'பள்ளிகளில் பத்தாம் வகுப்புவரை இந்தி கட்டாயப்பாடம் என பாராளுமன்றக்குழு பரிந்துரைத்திருப்பது ஏற்கத்தக்கதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'பள்ளிகளில் பத்தாம் வகுப்புவரை இந்தி கட்டாயப்பாடம் என பாராளுமன்றக்குழு பரிந்துரைத்திருப்பது ஏற்கத்தக்கதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்தகருத்துகளில் சில...

ஏற்கத்தக்கதல்ல
இது ஏற்கத்தக்கதல்ல. யாரையும் கட்டாயப்படுத்தி மொழியை கற்பிக்க முடியாது. வட இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயமாக பேசப்படாதபோது, இந்தி பேசப்படாத தென் இந்திய மாநிலங்களில் இந்தி மொழியை கட்டாயமாக்குவது எப்படி சரியாகும்? இதனால் மீண்டும் மொழிப் பிரச்னை உருவாகும். இந்தப் பரிந்துரையால் வேறு எந்தப் பயனும் இல்லை.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

உறவு
இந்தியை விருப்பப் பாடமாக கொண்டு வரலாமே தவிர, கட்டாயப் பாடமாக கொண்டுவரக்கூடாது. இது மாநிலங்களில் தேவையற்ற எதிர்ப்புகளை ஏற்படுத்தும், வடபுலத்தார் தமிழகத்தில் பல முக்கிய தொழில்களில் ஈடுபட்டுள்னர். நம்மவர்களும் அவர்களுடன் இணைந்து பணி புரிகிறார்கள். இந்த உறவு கெட்டுவிடும். இந்தி பேசும் மாநிலங்களில் தமிழை கட்டாயப் பாடமாக்க முடியுமா?
உ. இராசமாணிக்கம், கடலூர்.

வேலைவாய்ப்பு
இந்தியை தமிழன் படிப்பதால் தமிழ் மொழியின் தரம் தாழ்ந்துவிடாது. கூடுதலாக ஒரு மொழியை அறிவதால் அறிவு மேம்படுமே தவிர, குறையாது. தமிழ்நாட்டைத் தவிர, மற்ற மாநில மக்கள் அனைவரும் இந்தியைக் கற்கிறார்கள். இதனால், அவர்களால் இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எளிதில் வேலைவாய்ப்பைப் பெற முடிகிறது. எனவே இந்த யோசனை ஏற்கத்தக்கதே.
சி. இராசேந்திரன், மணலி.

அடையாளம்
ஏற்கெனவே, இந்தியை கட்டாயப் பாடமாகக் கொண்டு இயங்கிவரும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் பெருகி வருகின்றன. இப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்ப் பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். மாநில மொழிக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடம் என்கிற பரிந்துரை, மொழித் திணிப்பின் அடையாளமே.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

தவறென்ன?
நமது அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றில் எல்லாப் பள்ளிகளும் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. நமது மாநிலத்தில் ஆங்கில வழிப் பாடத்திட்டம் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்ச், ஜப்பான் போன்ற மொழிகளை விருப்பப் பாடமாக மாணவர்கள் எடுத்துப் படிக்கின்றனர். இதேபோல் இந்தியையும் கற்றுக்கொள்வதில் தவறென்ன?
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

முறையல்ல
மாணவர்களாயினும் பள்ளிப் படிப்பை முடித்தவர்களாயினும் விரும்பிய மொழியை படிக்கலாம். அதற்கு யாரும் தடை போட முடியாது. விருப்பமும், ஈடுபாடும் உள்ளவர்கள் எந்த மொழியையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதே நேரத்தில் பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள விருப்பமற்றவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அது முறையல்ல. இந்தியை கட்டாயமாக்கக் கூடாது.
பொன் நடேசன், சின்ன அய்யம்பாளையம்.

அறிவுடைமை
பிற மொழிகளைக் கற்பதென்பது வளமான வாழ்க்கைக்குத்தானே தவிர தாய்மொழியை அழிப்பதற்கல்ல. இதனை நன்கு உணர்ந்துகொண்டு நாம் இந்தி மொழியைக் கற்பது அறிவுடைமையாகும். ஆனால், ஒரு மொழியைக் கற்க வேண்டுமென்று கட்டாயபடுத்துவது தவறு. தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவதாக ஒரு மொழி அவசியம் என நாம் உணர வேண்டும்.
கீர்த்தி. மோகன், தஞ்சாவூர்.

தேவையல்ல
மொழி என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. இதைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். இந்தி படிக்காததால் தமிழகத்துக்கு வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது என்று சொல்லிவிட முடியாது. எனவே இந்தப் பிரச்னை தேவையில்லை. மத்திய அரசு இதுபோன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்.

பட்டியல்
இந்தியை கட்டாயம் ஆக்கக்கூடாது. மெட்ரிக் பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் இந்தி படிக்கத்தானே செய்கிறார்கள். கட்டாயப் பாடம் எனும்போது அடுத்து வரும் தேர்வுகளிலும் அதைக் கட்டாயமாக்கி, அதில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயமாக்கப்படும். உயர்கல்வி மத்திய அரசுப் பட்டியலில் இருப்பதும் இந்த இந்தித் திணிப்பிற்கு ஒரு காரணமாகும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

இறையாண்மை
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்காக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது தமிழுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை நிலைபெற வேண்டும். இந்தி கட்டாயப் பாடம் என்ற கொள்கை ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. மத்திய அரசு இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தடுமாற்றம்
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் தமிழகத்தில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நமது இளைய தலைமுறையினர் இந்தியை கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் வட மாநிலங்களில், ஏன், இதர தென் மாநிலங்களிலும்கூட செல்லும்போது பிறரோடு உரையாட முடியாமல் தடுமாறுகின்றனர். எனவே இந்தி மொழியை விருப்பப் பாடமாக்க வேண்டும்.
டி.கே. கங்காராம், கோயம்புத்தூர்.

சர்வாதிகாரம்
பல்வேறு மொழிகள் பேசும் நம் நாட்டில் ஒருசில மாநிலங்களில் மட்டும் பேசப்படும் மொழியை இந்தியா முழுவதும் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கினால் அது மொழி சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியை மட்டும் அனைவரும் கற்க வேண்டும் என்பது தவறு. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பு இதனால் பாதிக்கப்படும்.
பி. செல்வம், நாகப்பட்டினம்.

காலத்தின் கட்டாயம்
எந்த மொழியையும் அந்த மொழி பேசாத மாநில மக்களின்மீது திணித்து வளர்த்துவிட முடியாது. தற்போதே மத்திய அரசு நிறுவனங்கள், அஞ்சல் அலுவலங்கள், ரயில் நிலையங்கள், வங்கிகளில் எல்லாவற்றிலும் இந்தியின் ஆதிக்கம்தான் நிலவுகிறது. மாநில அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளைக் களைந்து இந்தித் திணிப்பை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

பேதைமை
ஒரு மனிதன் பல மொழிகளைக் கற்றுக் கொள்வதால் தவறு எதுவுமில்லை. தாய்மொழிப் பற்று இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது பேதைமை. தமிழ் மொழியைக் கற்று தமிழனாக வாழ்வது சிறப்பு. இந்தியும் கற்று இந்தியனாக வாழ்வது மிகவும் சிறப்பு. எனவே இந்த யோசனை வரவேற்கத்தக்கது.
ஷியாம் ராஜா, பொய்யப்பாக்கம்.

அலையாத்திக் காடு
இந்தியைக் கற்பதை விருப்ப பாடமாக வைக்கலாம். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்பது ஒரு மொழி திணிப்பு. சர்வாதிகாரப் போக்கு. இந்தியாவில் ஆங்கிலம் என்னும் பேரலையை எதிர்கொள்ள மாற்றுவழி இந்தி அல்ல, அவரவர் தாய்மொழி என்னும் அலையாத்திக் காடுகள்தான். எனவே, இந்தி கட்டாயம் என்கிற முடிவு ஏற்கத்தக்கது அல்ல.
த. வேலவன், திருக்கோவிலூர்.

பரிந்துரை
அன்று காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்ததைதான் இன்று நடைமுறைப்படுத்துகிறோம் என்று காரணம் கூறுகிறது மத்திய அரசு. பரிந்துரைத்த காங்கிரஸ், மக்கள் விரோதத்தைச் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்த மாத்திரத்தில் இந்த யோசனையைக் கிடப்பில் போட்டது. மத்திய அரசின் இந்தித் திணிப்பு தமிழகத்தில் தொடருமெனில் குஜராத்தி மொழிகூட வருங்காலத்தில் கட்டாயப் பாடமாகலாம்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com