'மருத்துவ மேற்படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்கிற உத்தரவு சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'மருத்துவ மேற்படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்கிற உத்தரவு சரியா?'

பொருத்தம்
மருத்துவ மேற்படிப்பை முடித்தவர்களும் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்பது சரியானதே. அரசு மருத்துமனைகள் கிராமப்புறங்களில்தான் அதிகம். அரசு மருத்துவர்கள் மேற்படிப்பை தொடர கிராமப்புற பணி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்போது படிப்பை முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்பது பொருத்தமே!
அ. கருப்பையா, பொன்னமராவதி.

வாய்ப்பு
மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் வேலை பார்ப்பதால் பலதரப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து தேர்ந்த மருத்துவராக முடியும். ஒருவகையில் இது ஒரு நல்ல வாய்ப்பே. மேலும் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களை எப்படி நடத்துவது என்கிற நிர்வாகத்திறனையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

மிகவும் சரி
இந்த உத்தரவு மிகவும் சரியே. மருத்துவர்களை உருவாக்க அரசு லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்கின்றது. அவ்வாறு அரசு பணத்தில் உருவாகும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்துவிடுவதால் ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பான, தரமான சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே மேற்படிப்பு முடித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

கடமை
ஏழை, எளிய நோயாளிகள் பலரும் அரசு மருத்துவமனையை நாடித்தானே வருகிறார்கள். அத்தகைய நோயாளிகளின் நோயையும் வேதனையையும் தீர்ப்பதை மேற்படிப்புப் படித்த மருத்துவர்கள் கடமையாகக் கொள்ள வேண்டும். தாங்கள் மருத்துவராவதற்குப் பெரிய தொகையைச் செலவு செய்திருக்கிறோம் என்று எண்ணாமல் மக்களுக்கு கடமை ஆற்றுகிறோம் என்று எண்ண வேண்டும்.
இராம. கோவிந்தன், தென்னிலை.

கட்டாயம் கூடாது
உத்தரவு சரியில்லை. ஏனெனில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முதல்வர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவர்களின் சேவை தேவைப்படும். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவைப்படுவார்கள். எதிலும் கட்டாயம் கூடாது.
எஸ். நாகராஜன், சென்னை.

சமூகப்பணி
ஒருவர் மருத்துவராவதற்கு மத்திய, மாநில அரசுகள் செலவழிக்கும் பணம் பல லட்சங்களாகும். அதைக் கருத்தில் கொள்ளாமல் படித்து முடித்ததும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு பலரும் வெளிநாடு செல்கின்றனர். மருத்துவ மேற்படிப்பை முடித்தபின் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினால் ஏழைகளின் துயர்துடைத்தலே சமூகப்பணி என்பதை உணர்வர்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

பட்டறிவு
மருத்துவ மேற்படிப்பை முடித்தவர்கள் அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு சரியே. மருத்துவப் படிப்பு முடித்தவுடன் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் அரிய வாய்ப்பு கிட்டும். ஏழை, எளிய மக்கள் படும்பாட்டினை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும் படிப்பறிவை மெருகேற்றத் தேவையான பட்டறிவும் கிட்டும்.
சீனி. மணி, பூந்தோட்டம்.

வரிப்பணம்
மருத்துவ மேற்படிப்பிற்காக அரசு பல லட்சங்கள் செலவிடுகிறது. மக்களின் வரிப்பணத்தில்தான் அவர்கள் படித்து மருத்துவராகின்றனர். சமுதாயத்தில் பலரின் பங்களிப்புடன்தான் நாம் வாழ்கிறோம். மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் அவர்களுக்காக இரண்டாண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிவது சேவையல்ல, அது அவர்களின் கடமையாகும்.
தி.ரெ. ராசேந்திரன், திருநாகேச்சுரம்.

ஒத்திகை
இந்த உத்தரவு மிகவும் சரியானதுதான். அரசாங்கத்தின் உதவி பெற்று மேற்படிப்பை முடித்தவர்கள் அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதால் நல்ல பயிற்சியும் தொழிலில் அனுபவமும் கிடைக்கும். ஒரு நாடகம் வெற்றி பெற ஒத்திகை பார்ப்பதுபோல, இந்த இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைப் பணி அமையும். இது பயனுள்ள உத்தரவுதான்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

வற்புறுத்தல்
கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் பணியாற்றுவது அவசியம்தான். மருத்துவர்கள் மட்டுமல்லாது அரசின் எல்லாச் சலுகைகளையும் பெற்று, கல்வி கற்று, பணியில் சேர்ந்தவர்கள் அனைவருமே (அனைத்துத் துறைசார்ந்த பணியாளர்களும்) அரசுத் துறையில் கட்டாயம் பணியாற்ற வேண்டுமென அரசு வற்புறுத்த வேண்டும். இப்படி நடந்தால் நல்லது.
ச. கந்தசாமி, சிந்தலக்கரை.

புகலிடம்
இந்தக் கருத்து சரியானது. இந்தியா போன்ற ஏழைகள் மிகுதியாக உள்ள நாட்டில் அரசு மருத்துவமனைகள்தான் நோயுற்ற ஏழை மக்கள் பலருக்கும் புகலிடமாக இருக்கின்றன. ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவ வசதி என்பது ஓர் அடிப்படை தேவை. அதை உறுதிப்படுத்த மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களும் தங்கள் பங்களிப்பை வழங்குதல் நல்ல நடைமுறையாகும்.
வி.எஸ். கணேசன், சென்னை.

சிறப்பு
மருத்துவம் என்றாலே சேவை என்றுதான் பொருள். கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. மருத்துவ மேற்படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் குறிப்பாக கிராமங்களில் பணியாற்றுவது சிறப்பு. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதன் மூலம், வறுமைகோட்டிற்கு கீழே இருப்பவர்களின் ஆரோக்கியம் குறித்து நன்கு அறிந்துகொள்ள முடியும்.
என். சண்முகம், திருவண்ணாமலை.

பற்றாக்குறை
பெரும்பான்மையான மருத்துவர்கள் கிராமப்புறங்களுக்குச் செல்ல விரும்புவதில்லை. இதனால் கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

மனநிலை
பல அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லை என்பது நாம் நன்கு அறிந்த ஓர் உண்மை. இந்நிலையில் அரசு எடுத்துள்ள இம்முடிவு வரவேற்கக்கூடியது. முதுநிலை மருத்துவப் படிப்பு பெற்ற மருத்துவர்கள் தாங்களே விரும்பி அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற முன்வர வேண்டும். அதற்கேற்ப தங்கள் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

ஏழை நாடு
தனியார் மருத்துவமனையில் மருத்துவரை சந்திப்பதற்கான கட்டணத்தைச் செலுத்தக்கூட இயலாத நிலையில் உள்ள ஏழைகள் நிறைந்த நாடு நமது நாடு. எனவே மேல்படிப்பு படித்து முடித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இவர்களுடைய மருத்துவ அறிவு மற்றும் திறமை ஏழைகளுக்கு ஓரளவேனும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தவறில்லை
செல்வந்தர்கள் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியும். ஏனெனில், அங்கு பிரசவத்திற்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் முன்பணம் செலுத்த வேண்டும். மேல்படிப்பு முடித்த மாணவர்கள் எதிர்காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கக்கூடியவர்கள். இவர்கள் இரு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணி செய்வதில் தவறில்லை.
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com