'பள்ளிக்கூடங்களில் யோகாவை கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'பள்ளிக்கூடங்களில் யோகாவை கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

முழுத்தகுதி
பள்ளிக் கூடங்களில் யோகாவை நிச்சயம் பாடமாக வைக்க வேண்டும். பள்ளிச் சிறார்களுக்கு உடல் நன்றாக வளையும் தன்மையுடன் இருப்பதாலும், உணவால் கிடைக்கும் ஆரோக்கியத்தால் அல்ல யோகா மூலம்தான் அவர்களின் உடல் முழுத்தகுதியைப் பெற முடியும் என்பதாலும் யோகாவை பள்ளிகளில் கட்டாயப்படுத்துவது மிக நல்லது. விருப்பப்பட்டவர்கள் பயிலலாம் என்றால் யாரும் பயில மாட்டார்கள்.
எஸ்.வி. ராஜசேசகர், சென்னை.

புத்தகப் புழு
இன்றைய மாணவர்கள் பெரும்பாலும் புத்தகப் புழுவாகவே உள்ளார்கள். அன்றைய காலம்போல மாலை நேரத்தில் வெளியே சென்று விளையாடுவதில்லை. மேலும் எந்நேரமும் கையிலே செல்லிடப்பேசிதான். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மிக மோசமாக சீர்கெடுகிறது. யோகாவால் மாணவர்களின் உடலும் மனதும் சீரடையும்.
வன்னை செ.வ. மதிவாணன்,
கள்ளக்குறிச்சி.

பாடச்சுமை
பள்ளிக்கூடங்களில் யோகாவை கட்டாயமாக ஆக்க வேண்டுமென்ற கருத்து சரியானதல்ல. தற்பொழுதே பாடச்சுமை அதிகமாக உள்ளது. யோகா என்பது ஒருவகையான உடற்பயிற்சிதான். இதற்கென்று தனியாக வகுப்புகள் நடத்தத் தேவையில்லை. பள்ளிகளில் உள்ள விளையாட்டு பாடத்திட்டத்தை ஒழுங்காக நடத்தினாலே, யோகாவால் வரும் பலன் கிடைக்கும்.
பூ.சி. இளங்கோவன், அண்ணாமலை நகர்.

பேதைமை
யோகா என்பது ஜாதி, மதங்களைக் கடந்து உடம்புக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடிய ஒரு பயிற்சி. சிலர் யோகாவை ஒரு மதத்திற்கானதாக சித்திரித்துக் காட்டுவது பேதைமை. அது எந்த மதத்திற்கானதும் அல்ல. மனித குலத்துக்கானது. அதனைப் பள்ளிகளில் கற்பிப்பது நல்லது. ஆனால், யோகாவை கட்டாயப் பாடமாக இல்லாமல் விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம்.
வானவில் மூர்த்தி, சென்னை.

மனநலம்
இந்தக் கருத்து சரியே. யோகா வகுப்புகளில் யோகப் பயிற்சி முறைகள் கற்றுத்தரப்பட்டால் மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் கிடைக்கும். யோகா, நோயைக் கட்டுப்படுத்துவதோடு உடலை புத்துணர்ச்சியுடனும் வைக்கும். மாணவர்கள் எவ்வித செலவுமின்றி உடல் நலத்தையும் மனநலத்தையும் பேண முடியும். சிறு வயதிலிருந்தே யோகாவை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
க. பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை.

ஆர்வம் தேவை
பள்ளிகளில் யோகாவை கட்டாயப் பாடமாக்க வேண்டிய அவசியமில்லை. நடுத்தர வயதுடையவர்கள் வேண்டுமானால் யோகாவை பயிலலாம். மாணவர்களிடையே யோகாவை வலிந்து திணிக்க முடியாது. ஆர்வமுடையவர்களால்தான் யோகக் கலை வளரும். வலுப்பெறும். பள்ளியில் யோகாவை கட்டாயப்படுத்த வேண்டாம்.
பொன் நடேசன்,
சின்ன அய்யம்பாளையம்.

கண்கூடு
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஒரு மாணவன் உடல் நலம் பெற்றிருந்தால்தான் அவனின் அன்றாடச் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெறும். உடல் நலம் காக்கப்படுவதற்கு யோகப் பயிற்சி முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது கண்கூடு. மாநில அரசு யோகப் பயிற்சி முறையை பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்த வேண்டும். சுவரின்றி சித்திரம் எழுதிட இயலாது.
இராம. கோவிந்தன், தென்னிலை.

சரியல்ல
யோகாவை பள்ளிகளில் கட்டாயப்பாடமாக மாணவர்களிடம் திணிப்பது என்பது சரியல்ல. விளையாட்டு, கிராப்ட், இசை போன்ற வகுப்புகள் பள்ளிகளில் பாடமாக இருந்தாலும் அவ்வகுப்புகள் வேறு ஏதாவது சிறப்புப் பாடங்கள் கற்பிக்கத்தானே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. யோகாவிற்கும் அக்கதி நேர்ந்துவிடக் கூடாது. எனவே யோகாவை விருப்பமுள்ளவர்கள் கற்கலாம்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

முழு மனிதன்
யோகாவை கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்கிற கருத்து சரியே. இதனால் மாணவர்களது உடலும், மனமும் பலம் பெறுகின்றன. யோகா கற்பதால், தன்னம்பிக்கை, ஆரோக்கியம், சுறுசுறுப்பு, மனவலிமை, நல்லொழுக்கம் ஆகியவை பெருகுகின்றன. ஒழுங்கான யோகப் பயிற்சி ஒவ்வொரு மாணவனையும் முழு மனிதனாக ஆக்க வல்லது. மாணவப் பருவத்திலேயே யோகப் பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

நன்மைகள்
பள்ளிகளில் யோகாவைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். மாணவர்களுக்கு அதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் திறன் வளரும். பாடங்கள் மட்டுமின்றி, பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் யோகா வழிவகுக்கும். யோகப்பயிற்சி செய்வதால் எல்லா வகையிலும் நன்மைகளை கிடைக்கும்.
எழில் சோம. பொன்னுசாமி,
சென்னை.

கல்வித் தரம்
இக்கருத்து முற்றிலும் தவறானதாகும். இக்காலப் பள்ளிக்கூடங்கள் குருகுலக் கல்வி முறையில் அமையவில்லை. பள்ளிகளில் தாய்மொழியே (தமிழ்) மிகவும் தடுமாற்றத்தில் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலமே இன்னும் கோலோச்சுகிறது. பாடங்களின் சுமையும் மிகவும் அதிகம். பாடத்திட்டத்தில் உள்ள உடற்கல்விப் பயிற்சிகளே மாணவர்களுக்குப் போதுமானவை.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தவறில்லை
இது வரவேற்கத்தக்கது. யோகா உடல் வலிமை, மனவலிமையைத் தரக்கூடியது. உடல் வலிமை நன்றாக இருந்தால்தான், நோய் வராமல் காத்துக்கொள்ள முடியும். பாடங்களையும் நன்றாகக் கற்கலாம். யோகாவால் நரை, திரை வருவதுகூட தள்ளிப்போகும். மாணவர்களுக்கு இவ்வித நல்ல பயன்களைத் தரும் யோகாவை கட்டாயப் பாடமாக வைப்பதில் தவறில்லை.
வை. பாவாடை, புதுச்சேரி.

புத்துணர்ச்சி
கடந்த காலத்தில் பள்ளிக்கூடங்களில் கட்டாய வகுப்பாக விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் இருந்தன. இப்போதெல்லாம் அந்த வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. மேலும் இன்றைய மாணவர்கள் பாடங்களின் அழுத்தத்தினால் இயந்திரமயமாகி விட்டார்கள். அதுமட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப பெருக்கத்தால் அக்கருவிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அதிலிருந்து மீண்டு புத்துணர்ச்சி பெற யோகா கட்டாயம் என்பது சரியே.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

உடற்பயிற்சி
மாணவர்களுக்கு முறையான உடற்பயிற்சி அளித்தாலே போதுமானது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் யோகப் பயிற்சியை விரும்புகின்றனர். மாணவப் பருவத்தினர்க்கு அதனைக் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. மேலும் அறைக்குள்ளே செய்ய வேண்டிய யோகப் பயிற்சியை மாணவர்கள் ஒன்றுகூடிக் கற்க வேண்டியதில்லை.
அ. கருப்பையா,
பொன்னமராவதி.

மனவளக் கலை
யோகா என்பது ஒருவகை மனவளக் கலை. இந்த மனவளக் கலையை சிறார் பருவத்திலேயே பழக்குவது நல்லது. எளிதில் கற்று அதனைத் தொடர்ந்தால் மனமும் எளிதாகும், உடலும் ஆரோக்கியம் பெறும். பரபரப்பான மாணவப் பருவத்தில் சிறிது நேரம் ஒதுக்கி யோகா பயிற்சி செய்வது அவர்கள் உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லது. என்றாலும் அதனைச் கட்டாயப்படுத்தக்கூடாது.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

அவசியம்
தற்பொழுது பள்ளிகளில் மாணவர்கள் ஓடியாடி விளையாடுவது கிடையாது. இதனால் அவர்கள் உடல் வலிமை குறைந்தவர்களாகவே உள்ளனர். எனவே அதற்கு ஈடாக, யோகாவை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கினால், மாணவ - மாணவிகள் உடல்நலம் பெறுவர். அத்துடன் அவர்களின், மனநலமும் நன்றாக இருக்கும். எனவே யோகாவை கட்டாயப் பாடமாக்குவது அவசியம்.
டி.கே. கங்காராம், கோயமுத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com