'இந்தியாவுக்கு தேசியக்கொடி போன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனிக்கொடி தேவை என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'இந்தியாவுக்கு தேசியக்கொடி போன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனிக்கொடி தேவை என்கிற கருத்து சரியா?'

மதிப்பு
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனிக்கொடி என்ற நிலை ஏற்பட்டால், தேசியக் கொடி அதனுடைய மதிப்பை இழந்துவிடும். மொழியால் மாநிலங்கள் வேறுபட்டாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற பரந்த எண்ணம் மக்களிடம் நிலைத்திருக்கவும் தேசியக்கொடி ஒன்றே போதும். மாநிலங்களுக்கு தனிக்கொடி தேவையற்றது.
ம. ஜோசப்லாரன்ஸ்,
சிக்கத்தம்பூர்பாளையம்.

குழப்பம்
நமது நாடு மொழிவாரி மாநிலங்களாக பிரிந்துள்ள நிலையில், மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகி, பிராந்திய உணர்வில் குறுகிப்போய் உள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனிக்கொடி என்று ஆகிவிட்டால் தேசிய உணர்வு எனபது முற்றும் இல்லாது போய்விடும். நமது பாரதம் என்ற பெருமை அறவே போய்விடும். தனிக்கொடிகளால் குழப்பமே மிஞ்சும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

அடையாளச் சின்னம்
இக்கருத்து சரியே. கொடி என்பது ஓர் அடையாளச் சின்னம். வணிகத் துறையில் இருக்கும் 'டிரேட் மார்க்' எனப்படும் வியாபாரக் குறி போன்றது. புதிய கட்சியைத் தொடங்குவோர்கூட முதலில் அறிமுகம் செய்வது கொடியையே. மாநிலத்தின் சிறப்புகளையும், தனித்தன்மையையும் உள்ளடக்கியதாக கொடியின் இலச்சினையை அமைக்கலாம். எனவே, மாநிலங்களுக்குத் தனிக்கொடி தேவை.
கி. பாஷ்யம், சலுப்பை.

மக்களாட்சி
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனிக்கொடி என்பது தேவையற்றது. மன்னர்கள் ஆட்சி செய்தபோது தனித்தனி கொடிகளை வைத்து இருந்தனர். தற்போது மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடந்துவருகிறது. இப்போது ஒரே நாடு என்ற சிந்தனை பரவலாகத் தோன்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் மாநிலங்களுக்கு தனிக்கொடி என்ற யோசனை தேவையற்றது.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

நாட்டுப்பற்று
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக்கொடி கொடுத்தால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு சீர்குலைவு உண்டாக வாய்ப்புண்டு. காவிரி நதிநீர்ப் பங்கீடு, காஷ்மீர் பிரச்னை போன்றவை இன்றும் தீர்வு காணாத பிரச்னைகளாக உள்ளன. மாநிலக் கொடிகள் வந்தால் தேசியக்கொடி தனது தனித்தன்மையை இழக்கும். நாட்டுப்பற்றுடன் இந்தப் பிரச்னையை அணுகுதல் நன்று.
பைரவி, புதுச்சேரி.

அடையாளம்
நம் இந்திய தேசத்திற்கு ஒரே கொடியாகத் தேசியக்கொடி இருப்பதுதான் நாம் இந்தியர் என்பதற்குச் சிறந்த அடையாளம். இன்றைய நிலையில் மாநில எல்லைப்பகுதிகள், நதிகள் போன்ற இயற்கை வளங்களையே எல்லா மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளாமல் தங்களுக்கே உரிமை என்று பேசி வருகின்றனர். இந்நிலையில் மாநிலத்திற்குத் தனிக்கொடி தேவை இல்லை.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

தவறில்லை
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனிக்கொடி தேவைதான். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்டதாக பாரத நாடு விளங்குகிறது. முற்காலத்தில் சேரர், சோழர், பாண்டிய மன்னர்கள் தனித்தனி கொடிகளுடன் இத்தமிழ் நாட்டில் ஆட்சி புரிந்துள்ளனர். எனவே, வில், கயல், புலி படங்களைக் கொண்டதாக ஒரு தனிக்கொடியைத் தமிழ்நாட்டிற்கு உண்டாக்குவதில் தவறில்லை.
இராம. கோவிந்தன், தென்னிலை.

பிரிவினை
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனிக்கொடி என்பது, தேவையற்ற குழப்பங்களுக்கு காரணமாகிவிடும். இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்கெனவே தனிநாடு கோரிக்கையை முன்வைத்து பல தீவிரவாத இயக்கங்கள் போராடி வருகின்றன. இந்நிலையில் மாநில தனிக்கொடிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தால், அது பிரிவினைக்கு அரசே வழிவகுப்பதாக அமைந்துவிடும்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

பெருமை
இந்தியா பெரிய தேசமாக ஒரு கொடியின் கீழ் இருப்பதுதான் நமக்குப் பெருமை. இதுதான் உலக அளவில் நமக்குப் பெருமையைத் தேடித்தந்துகொண்டிருக்கிறது. ஒரு சில மாநிலங்களில் தனிநாடு கோரிக்கை உருவாகி, தற்போதுதான் ஓரளவு அடங்கி உள்ளது. இந்த நேரத்தில் தனிக்கொடி என்று கூறினால், தனிநாடு என்கிற கோரிக்கை வலுவடைந்து விடும். ஒற்றுமையே பலம்.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்.

சீர்குலைவு
மாநிலங்களுக்கு தனிக்கொடி அடையாளம் கேட்பது தேசியத்தைச் சீர்குலைக்கும் முயற்சி. தனி மாநிலம், மாநிலங்களுக்கு அதிக உரிமை, சிறப்புச் சலுகைகள் இவற்றின் ஒரு கிளைதான் மாநிலங்களுக்குத் தனிக்கொடி என்பதும். அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளின் ஆட்சியால் வந்த கேடுகளையும் விபரீதங்களையும் இன்னும் நாம் புரிந்து கொள்ளாதது வேதனைக்குரியது.
ச. கந்தசாமி, சிந்தலக்கரை.

அவசியம்
இந்தக் கருத்து சரி. இந்தியாவுக்கென்று தேசியக் கொடியும் மாநிலத்திற்கென்று ஒரு கொடியும் இருப்பதுதான் நல்லது. அரசு சார்பில் பயணம் செய்பவர்கள் இந்திய கொடியுடன்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாது. எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கு தனித்தனி கொடி இருப்பது அவசியமாகும்.
தொ. எழில்நிலவன், களமருதூர்.

சமத்துவம்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக்கொடி என்று வரும்போது குறுகிய எண்ணம், பகைமை, எல்லைப் பிரச்னை, மொழி வெறி, நிர்வாகச் சிக்கல்கள் இவையெல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காலம் செல்லச் செல்ல தனிநாடு வேண்டும் என்று நாட்டைத் துண்டாடும் மனப்பான்மை மேலோங்கும். நம் நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் சிறந்து விளங்க ஒரு கொடியின் கீழ் நாடு இருப்பதே நல்லது.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

தேசியம்
அரசியல் கட்சிகளுக்குத் தனித்தனிக் கொடிகள். பல்வேறு மதங்களுக்கு, சாதியச் சங்கங்களுக்கு, சமயங்களுக்கு, தொழில் நிறுவனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எனக் கொடிகளின் வகைகள் இந்தியாவில் ஏராளம் ஏராளம். இதனையடுத்து ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் தனக்கெனக் கொடி வேண்டுமெனக் கேட்டால் 'தேசியம்' என்பதற்குப் பொருளில்லாமல் போய்விடும்.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

ஒற்றுமை
பல மாநிலங்கள் சேர்ந்ததுதான் இந்திய நாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கென பிரத்யேக பண்புகள் உண்டு. அந்தப் பண்புகளைப் பிரதிபலிக்கும்விதமாக மாநிலத்திற்கென தனிக்கொடி இருக்கலாம். இதனால் நாட்டின் ஒற்றுமை கெட்டுவிடும் என்பது ஏற்க முடியாத வாதம். எழுபது ஆண்டுகளாக ஒரே தேசியக் கொடிதான் இங்கே உள்ளது. அதனால் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமா?
கி. சந்தானம், மதுரை.

சர்ச்சைகள்
இந்தியா என்றைக்கு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே சர்ச்சைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. எல்லைப் பிரச்னை தொடங்கி நதிநீர்ப் பிரச்னை வரை இன்றும் தீர்ந்தபாடில்லை. அப்பொழுதெல்லாம் இன அடையாளம்தான் தலை தூக்குகிறதே அன்றி தேச அடையாளம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இப்படியிருக்க மாநிலத்திற்கு தனிக்கொடி தேவையற்றது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

கண்கூடு
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனிக்கொடி தேவை என்கிற கருத்து முற்றிலும் தவறானதாகும். உலக அரங்கில் இந்தியா இன்று மிகப்பெரிய ஜனநாயக நாடாக மதிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்கள் என்பவை இந்தியா என்ற வலிமை பெற்ற முழு உடலின் உறுப்புகள்என்ற எண்ணம் நமக்கு வேண்டும். மேலும் தனிக்கொடி என்பது தேச ஒற்றுமையைக் கெடுக்கும் என்பது கண்கூடு.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com