச் செல்ல வேண்டுமே தவிர, கீழிறங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
சோம. பொன்னுசாமி, சென்னை.

திருப்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வேட்பாளருக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைத்தான் பார்க்க முடியும். ஆனால், வாக்குச் சீட்டு முறையின் மூலம், ஒரு வேட்பாளருக்கு ஒவ்வொரு பகுதியிலும் விழுந்த வாக்குகளைக் கண்டுபிடிக்க முடியும். வாக்காளருக்கும் தாம் விரும்பிய வேட்பாளருக்கே வாக்களித்தோம் என்ற திருப்தியும் ஏற்படும். எனவே, வாக்குச் சீட்டு முறை தேவை.
சி. இராசேந்திரன், மணலி.

அறிவியல் வளர்ச்சி
மின்னணு முறையில் குறைகள் இருப்பின், அக்குறைகள் களையப்பட வேண்டுமே தவிர, அந்த முறையே தவறு என கூறக்கூடாது. இயந்திர முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கோடிக்கணக்கான மரங்களை வெட்டித் தயாரிக்கப்படும் காகிதத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மின்னணு முறையே சிறந்தது. அறிவியல் வளர்ச்சியின் பயன்களை புறந்தள்ளினால் நஷ்டம் நாட்டுக்குத்தான்.
ஆறு. கணேசன், திருச்செந்தூர்.

சரியானது
அண்மையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த சின்னத்தில் விரல் வைத்து அழுத்தினாலும் அது ஒரு குறிப்பிட்ட ஒரு சின்னத்திலேயே பதிவு ஆனது. அதனால் தான் ஒரு குறிப்பிட்ட கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்று பரவலாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சந்தேகங்களை போக்கிட மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்படுவதே சரியானது.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

மாற்றம்
குடவோலை முறையிலிருந்து வாக்குச் சீட்டிற்கு மாறி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும் மாறியுள்ளோம். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமெனில் காலவிரயத்திற்கும், பொருட்செலவிற்கும் இடம் கொடுக்காத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு மாறுவதே சரி. அதே நேரத்தில் அம்முறையில் தவறுகள் நேராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

கண்காணிப்பு
கள்ள ஓட்டு போடப்படுவதைத் தவிர்ப்பதற்குதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல பரிசோதனைக்கு பின்தான் தேர்தல் ஆணையம் இதை தேர்வு செய்துள்ளது. ஆதலால் இந்த முறையையே நாம் கடைபிடிப்பதுதான் சரி. கண்காணிக்க இன்னும் அதிக ஏற்பாடுகளை செய்து மின்னணு இயந்திரங்கள் குறித்து நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
சி.கா. சிதம்பரம், கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com