'பொறியியல் கல்வியில் 'அரியர்ஸ்' முறை நீக்கப்படுவதால் கல்வித்தரம் மேம்பாடு அடையும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'பொறியியல் கல்வியில் 'அரியர்ஸ்' முறை நீக்கப்படுவதால் கல்வித்தரம் மேம்பாடு அடையும் என்கிற கருத்து சரியா?

இலக்கு
பொறியியல் கல்வியில் அரியர்ஸ் முறை நீக்கப்படுவது ஒருவகையில் ஆக்கபூர்வமானதே. பொறியியலின் அடிப்படை எதுவும் தெரியாமல் கடைசி வருடம் வரை வந்து பின்பு எப்படியோ அரியர்ஸ் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள். இதனால் தற்போது படிப்பை முடித்து வெளிவரும் பொறியியல் மாணவர்களிடம் அடிப்படை ஆற்றல்கூட இருப்பதில்லை. இந்த அரியர்ஸ் முறை நீக்கப்பட்டால் நன்கு படித்து எப்படியாவது முதல் முறையே தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்ற இலக்கு இருக்கும். இதனால் கூடுதல் கவனத்துடன் பாடங்களை முனைவார்கள்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

தீர்வு
அரியர்ஸ் முறை கட்டாயம் தேவை. அதை நீக்கினால் கிராமப்புற மாணவர் பாதிக்கப்படுவர். புற்றீசல் போல எல்லா ஊர்களிலும் தொடங்கப்பட்டுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை தரமுயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படிப்பில் மந்தமான நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்லூரியிலே தனி சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்து அரியர்ஸ் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண வேண்டும்.
பைரவி, புதுச்சேரி.

எதிர்விளைவு
பொறியியல் கல்வியில் அரியர்ஸ் முறை நீக்கப்படுவதால் கல்வித்தரம் மேம்பாடு அடையும் என்கிற கருத்து மிகவும் தவறானதாகும். இது எதிர்விளைவையே உருவாக்கும். தோல்வி என்பது இயல்பானது. ஆனால், நிரந்தரமானது அல்ல. இப்போதெல்óலாம் பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்கள் காலியாகவே உள்ளன. அக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுமை பெற்று, மாணவர்கள் பயனடைவதற்கு அரியர்ஸ் முறை தொடர்ந்து நீடிப்பதே பயன்தரும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

கடமை
பொறியியல் கல்வி மாணவர்கள் ஆண்டுத் தேர்வில் தேர்ச்சியுறாத பாடங்களை பின்னர் இடைத்தேர்வுகளில் எழுதி தேர்ச்சி பெறலாம் என்ற நிலை இருந்தது. இப்போது அரியர்ஸ் முறை நீக்கப்படுவதால் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் பொறுப்பாகப் படித்து மொத்தப் பாடங்களிலும் முதல் முறையே தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். மாணவர்களை ஊக்குவித்து அந்த நிலைக்கு அவர்களை உந்தச் செய்வது கல்லூரிகளின் தலையாய கடமையாகும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

கவனம்
பொறியியல் கல்வியில் அரியர்ஸ் முறை நீக்கப்படுவதால் நன்மைதான் விளையும். ஒரு பாடம் பெயிலானால் பரவாயில்லை, அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மாணவர்களின் மனநிலை மாறும். அனைத்துப் பாடத்திலும் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த செமஸ்டர் செல்ல இயலும் என்ற நிலை வருவதால் எல்லாப் பாடங்களிலும் கவனம் செலுத்தி நன்கு படிக்க ஆரம்பிப்பார்கள். கல்வியில் அலட்சிய நிலை மாறி ஆர்வம் ஏற்படும். இது வளர்ச்சிதானே!
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

எதிர்காலம்
இக்கருத்து சரியே. பொறியியல் மாணவனுக்கு ஒவ்வொரு பருவத் தேர்விலும் வெற்றி பெற்று அரியர்ஸ் இல்லாமல் பட்டம் பெறும் உணர்வில்லை. ஏழைப் பெற்றோரும் கடன் பெற்றும், சொத்துகளை விற்றும் தங்கள் பிள்ளைகளை சிறந்த பொறியாளர்களாக்க எண்ணுகிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்திடும் வகையிலேயே மாணவர்களின் செயல்பாடு உள்ளது. எனவே அரியர்ஸ் முறை நீக்கப்படுவது மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும்.
இராம. கோவிந்தன், தென்னிலை.

மாயை
பொறியியல் கல்வியில் அரியர்ஸ் முறை நீக்கப்படுவதால் கல்வித்தரம் மேம்படும் என்பது ஒரு மாயையே. அரியர்ஸ் முறையிலேயே பலவித குழப்பங்கள் நிலவுகின்றன. அரியர்ஸ் விடைத்தாளை கட்டணம் கட்டி மறு மதீப்பீட்டிற்கு அனுப்பும்போது அந்த அரியர்ஸ் சரி செய்யப்பட்டு விடுகிறது. அப்படி என்றால் மாணவன் சரியாக எழுதியும் திருத்திய பேராசிரியர் அதனை கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. கல்வித் துறையில் எந்த மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் ஒரு குழு அமைத்து அந்த மாற்றம் சரியானதா என்பதை அலசி ஆராய வேண்டும். அப்போதுதான் திட்டத்தில் உள்ள நன்மை, தீமை புலப்படும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

எப்படி?
இந்தக் கருத்து தவறானது. பொறியியல் கல்லூரியில் படிப்பவர்களில் கிராமப்புற மாணவர்களே அதிகம். அவர்களில் பலர் குடும்ப சூழ்நிலையால் அரியர்ஸ் வைக்க நேரிடும். அதை எழுதி பின்னர் வெற்றி பெறுவார்கள். அரியர்ஸ் நீக்கப்படுவதால் கல்வித்தரம் எப்படி மேம்பாடு அடையும்? திறமையான மாணவர்கள்கூட சிலநேரம் தேர்வில் தோற்பதுண்டு. இம்முடிவால் கல்வித்தரம் கீழ்நோக்கிப் போகும் என்பதே உண்மை.
தமிழ்யாழினி, களமருதூர்.

வாய்ப்பு
அரியர்ஸ் என்பது நல்ல முறையில் படிக்காமல் தேர்வில் தோல்வி பெறும் மாணவர்க்கு நடத்தப்படுவது. அரியர்ஸ் இருந்தால் மீண்டும் அந்தப் பாடங்களைப் படித்து தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்கள். அதனால் கல்வியின் தரம் குறையாது. அரியர்ஸ் முறையை நீக்கிவிட்டால் கல்வித்தரம் நிச்சயம் மேம்பாடு அடையாது. முதல் தடவையே நன்கு கற்று தேறி வரும் மாணவர்களைப் பற்றி கவலை இல்லை. சராசரிக்கும் கீழான கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கட்டாயம் அரியர்ஸ் எழுதும் வாய்ப்பை வழங்க வேண்டும். அரியர்ஸ் முறையை நீக்கக் கூடாது.
கலைப்பித்தன், கடலூர்.

காரணம்
பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் அரியர்ஸ் வைப்பதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். கற்பித்தல் திறன், கற்கும் திறன், கல்லூரிகளின் தரம், மாணவர்களின் உடல்நிலை கோளாறு என பல காரணங்கள் உள்ளன. எனவே அவற்றை முழுமையாக ஆராயாமல் அரியர்ஸ் முறை நீக்கப்படுவதால் மாணவர்களின் எதிர்காலம் கட்டாயமாக பாதிக்கப்படும். எனவே அரியர்ஸ் முறை நீக்கப்படுவது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

வழிவகை
பொறியியல் கல்வியில் இன்றைய நிலையில் பருவத் தேர்வுகளில் முழுமையாகத் தேர்ச்சி பெறுபவர் எண்ணிக்கை குறைவே. அவர்களும் பொறியாளர் பட்டம்பெற, ஒவ்வொரு தாளாக எழுதித் தேர்ச்சி பெறுகின்றனர். இவ்வாறு தேர்வு பெற்றாலும் வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் நேர்முகத் தேர்வு நடத்திவிட்டு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்றே கூறுகின்றன. தேர்வில் அரியர்ஸ் முறை நீக்கப்பட்டால் கவனமாகப் படித்துப் பட்டப்படிப்பை முடிக்க வழிவகை பிறக்கும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

பயிற்று மொழி
இக்கருத்து சரியானதே. மாணவர்களுக்குத் தேர்வின் முக்கியத்துவம் புரியும். தேவையற்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க உதவும். பெரும்பான்மை மாணவர்கள் அரியர்ஸ் வைப்பது பயிற்றுமொழி வேறுபாட்டால்தான். தமிழ்வழிக் கல்வி முடித்தவர்கள் ஆங்கிலவழிக் கல்விக்கு மாறுகையில் புரிந்து கற்பதில் சிரமப்படுகிறார்கள். அரியர்ஸ் ரத்து ஆனதால் முயற்சியெடுத்து கவனம் செலுத்திப் படித்து மாணவர் தேர்வை எதிர்கொள்வார்கள்.
ச. கந்தசாமி, சிந்தலக்கரை.

பழைய முறை
ஏற்கெனவே பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்துவிட்டன. இதனால் நல்ல மாணவர்கள் நிறைய மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவப் படிப்பின் பக்கமும் சுமார் ரகத்தை சார்ந்தவர்கள் கலைக் கல்லூரி படிப்பின் பக்கமும் சென்றுவிட்டனர். இதில் அரியர்ஸ் முறையையும் தற்பொழுது மாற்றிவிட்டால் பொறியியல் படிப்புக்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் கணிசமாக குறைந்துவிடும். எனவே பழைய முறையே தொடர வேண்டும்.
க. சுல்தான் ஸலாஹுத்தீன்,
காயல்பட்டினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com